ADVERTISEMENT

உலக இஸ்லாமியர்களுக்கு ஈத் முபாரக்!! வாழ்த்துகளை தெரிவித்த UAE அதிபரும் ஆட்சியாளர்களும்….

Published: 21 Apr 2023, 12:19 PM |
Updated: 21 Apr 2023, 12:19 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், UAE மக்களுக்கும் அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கும் தனது அன்பான ஈத் முபாரக் வாழ்த்துகளை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், அல்லாஹ் உங்கள் நல்ல செயல்களை ஏற்று, மகிழ்ச்சியையும் அளித்து, அனைத்து விருப்பங்களையும் ஆசிர்வதித்து நிறைவேற்ற பிரார்த்தனை செய்கிறேன் என்றும், உலகம் முழுவதும் ஈத் முபாரக் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடும் இனிய திருநாளான ஈத் பண்டிகையில் அமீரகத்தின் ஆட்சியாளர்களுக்கும் UAE மக்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக UAE அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் ட்வீட் செய்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) அவரது ட்விட்டர் பக்கத்தில், “ஈத் அல் பித்ர் தினத்தை முன்னிட்டு எமிரேட்ஸ் ஆட்சியாளர்கள் மற்றும் நாட்டு மக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த புனிதமான நேரத்தில் உலக மக்களுக்கு தொடர்ந்து அமைதியையும் நல்வாழ்வையும் வழங்க இறைவனை வேண்டுகிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அதுபோல, துபாயின் பட்டத்து இளவரசரும், துபாய் நிர்வாக சபையின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், UAE தலைமைக்கும் மக்களுக்கும் ஈத் முபாரக்!! என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் UAE மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கான அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு அல்லாஹ் தொடர்ந்து ஆசீர்வதிப்பார் என்று  தனது நம்பிக்கையை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து, துபாயின் துணை ஆட்சியாளரும், துணைப் பிரதமரும், நிதி அமைச்சருமான ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து தனது நல்வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

ADVERTISEMENT

ஈத் திருநாள் குறித்து அவர் கூறியதாவது: “ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமைக்கும், நாட்டு மக்களுக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈத் பண்டிகையானது, ரமலான் மாதம் முழுவதும் வெளிப்படுத்தப்பட்ட வலிமை மற்றும் பொறுமைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு சந்தர்ப்பம், மேலும் குடும்பத்தினர், நண்பர்களுடன் ஆசீர்வாதங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்ள இது ஒரு சந்தர்ப்பமாகும்.” என்றார்.