அமீரக செய்திகள்

UAE: எச்சரிக்கை விடுத்த அடுத்த எமிரேட்.. பாதசாரிகளுக்கு வழிவிடாமல் சென்றால் அபராதம் மற்றும் பிளாக் பாயிண்ட..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு சாலைகளில் சில பொறுப்பற்ற ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை அத்துமீறி பாதசாரிகளை ஆபத்தில் ஆழ்த்தும் நடத்தைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், பாதசாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, உம் அல் குவைன் காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்து துறையின் விழிப்புணர்வு மற்றும் தகவல் பிரிவு அதிகாரிகள் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

அனைத்து சாலைப் பயனர்களிடையே போக்குவரத்து விழிப்புணர்வை மேம்படுத்துவது, போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பது மற்றும் பாதசாரிகள் சாலையை பாதுகாப்பாக கடப்பதற்கான உரிமைகளை வலியுறுத்துவது போன்றவற்றை நோக்கமாக கொண்டு இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளதாக உம் அல் குவைன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போக்குவரத்து நிர்வாகம் மற்றும் ரோந்துப் படையின் இயக்குனர் கர்னல் காலித் அலி முஹம்மது என்பவர் பேசுகையில், உள்துறை அமைச்சகத்தின் மூலோபாயம் மற்றும் உம் அல் குவைன் காவல்துறையின் பொதுக் கட்டளையுடன் இந்தப் பிரச்சாரம் ஒத்துப் போவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், சாலையைக் கடக்கும்போது போக்குவரத்துச் சட்டங்கள் மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்து பாதசாரிகளுக்குக் கற்பிப்பதே பிரச்சாரத்தின் முதன்மையான குறிக்கோள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம், சாலையைக் கடக்கும் போது பாதசாரிகளுக்கு பாதையின் உரிமையை வழங்குவதன் முக்கியத்துவத்தையும், அதே நேரத்தில் பாதசாரிகள் தங்கள் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட பகுதிகளை மட்டுமே பயன்படுத்துவதையும் போக்குவரத்து ரோந்துகள் வலியுறுத்துகின்றன.

அதுமட்டுமின்றி, போக்குவரத்துச் சட்டங்களின் பிரிவு 69, பாதசாரிகள் கடப்பதற்கு நியமிக்கப்பட்ட பகுதிகளில் அவர்களுக்கே முன்னுரிமை என்று கூறுவதாகவும், இந்தச் சட்டத்தை கடைப்பிடிக்கத் தவறுவோருக்கு 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் ஆறு பிளாக் பாயிண்டுகள் சேர்க்கப்படும் என்றும் கர்னல் காலித் அலி முஹம்மது குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம், சில வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட பாதசாரி சாலைகளில், குறிப்பாக வணிக மற்றும் தொழில்துறை பகுதிகளில் நிறுத்தாமல் செல்வதைக் கவனிக்க முடிந்ததாகக் கூறிய அவர், ஓட்டுநர்கள் வேண்டுமென்றே சாலையின் இருபுறமும் காத்திருக்கும் மக்களைப் புறக்கணித்து செல்வதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் பாதசாரிகள் கடக்க வாகனங்கள் கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும் என்றும், இதனால் அவர்கள் பாதுகாப்பாக கடக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகள் காவல்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும் மற்றும் போக்குவரத்து விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும், போக்குவரத்து பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை செயல்படுத்துவதில் போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் ஒத்துழைப்பையும் அவர் பாராட்டியுள்ளார்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!