அமீரக செய்திகள்

அபுதாபி பிக் டிக்கெட் டிராவில் கிராண்ட் பரிசை வென்ற இந்தியர்!! 20 மில்லியன் திர்ஹம் பரிசை தட்டிச் சென்ற அதிர்ஷ்டசாலி…

அபுதாபியில் நடைபெற்ற பிக் டிக்கெட் டிரா தொடர் எண் 250-இல் இந்திய நபர் ஒருவர் கிராண்ட் பரிசை வென்று 20 மில்லியன் திர்ஹம்களுக்கு உரிமையாளர் ஆனார். இந்தியாவில் உள்ள பெங்களூர் நகரத்தைச் சேர்ந்த அருண் குமார் வடக்கி கொரோத் என்பவர், கடந்த மார்ச் 22 அன்று வாங்கிய தனது டிக்கெட் எண் 261031 மூலம் கிராண்ட் பரிசை வென்றுள்ளார்.

அருண் குமாரின் வெற்றி குறித்து அவருக்கு தெரிவிக்க நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரிச்சர்ட் என்பவர், அருணுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்த போது, அவர் அமைதியாகி அழைப்பை துண்டித்ததுடன் தொலைபேசி எண்ணையும் பிளாக் செய்துள்ளார்.

தனது நண்பர்களிடம் பிக் டிக்கெட் பற்றி கேள்விப்பட்டு ஆன்லைனில் டிக்கெட் வாங்கிய அருண், இரண்டாவது ஷாட்டிலேயே பிக் டிக்கெட் டிராவின் கிராண்ட் பரிசை வென்றதாக வந்தச் செய்தியைக் கேட்டதும் நம்ப முடியாமல் திகைத்துள்ளார். இருப்பினும், அவர் கிராண்ட் பரிசை வென்றதை மீண்டும் உறுதிப்படுத்த மற்றொரு எண்ணில் இருந்து அவருக்கு டயல் செய்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து அருண் கூறுகையில், இந்த டிக்கெட்டை இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகையின் கீழ் வாங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போது, முழங்கால் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருண், ஒரு தொழிலைத் தொடங்க வேண்டும் என்ற தனது நீண்ட காலக் கனவை சாதிக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து பஹ்ரைனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுரேஷ் மாதன் என்பவர், இரண்டாவது பரிசாக 100,000 திர்ஹம்களை வென்றுள்ளார். அவர் மார்ச் 27 அன்று வாங்கிய டிக்கெட் எண் 018462 அவரது வெற்றிக்கு வழிவகுத்துள்ளது.

மேலும் மூன்றாவதாக, ஓமனை தளமாகக் கொண்ட இந்திய நாட்டவர் முகமது ஷெஃபீக் என்பவர் 90,000 திர்ஹம்களை தட்டிச் சென்றார். அவர் டிக்கெட் எண் 333142 ஐ மார்ச் 28 அன்று வாங்கியுள்ளார். எனவே, பிக் டிக்கெட் டிராவின் அடுத்தடுத்த மூன்று பரிசுகளையும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களே வென்றுள்ளனர் என்பது வியக்க வைக்கிறது.

லைவ் டிராவின் போது பத்து ரொக்கப் பரிசுகளில் எட்டு மற்றும் ரேஞ்ச் ரோவர் ‘ட்ரீம் கார்’ ஆகியவற்றைப் பெற்ற இந்திய நாட்டினருக்கு இது ஒரு அதிர்ஷ்டமான இரவு என்றே கூறலாம். மேலும், டிக்கெட்டுகளை வாங்க விரும்புபவர்கள் பிக் டிக்கெட்டின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ அல்லது அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கடைகளில் உள்ள கவுண்டர்கள் மூலமாகவோ ஆன்லைனில் வாங்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!