துபாய்: வெறும் 2 மணி நேரத்தில் டிரைவிங் லைசன்ஸ், வாகனப் பதிவு கார்டை பெற புதிய சேவை.. அபுதாபி, ஷார்ஜாவிற்கும் அதே நாளில் டெலிவரி..!! சேவையை பெறுவது எப்படி…??

துபாய் குடியிருப்பாளர்கள் இப்போது மிக எளிமையான செயல்முறையில், அவர்களது புதுப்பிக்கப்பட்ட டிரைவிங் லைசன்ஸ் மற்றும் வாகனப் பதிவுகளை இரண்டே மணி நேரத்தில் பெறலாம். மேலும், நீங்கள் விடுமுறையில் இருந்தால், உங்கள் ரெஜிஸ்ட்ரேஷன் கார்டு அல்லது லைசன்ஸைப் உங்கள் இருப்பிடங்களுக்கும் டெலிவரி செய்யக் கோரலாம்.
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வாடிக்கையாளர்கள் அவர்களது டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகனப் பதிவு அட்டைகளை இரண்டு மணி நேரத்தில் துபாயிலும், அதே நாளில் அபுதாபி மற்றும் ஷார்ஜாவிற்கும் வழங்குவதற்கான புதிய சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது.
செயல்முறை:
>> ஆவணங்களைப் புதுப்பிக்க விரும்பும் குடியிருப்பாளர்கள் துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) இணையதளத்திற்குச் சென்று ‘Driver & Car Owner Services’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
>> அந்த பிரிவின் கீழ், பல விருப்பங்கள் காட்டப்படும், அவற்றில் Apply for Renewing Driver’s Licence என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
>> குறிப்பாக, நீங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், எமிரேட்ஸ் ஐடி மற்றும் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும்.
>> அடுத்தபடியாக, எமிரேட்ஸ் ஐடி எண் மற்றும் ஐடியின் காலாவதி தேதியை உள்ளிடுவதன் மூலம் அடையாள சரிபார்ப்பை நிறைவு செய்தால், அது உங்களை டிரைவிங் லைசென்ஸ் தகவலின் சரிபார்ப்புக்கு அழைத்துச் செல்லும்.
>> இறுதியாக, உங்கள் லைசென்ஸை எவ்வாறு பெற விரும்புகிறீர்கள் என்பதற்கான முறையைத் தேர்ந்தெடுக்கவும்.
செலவு:
>> பிரீமியம், ஒரே நாள் (same day), நிலையான (standard) மற்றும் சர்வதேசம் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணத்துடன் புதிய சேவைக்கான விருப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது.
>> அதில் துபாய்க்கு வழங்கப்படும் ப்ரீமியம் சேவையில் இரண்டே மணி நேரத்தில் உங்களது லைசென்ஸ் டெலிவரி செய்யப்படும். மேலும், இதற்கு 50 திர்ஹம் செலவாகும்.
>> அதுபோல, அபுதாபி மற்றும் ஷார்ஜா போன்ற எமிரேட்டுகளில் ஒரே நாளில் செய்யப்படும் டெலிவரிக்கு 35 திர்ஹம் செலவாகும்.
>> சுமார் ஒன்று முதல் ஐந்து நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும் அமீரகத்திற்கான நிலையான சேவையில் (standard service) 20 திர்ஹம் செலவாகும்.
>> சர்வதேச சேவைக்கு 50 திர்ஹம் செலவில் பத்து நாட்களில் டெலிவரி செய்யப்படும்.
குறிப்பாக, ப்ரீமியம் சேவைக்கான டெலிவரி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலான நாட்களில் ஒரே நாள் கிடைக்கும் மற்றும் மதியம் 12 மணிக்குப் பிறகு ஒரே நாளில் இந்த சேவை கிடைக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
RTA வெளியிட்டுள்ள தரவுகளின் படி, இந்தாண்டின் முதல் காலாண்டில் சுமார் 107,054 வாகனப் புதுப்பித்தல் பரிவர்த்தனைகள், 25,500 ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல்கள், மாற்றுவதற்கான 939 பரிவர்த்தனைகள் மற்றும் 732 சர்வதேச ஓட்டுநர் உரிமங்களை வழங்கியதாக ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.