UAE: ஊழியர்களுக்கு 24 வார சம்பளத்தை போனஸாக அறிவித்த எமிரேட்ஸ் குழுமம்!! – 24 மணி நேரத்திற்குள் வந்த மகிழ்ச்சி செய்தி..

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல விமான நிறுவனமான எமிரேட்ஸ் குழுமம், சமீபத்தில் அதன் இலாபகரமான ஆண்டை அறிவித்த 24 மணி நேரத்திற்குள், சுமார் 100,000 ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் 24 வார (6 மாதம்) சம்பளத்தை போனஸாக வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
இது குறித்து எமிரேட்ஸ் எந்தவித கருத்தும் தெரிவிக்காத நிலையில், அதன் ஊழியர்கள் பலரும் ஊக்கத்தொகையை உறுதிப்படுத்தும் மின்னஞ்சல்களை எமிரேட்ஸ் குழுமத்திடமிருந்து பெற்றதாக செய்தி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
ஊழியர்களின் கூற்றுப்படி, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் அவர்கள், 24 வார போனஸின் ஒவ்வொரு பகுதியும் மே மாத சம்பளத்துடன் சேர்க்கப்படும் என்று மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த வியாழக்கிழமை அன்று, குழுமம் அதன் 2022-23 ஆண்டு அறிக்கையை வெளியிட்டு, இதுவரை இல்லாத அளவில் 10.9 பில்லியன் திர்ஹம் (US$ 3.0 பில்லியன்) ஆண்டு லாபத்தை ஈட்டியுள்ளதாக அறிவித்தது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு நஷ்டத்தை சந்தித்த எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு இந்த மீட்சி ஒரு முழுமையான திருப்பமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊழியர்களின் உழைப்புக்குக் கிடைத்த பாராட்டு!!
எமிரேட்ஸ் நிறுவனத்தின் 2022-23 நிதியாண்டில் சாதனையாக அதிக லாபம் ஈட்டியதை அடுத்து, ஷேக் அகமது தனது ஊழியர்களின் கடின உழைப்பையும், அவர்களின் பங்களிப்பையும் பாராட்டியுள்ளார். மேலும், இந்த சாதனை எங்கள் முன்னோக்கிய திட்டமிடல், ஊழியர்களின் கடின உழைப்பு மற்றும் பயண சுற்றுச்சூழல் அமைப்பு போன்றவற்றை பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் ஊழியர்களுக்கு அவர் அனுப்பிய மின்னஞ்சலில், ஊக்கத்தொகையை அவர்கள் விருப்பப்படி பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். அதில் ஷேக் முகம்மது கூறியதாவது: ” உங்கள் கடின உழைப்பிற்கு கிடைத்த வெகுமதிகளை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள், சேமியுங்கள் அல்லது நன்றாக செலவழியுங்கள்” என்று எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மற்றொரு ஊழியர் கூறுகையில், ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தைப் பொறுத்து போனஸ் மாறுபடும் மற்றும் ஒவ்வொரு ஊழியரும் 24 வாரங்கள் அல்லது 6 மாதங்களுக்கான அடிப்படைச் சம்பளத்தைப் பெறுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, எமிரேட்ஸ் குழுமத்தின் சாதனை பற்றி அறிந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும், இது நகரத்தின் உணர்வைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
அவரது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த மூன்று ஆண்டுகளில் நெருக்கடிகளை சந்தித்த விமானப் போக்குவரத்துத் துறைக்கு இது மிகவும் லாபகரமான ஆண்டாகும். எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் துபாயின் உணர்வைக் குறிக்கிறது. நெருக்கடிகளின் நேரங்கள் நம்மை வலிமையாக்குகின்றன” என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.