அமீரக செய்திகள்

மலை உச்சியில் தலைகுப்புற கவிழ்ந்த கார்… உடன் பிறந்தவர்களை காப்பாற்றி தன்னுயிரை துறந்த 21 வயது பெண்.. சவூதியில் நடந்த துயர சம்பவம்..!!

சவுதி அரேபியாவில் மலைப்பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 21 வயதான பெண், தனது உடன்பிறந்தவர்களை காப்பாற்றி விட்டு தனது உயிரை துறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த பெண் ரீமா மன்னா ரஷீத். இவர் தனது குடும்பத்தினருடன் விடுமுறையை கழிப்பதற்காக ரிஜால் அல்மா மாகாணத்தில் உள்ள ஹஸ்வா என்ற கிராமத்திற்கு சென்றிருக்கிறார். ஹஸ்வா செல்லும் வழியில், மலை உச்சியில் அவர்கள் சென்ற கார் பழுதடைந்திருக்கின்றது.

ரீமாவின் தந்தையும், மூத்த சகோதரர் ரஷீத் ஆகிய இருவரும் காரை விட்டு வெளியேறி பழுதடைந்ததற்கான காரணத்தை அறிய முற்பட்டிருக்கின்றனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக சில நிமிடங்களில், கார் மலைப்பகுதியில் சரியத் தொடங்கியிருக்கின்றது.

அப்பொழுது ரீமா விரைவாக முற்பட்டு தனது உடன் பிறந்தவர்களை காரில் இருந்து வெளியேற்றியிருக்கிறார். ஆனால் கடைசியாக அவரை காப்பாற்றிக் கொள்ளும் முன் கார் மலையிலிருந்து உருண்டு விபத்துக்குள்ளாகி இருக்கின்றது.

இது பற்றி அவரது தந்தை கூறும் பொழுது, “ரீமா காரின் கதவிற்கு மிக அருகில் இருந்ததால் எளிதில் தப்பித்திருக்கலாம், ஆனால் தனது உயிரை விட தன் சகோதரர்களின் உயிரை முதலில் காப்பாற்ற நினைத்ததால் தனது உயிரைத் துறந்து உடன்பிறந்தவர்களின் உயிரை காப்பாற்றி எங்களுக்கு கடவுளாக மாறி இருக்கின்றாள்” என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.

மேலும் “தன் உயிரை பொருட்படுத்தாமல் உடன் பிறந்தோரின் உயிரைக் காப்பாற்றியதால் காலத்திற்கும் எங்கள் குடும்பத்தில் அவள் என்றும் நிலைத்திருப்பாள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குடும்ப உறவினரான யாஹ்யா அல் ஜராய் இந்த சோகமான நிகழ்வைப் பற்றி கூறும்போது “ரிமா, தனது குடும்பத்தின் மீதான அன்பிற்கும், அவர்களுக்கான தியாகத்திற்கும் பெயர் பெற்றவர். தனது உடன்பிறப்புகளுக்கு ஒரு தாயாக மாறி செயல்பட்டிருக்கிறார். தனது கடைசி மூச்சு வரை அவர்களைப் பாதுகாத்திருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

விபத்தில் சிக்கிய கார் மலைப்பகுதியில் 400 மீட்டருக்கு மேல் இருந்து கீழே விழும் போது மூன்று முறை கவிழ்ந்தது என கூறப்பட்டுள்ளது. கீழே விழுந்ததில் ரீமா தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் நிகழ்வதற்கு முன் கோடை விடுமுறை முடிந்து கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் புதிய வேலையைத் தொடங்கும் முடிவில் ரீமா இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்த 21 வயதான பெண்ணின் துணிச்சலான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!