அமீரக செய்திகள்

அபுதாபியில் இலவச பார்க்கிங் அறிவிப்பு..!! ஈத் விடுமுறை முடியும் வரை இந்த சேவைகளுக்கு கட்டணம் கிடையாது…

ஈத் அல் பித்ர் விடுமுறையின் போது, அபுதாபி குடியிருப்பாளர்கள் இலவசமாக பார்க்கிங் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று எமிரேட்டின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (Integrated Transport Centr – ITC) நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது. எனவே, அபுதாபியில் வசிப்பவர்கள் ஏப்ரல் 20ஆம் தேதி தொடங்கி ஈத் விடுமுறை முடியும்வரை இலவச பார்க்கிங் வசதியை அனுபவிக்கலாம்.

ITC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அபுதாபி முழுவதும் மவாகிப் (Mawaqif) பார்க்கிங் நாளை முதல் ஈத் விடுமுறை முடியும் வரை இலவசம். அதுபோல, முசாஃபா பகுதியில் உள்ள கனரக வாகனங்கள் பார்க்கிங்கிற்கான கட்டணங்களும் ஈத் விடுமுறையில் இலவசம். மேலும், டார்ப் (Darb) டோல் கேட் அமைப்பும் நாளை முதல் விடுமுறை முடியும் வரை இலவசமாக இருக்கும். ஈத் விடுமுறைக்குப் பிறகு, காலை 7 மணி முதல் 9 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை என டோல் கேட் கட்டணம் மீண்டும் செயல்படுத்தப்படும்.

இந்நிலையில், நியமிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்வதைத் தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளுக்கு ITC அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன் பார்க்கிங் மண்டலங்களில் முறையாக வாகனங்களை நிறுத்தவும், இரவு 9 மணி முதல் காலை 8 மணி வரை ரெசிடென்ட் பார்க்கிங் எனப்படும் குடியிருப்பு பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்கள் ITC இன் இணையதளம், Darbi மற்றும் Darb இணையதளங்கள் மற்றும் மொபைல் ஆப்கள் மற்றும் TAMM தளத்தின் வழியாக ITC இன் சேவைகளுக்கு ஆன்லைனில் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். மேலும், வாடிக்கையாளர்கள் 24/7 சேவைகளைப் பெற, நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் ஒருங்கிணைந்த சேவை ஆதரவு மையத்தை 800850 அல்லது 600535353 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பொது பேருந்து சேவைகளை பொருத்தவரை, அபுதாபி எமிரேட்டில் பேருந்துகள் வழக்கமான அட்டவணையின்படி செயல்படும் என்றும், தேவைக்கேற்ப பேருந்து பயணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அபுதாபி எக்ஸ்பிரஸ் மற்றும் அபுதாபி இணைப்பு பேருந்து சேவைகள் விடுமுறை நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!