துபாயில் வருடம் முழுவதும் மழை பெய்யும் “ரெய்னிங் ஸ்ட்ரீட்” பற்றி தெரியுமா உங்களுக்கு..? எங்க இருக்கு.. இங்க என்னென்ன ஸ்பெஷல்.?
துபாயில் வசிக்கும் ஒருவர், ஐரோப்பிய கட்டிடக்கலையில் கட்டப்பட்ட பிரெஞ்சு தெரு போன்ற ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு, தனக்கு பிடித்தமான நபருடன் சேர்ந்து வருடத்தின் ஒவ்வொரு நாளும் மழையை அனுபவித்து கொண்டே, சூடான காபியை ருசிப்பதை கற்பனை செய்து இருக்கிறீர்களா? அல்லது துபாயில் அதுவும் வருடம் முழுவதும் மழையா.. அதற்கு சாத்தியமே இல்லை என்று நினைக்கிறீர்களா?
ஆனால், இப்போது இது சாத்தியமாக்கப்பட்டுள்ளது. ஆம், துபாயில் ஒரு கிலோமீட்டர் தூர தொலைவிற்கு காலநிலை கட்டுப்பாட்டுடன் உருவாக்கப்பட்டுள்ள ரெய்னிங் ஸ்ட்ரீட்டில் வருடம் முழுவதும் மழையும் பெய்யும் மற்றும் தேவைக்கேற்ப இங்கு பனி கூட பெய்யும். இப்படி ஒரு புதுமையான இந்த ரெய்னிங் ஸ்ட்ரீட் துபாயில் எங்க இருக்கு.? இன்னும் இங்கு என்னென்ன சிறப்பம்சங்கள்லாம் இருக்குனு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
ஐரோப்பாவின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான புகழ்பெற்ற ஃபிரான்ஹோஃபர் இன்ஸ்டிடியூட்டின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரெய்னிங் ஸ்ட்ரீட், துபாய் கடற்கரையிலிருந்து 4.0 கி.மீ தூரத்தில், கடற்பகுதியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட வேர்ல்ட் ஐலேண்டில் (world island) ஐரோப்பாவின் மையத்தில் உள்ள கோட் டி அஸூர் (Côte d’Azur) பீச் ரிசார்ட்டில் அமைந்துள்ளது.
கடலுக்குள் உருவாக்கப்பட்ட வேர்ல்ட் ஐலேண்டில் இருக்கும் ஒரு பீச் ரிசார்ட்டில் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் முக்கிய சில விஷயங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:
1. நாள் முழுவதும் சீரான வெப்பநிலை:
அழகான சிவப்பு-வெள்ளை போல்கா புள்ளிகளுடன் பார்வையாளர்களை பிரெஞ்சு ஸ்ட்ரீட்க்கு வரவேற்கும் இந்த கவர்ச்சியான இடத்தில், தெற்கு பிரான்சின் கோடை வெப்பநிலையை பிரதிபலிக்கும் வகையில், இந்த தெருவில் 27 டிகிரி வெப்பநிலை நாள் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 60 சதவீதம் ஈரப்பதம் மற்றும் மணிக்கு 5 கிமீ வேகத்தில் காற்று வீசுவதையும் இங்கு அனுபவித்து மகிழலாம்.
2. சூரிய ஒளியும் மழையும்:
இந்த பொழுதுபோக்கு ஸ்ட்ரீட், ரிசார்ட்டின் உணவகமான La Brasserie பிரெஞ்சு பிஸ்ட்ரோவின் பின்புறம் அமைந்துள்ளது. இது ஐரோப்பிய காலநிலையை துபாயின் வெப்பமான கோடை காலங்களில் நெருக்கமாகக் கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. மேலும், விருந்தினர்கள் சிவப்பு மற்றும் வெள்ளை இருக்கைகளில் அமர்ந்து மழையை ரசித்துக் கொண்டே காபி அல்லது உணவை அருந்தலாம்.
3. சிறப்பு அணுகல் (Exclusive Access):
வேர்ல்ட் ஐலேண்டில் அமைந்துள்ள ரெயினிங் ஸ்ட்ரீட்டை அனுபவிக்க விரும்புவோர் முதலில் இங்குள்ள உணவகத்தில் அல்லது ஹோட்டலில் தங்குவதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். கோட் டி அஸூர் ஹோட்டலால் இயக்கப்படும் ஒரு தனியார் படகு மூலம் மட்டுமே நீங்கள் செல்ல முடியும், மேலும் அதற்கு முன்கூட்டியே முன்பதிவு செய்வதும் அவசியம்.
4. ரெயின்போ பீச்:
இங்கு செல்லும் பார்வையாளர்கள் ரெயினிங் ஸ்ட்ரீட்டில் மழையை ரசித்து மகிழ்ந்த பிறகு, வெயிலுடன் மணற்பரப்பான ரெயின்போ கடற்கரையில் இருந்து நூற்றுக்கணக்கான பறவைகள் கடலுக்கு அருகில் பறந்து தண்ணீரில் மூழ்குவதை பார்த்து ரசிக்கலாம்.
5. பிரெஞ்சு நகரங்கள்:
இந்த ஹோட்டல் பிரெஞ்சு ரிவியராவில் உலா வருவது போன்ற உணர்வைத் தரக் கூடியது. மேலும் இந்த Cote d’Azur ரிசார்ட் நான்கு ஆடம்பரமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களைக் கொண்டுள்ளது. அவை மொனாக்கோ, நைஸ், கேன்ஸ், செயின்ட் ட்ரோபஸ் போன்றவை ஆகும். தற்போது, உட்புறம் முழுவதும் பிரெஞ்ச் வடிவமைப்புகளுடன் கட்டப்பட்டுள்ள மொனாக்கோ ஹோட்டல் மட்டுமே இயங்கி வருகிறது. மற்ற ஹோட்டல்களுக்கான கட்டுமான பணிகள் இன்னும் முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.