அமீரக செய்திகள்

வேலையின்மை காப்பீடுத் திட்டத்தின் கீழ் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பணியாளர்கள் பதிவு!! அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஜனவரி 2023 இல் வேலையின்மை காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து தற்பொழுது வரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ளதாக மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MoHRE) அறிவித்துள்ளது. மேலும், தொழிலாளர்கள் அனைவரும் ஜூன் 30, 2023க்குள் இந்த கட்டாயத் திட்டத்தின் கீழ் சேர வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் 400 திர்ஹம்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சர் டாக்டர் அப்துல்ரஹ்மான் அல் அவார் அவர்கள் கூறுகையில், இந்தத் திட்டம் தொழிலாளர் சந்தையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், அமீரகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இது ஒரு உந்துதலாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், வேலையின்மை காப்பீட்டுத் திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள் திட்டத்தில் இருந்து பயனடையவும், முதலாளிகள் தங்கள் ஊழியர்களை சந்தா செலுத்த ஊக்குவிக்கவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த திட்டம் மத்திய அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள ஊழியர்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முதலீட்டாளர்கள், அவர்கள் பணிபுரியும் இடங்களின் உரிமையாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், தற்காலிக வேலை ஒப்பந்தத்தில் உள்ள ஊழியர்கள், 18 வயதுக்குட்பட்ட சிறார்கள், புதிய வேலையில் சேர்ந்தவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் உள்ளிட்ட சிலருக்கு சந்தா செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திட்டத்தின் காப்பீடு இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது அடிப்படைச் சம்பளம் 16,000 திர்ஹம்ஸ் மற்றும் அதற்குக் குறைவாக உள்ளவர்களை உள்ளடக்கியது. இந்த வகையில் காப்பீடு செய்யப்பட்ட பணியாளருக்கான காப்பீட்டு பிரீமியமானது மாதத்திற்கு 5 திர்ஹம் (ஆண்டுக்கு 60 திர்ஹம்) மற்றும் மாதாந்திர இழப்பீடு 10,000 திர்ஹம் என வரையறுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது பிரிவில் அடிப்படை சம்பளம்16,000 திர்ஹம்களுக்கு மேல் உள்ளவர்களும் அடங்குவர். இதில் காப்பீட்டு பிரீமியமானது மாதத்திற்கு 10 திர்ஹம் (ஆண்டுக்கு 120 திர்ஹம்) மற்றும் மாதாந்திர இழப்பீடு 20,000 திர்ஹம்வரை வழங்கப்படும்.

பாலிசியின் படி, காப்பீட்டாளர் வேலை இழந்த 30 நாட்களுக்குள் கோரிக்கை சமர்ப்பித்தால், இரண்டு வாரங்களுக்குள் செயலாக்கப்படும். செயலாக்க காலத்திற்குள் அவர் அமீரக ரெசிடென்ஸியை ரத்துசெய்து நாட்டை விட்டு வெளியேறினாலோ அல்லது புதிய வேலையில் சேர்ந்தாலோ காப்பீட்டாளரின் இழப்பீட்டு உரிமை பறிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இழப்பீடு என்பது வேலையின்மைக்கு முந்தைய ஆறு மாதங்களில் சராசரி அடிப்படை சம்பளத்தின் 60% என்ற விகிதத்தில் கணக்கிடப்படுகிறது என்றும், மேலும் வேலையின்மை தேதியிலிருந்து ஒவ்வொரு கோரிக்கைக்கும் அதிகபட்சமாக மூன்று மாதங்கள் வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!