அமீரக செய்திகள்

துபாய்: பஸ், மெட்ரோ, டாக்ஸியில் இந்த 21 விதிமீறல்களுக்கு 500 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும்.. பயணிகளின் கவனத்திற்கு..!!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), பொதுப் போக்குவரத்தில் பயணிகள் முறையாக விதிமுறைகளுக்கு இணங்குகிறார்களா என்பதைக் கண்காணிக்க ஆய்வுகளை அதிகரித்துள்ளது. RTA வின் நடவடிக்கையின் படி, சமீபத்தில் சுமார் நாற்பதாயிரம் ஆய்வுகள் ஆறு நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வு நடவடிக்கையில் சுமார் 1,193 விதிமீறல்களை RTA பதிவு செய்துள்ளது.

அவற்றில் பெரும்பாலும் பேருந்து கட்டணத்தை செலுத்தாமல் ஏமாற்றுவது, நோல் கார்டுகளைக் காட்டத் தவறுவது போன்ற பொதுப் போக்குவரத்து விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பேருந்து நிழற்குடைகளில் தூங்குவது, செல்லாத நோல் கார்டுகளைப் பயன்படுத்துவது, தடைசெய்யப்பட்ட இடங்களில் சாப்பிடுவது போன்றவையும் RTA வின் படி குற்றமாகும். அதன்படி பொதுப் பேருந்துகளில் அறிவிக்கப்பட்டுள்ள விதிமீறல்களின் முழுப் பட்டியல் மற்றும் அதற்கான அபராதங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

1. பொதுப் போக்குவரத்து வாகனங்கள், வசதிகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துதல் அல்லது நிலுவைத் தொகையை செலுத்தாமல் கட்டண மண்டலங்களுக்குள் நுழைதல் / வெளியேறுதல் போன்ற விதிமீறல்களுக்கு 200 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.

2. கோரிக்கையின் பேரில் நோல் கார்டை அதிகாரிகளிடம் வழங்கத் தவறும் போது 200 திர்ஹம் அபராதம் செலுத்த நேரிடும்.

3. பிறருக்கு சொந்தமான மூன்றாம் தரப்பு அட்டையைப் பயன்படுத்தினால் 200 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.

4. காலாவதியான கார்டைப் பயன்படுத்துவது 200 திர்ஹம் அபராதத் தொகையை செலுத்த வழிவகுக்கும்.

5. தவறான கார்டைப் பயன்படுத்தினால் 500 திர்ஹம் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

6. போலியான கார்டைப் பயன்படுத்தி ஏமாற்ற முயற்சித்தால் 200 திர்ஹம் அபராதத்திற்கு ஆளாக்கப்படுவார்கள்.

7. RTA இலிருந்து முன் அனுமதி பெறாமல் Nol கார்டுகளை விற்பனை செய்தால் 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.

8. பொது போக்குவரத்து முறைகளின் அமைப்புகள், கருவிகள் அல்லது இருக்கைகளை அழித்தல் அல்லது சேதப்படுத்துதல் போன்ற செயல்களுக்கு 200 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.

9. எச்சில் துப்புதல், குப்பை கொட்டுதல் போன்ற பொது போக்குவரத்து முறைகள், வசதிகள் மற்றும் சேவைகளை மாசுபடுத்தும் எந்த செயல்களுக்கும் 100 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.

10. பொதுப் போக்குவரத்து முறைகள், வசதிகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்தும் சக பயணிகளுக்கு எந்த விதத்திலும் சிரமத்தை ஏற்படுத்துவது 200 திர்ஹம் அபராதத்திற்கு வழிவகுக்கும்.

11. பொது போக்குவரத்து முறைகள், வசதிகள் மற்றும் சேவைகளுக்குள் புகைபிடித்தால் 200 திர்ஹம் அபராதம் செலுத்த நேரும்.

12. ஆயுதங்கள், கூர்மையான பொருட்கள் அல்லது எரியக்கூடிய பொருட்கள் உள்ளிட்ட அபாயகரமான பொருட்களை பொது போக்குவரத்து முறைகள், வசதிகள் மற்றும் சேவைகளுக்குள் எடுத்துச் சென்றால் 200 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.

13. பொது போக்குவரத்து முறைகள், வசதிகள் மற்றும் சேவைகளுக்குள் மது அருந்துதல் 200 திர்ஹம் அபராதத்திற்குரிய விதிமீறலாகும்.

14. பொதுப் போக்குவரத்து முறைகள், வசதிகள் மற்றும் சேவைகளுக்குள் எந்த வகையான விளம்பரம் அல்லது பிரச்சாரம் மூலம் பொருட்களை விற்பனை செய்தால் 200 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.

15. ஸ்டேஷன்களுக்கு இடையே இயக்கத்தின் போது அல்லது வாகனம் நிறுத்தும் போது பொதுப் பேருந்துகளின் கதவைத் திறப்பது 200 திர்ஹம் அபராதத்திற்கு வழிவகுக்கும்.

16. பேருந்தின் உள்ளே பெண்களுக்கான பகுதிகள் என குறிப்பிட்ட நபர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நுழைவது அல்லது உட்காருவது 100 திர்ஹம் அபராதத்திற்குரிய விதிமீறலாகும்.

17. மற்ற பயணிகளுக்கு எரிச்சலூட்டும் அல்லது அவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் அல்லது உபகரணங்களை எடுத்துச் செல்லுதல் அல்லது பயன்படுத்துதல் போன்ற மீறல்களுக்கு 100 திர்ஹம் அபராதம் ஆகும்.

18. பயணிகள் பேருந்து தங்குமிடங்களில் அல்லது அனுமதிக்கப்படாத இடங்களில் தூங்கினால் 300 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.

19. பொதுப் போக்குவரத்து ஓட்டுநரின் கவனத்தை இழக்கும் வகையில் செயல்படுவது அல்லது வாகனம் ஓட்டும் போது அவரது பார்வைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வது போன்ற நடத்தைகளுக்கும் 200 திர்ஹம் அபராதம் வசூல் செய்யப்படும்.

20. பயணிகளுக்கு ஒதுக்கப்படாத பொதுப் போக்குவரத்து முறைகள், வசதிகள் மற்றும் சேவைகளின் பகுதிகளுக்குள் நிற்பதோ அல்லது உட்கார்ந்திருப்பதோ 100 திர்ஹம் அபராதத்திற்கு வழிவகுக்கும்.

21. தடைசெய்யப்பட்ட இடங்களில் சாப்பிடுவது மற்றும் குடிப்பது போன்றவற்றிற்கும் 100 திர்ஹம் அபராதம் வசூலிக்கப்படும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!