அமீரக செய்திகள்

அமீரகத்தில் புதிதாக ஒரு நபருக்கு Mers-CoV தொற்று உறுதி..!! நோயின் அறிகுறி, சிகிச்சை மற்றும் வைரஸ் பரவல் பற்றிய விளக்கங்களை வழங்கிய WHO….!!

அமீரகத்தில் உள்ள வரு நபருக்கு மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் (Mers-CoV) எனும் வைரஸ் பாதிப்பானது ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நோய்த்தொற்று பாதிப்புள்ள விலங்குகளின் மூலம் மனிதருக்கு பரவும் இந்த வைரஸ் தொற்றானது கடும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு மரணத்தையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என கூறப்படுகின்றது. தற்பொழுது அபுதாபியில் உள்ள அல் அய்ன் நகரைச் சேர்ந்த 28 வயது நபருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 8 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நோயாளி, ட்ரோமேடரி (dromedary) வகை ஒட்டகங்கள், ஆடுகள் அல்லது செம்மறி ஆடுகளுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு கொண்ட வரலாறு எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட நபர் எமிராட்டி அல்லாதவர் மற்றும் சுகாதாரப் பணியாளரும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், ஜூன் 21 அன்று நோயாளியிடம் இருந்து நாசோபார்னீஜியல் ஸ்வாப் (nasopharyngeal swab) சேகரிக்கப்பட்டு ஜூன் 23 அன்று PCR மூலம் Mers-CoV தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்யப்பட்டதாக WHO கூறியுள்ளது.

வைரஸ் பாதிப்பு வேறு யாருக்கும் பரவாமல் இருப்பதை உறுதி செய்ய, நோயாளியுடன் தொடர்பு கொண்ட 108 நபர்களையும் அடையாளம் கண்டு 14 நாட்களுக்கு அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். இன்று வரை இரண்டாம் நிலை பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சாத்தியமான பாதிப்புகளை அடையாளம் காண கண்காணிப்பு நடவடிக்கைகளை அபுதாபி பொது சுகாதார மையம் (ADPHC) வலுப்படுத்தியுள்ளதாகவும் WHO அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

அமீரகத்தில் முதல் Mers-CoV நோய்த்தொற்று ஜூலை 2013 இல் பதிவு செய்யப்பட்டது. அதனையடுத்து தற்போதைய புதிய தொற்று உட்பட மொத்தம் 94 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளும் 12 இறப்புகளும் பதிவாகியுள்ளன. 2012 முதல் உலகளவில் WHO க்கு அறிவிக்கப்பட்ட Mers-CoV நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 2,605 ஆகும், இதில் 936 உயிரிழப்புகளும் அடங்கும்.

Mers-CoV வைரஸ் என்றால் என்ன?

Mers-CoV என்பது ஜூனோடிக் வைரஸ் ஆகும், இது மனிதர்களுக்கு கடுமையான பாதிப்பை உண்டாக்கி மரணத்தை ஏற்படுத்தும். WHO இன் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட நோயாளிகளில் சுமார் 35 சதவீதம் பேர் உயிர் பிழைக்கவில்லை என கூறப்படுகின்றது.

இத்தொற்று, பாதிக்கப்பட்ட ட்ரோமெடரி ஒட்டகங்களுடன் நேரடி அல்லது மறைமுக தொடர்பு மூலம் மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. இருப்பினும் பரவுவதற்கான சரியான காரணம் தெளிவாக தெரியவில்லை என்று WHO தெரிவித்துள்ளது.

தொற்று அறிகுறிகள்:

Mers-CoV தொற்று ஏற்பட்டிருந்தால், காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பொதுவான அறிகுறிகளும் கடுமையான சுவாச நோய் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட இரைப்பை குடல் அறிகுறிகளும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், வயதானவர்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் சிறுநீரக நோய், புற்றுநோய், நுரையீரல் நோய், உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற நாட்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு இந்த நோய்த்தொற்றானது கடுமையாக பாதிப்பை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.

தடுப்பூசி மற்றும் சிகிச்சை முறை ஏதேனும் உள்ளதா?

இந்த கடுமையான தொற்றுக்கு தற்போது குறிப்பிட்ட தடுப்பூசி மற்றும் சிகிச்சை முறை இல்லை. இருப்பினும், சில குறிப்பிட்ட தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் கிளினிக்கல் டெவலப்மென்ட்டில் உள்ளன.

இது சுவாச செயலிழப்பை ஏற்படுத்தும் என்பதால், நோயாளிக்கு முதலில் மெக்கானிக்கல் வெண்டிலேஷன் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படும். குறிப்பாக, நோயாளியின் மருத்துவ நிலையை அடிப்படையாகக் கொண்டே சிகிச்சை அளிக்க முடியும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

பெரும்பாலும், விலங்குகள் இருக்கும் பண்ணைகள், சந்தைகள், கொட்டகைகள் போன்ற இடங்களுக்குச் செல்லும் எவரும், விலங்குகளைத் தொடுவதற்கு முன்பும் பின்பும் வழக்கமான கைகளைக் கழுவுதல் உட்பட பொதுவான சுகாதார நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும், மேலும் நோய்வாய்ப்பட்ட விலங்குகளுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று WHO அறிவுறுத்தியுள்ளது.

பால் மற்றும் இறைச்சி போன்ற விலங்குகளிடமிருந்து பெறப்படும் பொருட்களை முறையாக சமைக்காமல் பச்சையாக உட்கொள்வதால், நோய்க்கிருமிகளால் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம். ஆகவே, சமைத்து சாப்பிடுமாறு வலியுறுத்தப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!