அமீரகத்தில் கொளுத்தும் வெயில்..!! 44ºC ஐ எட்டும் என வானிலை மையம் தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலையானது 44 டிகிரி செல்சியஸ் அளவைத் தொடும் நிலையில் இருப்பதாக குடியிருப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என்றும், சில நேரங்களில் ஒரளவு மேகமூட்டமாக இருக்கும் என்றும் அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதேசமயம், லேசானது முதல் மிதமான காற்று அவ்வப்போது வீசி புத்துணர்ச்சியூட்டுவதால் பகல் நேரத்தில் தூசி நிறைந்த சூழல் காணப்படும் என்று வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளது. இதற்கிடையில், அரேபிய வளைகுடா மற்றும் ஓமான் கடல் பகுதிகளில் அலை சற்று சிறிதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) அறிவிப்பின்படி, அதிகபட்சமாக அபுதாபியில் 42ºC ஆகவும், துபாயில் 40ºC ஆகவும் வெப்பநிலை பதிவாகும். அதேவேளை, இரண்டு எமிரேட்களிலும் முறையே 23ºC மற்றும் 25ºC ஆகக் குறையும் என கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்ளூர் நேரப்படி 14:00 மணிக்கு அல் தஃப்ரா பிராந்தியத்தில் உள்ள பதா தஃபாஸில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகபட்ச வெப்பநிலையாக 44.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதே போல் இன்றும் அமீரகத்தில் உள்ள ரசீன், காஸ்யூரா, அல் குவா மற்றும் ஸ்வீஹன் போன்ற பகுதிகளில் வெப்பநிலை 44°C ஐ எட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.