அமீரக செய்திகள்

மனைவிக்கு விஷம்.. குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொலை.. கொலைக்கு பின் தற்கொலை செய்த இந்தியரின் பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்..!!

கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 28) 35 வயதான இந்தியர் ஒருவர் ஷார்ஜாவில் அமைந்துள்ள அல் புஹைரா அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடத்தின் 11வது மாடியிலிருந்து குதிப்பதற்கு முன்பு தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொன்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. தற்போது, அந்த தற்கொலை மற்றும் கொலை வழக்கின் விசாரணையின் முதற்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையை ஷார்ஜா காவல்துறை வெளியிட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்த தீவிர விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கொலை நடந்த இடத்தில் கணவன் மனைவிக்கு விஷம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இரண்டு குழந்தைகளின் கழுத்தில் கழுத்தை நெரித்த காயங்கள் காணப்பட்டதாக தடயவியல் விசாரணையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் மனைவி மற்றும் குழந்தைகளின் உடலில் வன்முறை தாக்குதல் தொடர்பான காயங்கள் மற்றும் அறிகுறிகள் எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து ஷார்ஜா காவல்துறையின் கமாண்டர்-இன்-சீஃப் மேஜர் ஜெனரல் சைஃப் அல் ஜாரி அல் ஷம்சி அவர்கள் கூறுகையில், அந்த நபர் ஷார்ஜாவில் வசித்துக் கொண்டே அண்டை எமிரேட்டில் பணிபுரிந்தவர் என்றும், அத்துடன் அவரது தற்கொலை மற்றும் கொலைக்குப் பின்னணியில் அந்த நபருக்கு எந்தவிதமான நோக்கங்களும், நிதி நெருக்கடிகளும் இல்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், காவல்துறைக்கு சரியாக செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் அழைப்பு வந்ததை அடுத்து காவல்துறையினர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாகக் கூறியுள்ளார். அத்துடன், தற்கொலை செய்து கொண்ட நபரின் உடலில் இருந்து ஒரு கடிதம் கண்டெடுக்கப்பட்டதாகவும், அதில் தனது மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் கொன்றதாகக் கூறி, அவர்களின் உடல்களை மாடியிலிருந்து மாற்றுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்படுவதாக வாக்குமூலம் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு, அவர்களின் சடலங்களை மீட்க பொது வழக்கறிஞரிடம் அனுமதி பெற்ற காவல்துறையினர் அடுக்குமாடி குடியிருப்பின் கதவை உடைத்து, இறந்தவர்களின் சடலங்களை உடனடியாக மீட்டு  பிரேத பரிசோதனை நடவடிக்கைகளுக்காக தடயவியல் ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், விசாரணை அறிக்கை பொது வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டதும் இறந்தவர்களின் சடலங்கள் அவர்களது நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அதிகாரிகள் அதிர்ச்சிமிக்க சம்பவத்திற்கான முழு காரணங்களையும் கண்டறியும் நோக்கில், மனைவியின் நண்பரை விசாரணை செய்து, அவரிடம் வாக்குமூலத்தைப் பெற அழைத்துள்ளனர். இதுவரை இந்த குற்றத்திற்கான காரணத்தை காவல்துறையினர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!