அமீரக செய்திகள்

அமீரகத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள்..!! வாழ்த்துக்களை பகிரும் மற்ற நாடுகள்..!!

அபுதாபியில் புதிய தலைவர்களை நியமித்துள்ள ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு உலகத் தலைவர்களும், அமீரக ஆட்சியாளர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். புதன்கிழமையன்று அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அபுதாபியின் பட்டத்து இளவரசராக ஷேக் கலீத் பின் முகமதுவையும், துணை அதிபராக அமீரகத்தின் துணைப் பிரதமரான ஷேக் மன்சூர் பின் சயீதையும் நியமித்ததைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் எமிரேட்டுகளில் உள்ள ஆட்சியாளர்களும், பிற நாடுகளின் தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆட்சியாளர்கள் என்று பார்க்கும்போது, அஜ்மான், ஃபுஜைரா, உம் அல் குவைன் மற்றும் ராஸ் அல் கைமா ஆகிய நான்கு எமிரேட்டுகளின் ஆட்சியாளர்களும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும், அஜ்மான் ஆட்சியாளருமான ஷேக் ஹுமைத் பின் ரஷித் அல் நுயைமி அவர்கள், அபுதாபியை முன்னேற்றி செழிப்புடன் ஆட்சியை உயர்ந்தோங்கச் செய்ய புதிதாக பொறுப்பேற்ற ஷேக் காலித் அவர்களையும், துணைப் பிரதமரும் ஜனாதிபதி நீதிமன்ற அமைச்சருமான ஷேக் மன்சூர் அவர்களையும் வாழ்த்தியுள்ளார். மேலும், அபுதாபியின் துணை ஆட்சியாளராக நியமிக்கப்பட்ட ஷேக் ஹஸ்ஸா பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் ஷேக் தஹ்னூன் பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அபுதாபியின் பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்ட ஷேக் காலித் மற்றும் அமீரகத்தின் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்ட ஷேக் மன்சூர் ஆகிய இருவருக்கும் உச்ச கவுன்சில் உறுப்பினரும், ஃபுஜைராவின் ஆட்சியாளருமான ஷேக் ஹமத் பின் முகமது அல் ஷர்கி அவர்கள், மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். மேலும், ஹஸ்ஸா பின் சயீத் மற்றும் தஹ்னூன் பின் சயீத் ஆகியோருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகக் கூறினார்.

ஐக்கிய அரபு அமீரக அதிபரின் நம்பிக்கையைப் பெற்ற ஷேக் கலீத் அவர்களுக்கும், UAE பயணம் முழுவதும் முயற்சிகளை மேற்கொண்ட ஷேக் மன்சூர் அவர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக உச்ச கவுன்சில் உறுப்பினரும், உம் அல் குவைனின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் சவுத் பின் ரஷித் அல் முஅல்லா கூறியுள்ளார். அதேவேளையில், ஷேக் மன்சூர் தனது கடமைகளைச் செய்வதில் வெற்றிபெறவும், தலைமை மற்றும் மக்களின் அபிலாஷைகளை அடைவதற்கான ஒன்றியத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

மேலும், உம் அல் குவைனின் பட்டத்து இளவரசர் மாண்புமிகு ஷேக் ரஷித் பின் சவுத் பின் ரஷித் அல் முஅல்லாவும் ஷேக் மன்சூரின் புதிய நியமனத்திற்கு வாழ்த்து தெரிவித்தத்துடன் அவரது புதிய ஆணையில் வெற்றிபெறவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உச்ச கவுன்சில் உறுப்பினரும், ராசல் கைமாவின் ஆட்சியாளருமான ஹிஸ் ஹைனஸ் ஷேக் சவுத் பின் சக்ர் அல் காசிமி அவர்கள் கூறுகையில், “எனது சகோதரர் ஜனாதிபதி ஹிஸ் ஹைனஸ் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் வழிகாட்டுதல் மற்றும் தலைமைக்கு நன்றி, UAE-இன் பயணம் அடுத்த 50 ஆண்டுகளில் அதன் இலக்குகளை அடைவதை நோக்கி வலுவாக முன்னேறும் என்று உறுதியளிக்கிறோம். நாம் அனைவரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அன்பினாலும், விலைமதிப்பற்ற மற்றும் மதிப்புமிக்கதை தொடர்ந்து கொடுப்பதற்கும் ஒன்றுபட்ட சகோதரர்கள் மற்றும் மகன்களாக, அதன் கொடி நிலைத்திருக்கும் வகையில் அயராது உழைக்க வேண்டும் என்ற குறிக்கோளால் ஒன்றுபட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, ஷேக் மன்சூர் அவர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அமீரகம் மட்டுமல்லாது சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் மற்றும் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் ஆகிய இருவரும் தனித்தனி செய்திகளில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் நஹ்யானுக்கு புதிய தலைமை நியமனங்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், மக்களுக்கு மேலும் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக சேவை செய்வதில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆட்சியாளர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

இதே போன்றுதுருக்கிய குடியரசின் அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் வியாழனன்று, தொலைபேசி மூலம் UAE அதிபர் நஹ்யானைத் தொடர்பு கொண்டு புதிய நியமனங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ஓமானின் சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்கள், அமீரக அதிபருக்கு புதிய நியமனம் குறித்து வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், புதிய நியமனங்கள் நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

குவைத் நாட்டை ஆட்சி செய்யும் எமிர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அவர்கள், வியாழன் அன்று அபுதாபி பட்டத்து இளவரசராக பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்து ஷேக் கலீத் அவர்களுக்கு வாழ்த்து கேபிள் அனுப்பியதுடன் துணைத் தலைவாரக பொறுப்பேற்ற ஷேக் மன்சூர் அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதே போல் பஹ்ரைன், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!