அமீரக செய்திகள்

துபாயில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!! ஈத் பண்டிகையை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட துபாய் போலீஸ் நடவடிக்கை….

துபாயில் ஈத் அல் பித்ரின் பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான கொண்டாட்டத்தை உறுதிசெய்ய தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது. ஷவ்வால் பிறை வெள்ளி அல்லது சனிக்கிழமைகளில் தொடங்கும். இந்நிலையில், துபாய் காவல்துறை அதன் கூட்டாளர்களுடன் ஒருங்கிணைந்து ஈத் கொண்டாட்டங்களுக்கு பாதுகாப்பு அளிக்க தயாராக இருப்பதாக செயல்பாட்டு விவகாரங்களுக்கான உதவித் தளபதியும், நிகழ்வுகள் பாதுகாப்புக் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் அப்துல்லா அலி அல் கைதி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், துபாய் காவல்துறையின் பாதுகாப்புத் திட்டத்தில் நகரம் முழுவதும் உள்ள மசூதிகள் மற்றும் பெருநாள் தொழுகை நடைபெறும் பெரிய தொழுகை மைதானங்களை பாதுகாப்பது, அனைத்து சாலைகளிலும் ரோந்து பணியில் ஈடுபடுத்துவது மற்றும் முக்கிய பகுதிகள், சுற்றுலா தலங்கள், வணிக மையங்கள் மற்றும் திறந்த சந்தைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பது ஆகியவை அடங்கும்.

ஈத் கொண்டாட்டத்தில் பாதுகாப்பை வலுப்படுத்த துபாய் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது:

  • 66 போக்குவரத்து சார்ஜென்ட்கள்
  • 798 தனியார் பாதுகாப்பு பணியாளர்கள்
  • துபாய் கடற்கரைகளில் 165 உயிர்காப்பாளர்கள்
  • 14 கடல் பாதுகாப்பு படகுகள்
  • 123 ஆம்புலன்ஸ்கள்
  • 738 துணை மருத்துவர்கள்
  • 10 மீட்பு படகுகள்
  • 4,387 போலீஸ் அதிகாரிகள்
  • 29 சைக்கிள் ரோந்து
  • 465 பாதுகாப்பு ரோந்து
  • 75 சிவில் பாதுகாப்பு வாகனங்கள்
  • 24 சிறிய கிரேன்கள்

இவற்றுடன் 24/7 அவசரகால அறிக்கைகளைப் பெறுவதற்கு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் தயார்நிலையையும் அல் கெய்தி உறுதிப்படுத்தியுள்ளார். இந்த மையம் சிறப்புப் போலீஸ் குழுக்களின் விரைவான வருகையை உறுதிப்படுத்தும்.

மேலும், அவசரநிலை அல்லாத வழக்குகளுக்கு 901 என்ற எண்ணையும், அவசரநிலைக்கு 999 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஏதேனும் அத்துமீறல்கள் இருந்தால் துபாய் போலீஸ் செயலி மூலம் ‘போலீஸ் ஐ’ சேவையைப் பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், சாலைகளில் வேக வரம்புகளை கடைபிடிக்கவும், அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவும், பொது இடங்கள் மற்றும் கடற்கரைகளில் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளவும் அல் கெய்தி பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பண்டிகைக் காலத்தில் தீக்காயங்கள் மற்றும் நிரந்தர ஊனத்திற்கு வழிவகுக்கும் பட்டாசுகளுடன் விளையாட குழந்தைகளை அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர் குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!