அனைத்து நாட்களிலும் வாகனங்களுக்கான டெக்னிக்கல் டெஸ்ட்டிங் மையங்கள் செயல்படும்!!- துபாய் RTA வெளியிட்டுள்ள தகவல்…

துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் வாகனங்களுக்கான டெக்னிக்கல் டெஸ்ட்டிங் மையங்களை நிரந்தரமாக திறந்திருக்கும் என்று தெரிவித்துள்ளது.
இது கடந்த ஏப்ரல் 30 அன்று செயல்படுத்தப்பட்டது என்றும், மேலும் ராஸ் அல் கோர் தொழில்துறை பகுதியில் இரண்டு மாத சோதனைக் காலத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்து வருகிறது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த இடைவிடா சேவை நான்கு மையங்களில் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், அல் அவீர், அல் தவார், ஆட்டோப்ரோ அல் மன்கூல் மற்றும் ஆட்டோப்ரோ அல் சத்வா ஆகிய இடங்களில் உள்ள ENOC தஸ்ஜீல் மையங்களுடன் இணைக்கப்பட்ட சோதனை மையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நிரந்தரமாக இயங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது சோதனைக் காலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் சோதனைக்கு வந்த வாகனங்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்ததால், சேவைக்கான அதிகரித்து வரும் தேவைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக RTA இன் உரிமம் வழங்கும் முகமையின் வாகன உரிமத்தின் இயக்குனர் அகமது மஹ்பூப் கூறியுள்ளார்.
இந்த முயற்சியானது அல் முதகமேலா வாகன சோதனை மற்றும் பதிவு மையம் மற்றும் தஸ்ஜீலின் யூஸ்டு கார் சந்தை மையம் ஆகிய இரண்டு மையங்களில் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை இரண்டு மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.