அமீரக செய்திகள்

UAE: நிறுவனம் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்ததற்காக தொழிலாளர்களுக்கு 13.4 மில்லியன் திர்ஹம்ஸ் வெகுமதி..!! ஊழியர்களின் பெற்றோர்களையும் அழைத்து வந்து விழாவைக் கொண்டாடிய இந்திய தொழிலதிபர்!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தொழிலதிபர் ஒருவர் தனது நிறுவனத்தின் 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடி அதன் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு 13.4 மில்லியன் திர்ஹம்களை வெகுமதியாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

ஷார்ஜாவைத் தலைமையிடமாகக் கொண்ட Aries Group of Companies அதன் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களுக்காக அதன் 25 ஊழியர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் துபாய்க்கு அழைத்துச் சென்றுள்ளது. மேலும், நிறுவனத்தின் ஊழியர்கள், அவர்களது பெற்றோர்கள், வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான வெள்ளி விழா பரிசை ஏரீஸ் குழுமத்தின் நிறுவனர் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சோஹன் ராய் என்பவர் அறிவித்திருக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “கடந்த 25 ஆண்டுகளை நாங்கள் சிந்திக்கும்போது, ​​எங்கள் ஊழியர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளித்த அவர்களது குடும்பத்தினரின் அர்ப்பணிப்புக்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்றார். மேலும், இந்த வெகுமதிதான் அவர்களுக்கு நாங்கள் கூறும் நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய ராய், எந்தவொரு நிறுவனத்தின் வெற்றியும் அதன் ஊழியர்களின் மகிழ்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று நம்புவதாகவும், அதனால் நிகழ்ச்சிக்கு பெற்றோரை அழைத்து முழு குடும்பத்திற்கும் நிதி வெகுமதிகளை வழங்குவது போன்ற முயற்சிகள் ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் மற்றும் ஏரீஸ் குழுமத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதத்தை வளர்க்கும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.

ஆகவே, குழுவில் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு பணியை நிறைவு செய்துள்ள ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வெகுமதியை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெற்றோருக்கு மரியாதை:

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களின்  பெற்றோருக்கு வழங்கும் தனித்துவமான ‘parental allowance’  என்ற கொள்கையை நிறுவனம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாகக் கொண்டுள்ளது. கூடவே, நிறுவனம் அறிமுகப்படுத்திய மற்றொரு திட்டம், அதன் லாபத்தை ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்வது ஆகும். இந்த நிறுவனம் 1998 இல் தொடங்கப்பட்டதில் இருந்து அதன் லாபத்தில் 50 சதவீதத்தை ஊழியர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் கொள்கையைப் பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

அதுமட்டுமின்றி, ஊழியர்களின் பெற்றோருக்கு ஓய்வூதியம், குழு ஊழியர்களின் வேலையில்லாத வாழ்க்கைத் துணைவர்களுக்கு சம்பளம், மூத்த ஊழியர்களுக்கான வீடுகள், ஊழியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை போன்ற பல்வேறு பலன் தரும் திட்டங்களையும் செயல்படுத்துகிறது. COVID-19 தொற்றுநோய்களின் போது சம்பளக் குறைப்பு இல்லை என்பது ஊழியர்களுக்கு மற்றொரு நிவாரணமாகும்.

இதர முயற்சிகள்:

சுமார் 25 நாடுகளில் பணிபுரியும் 2200 க்கும் மேற்பட்ட நிபுணர்களைக் கொண்ட ஒரு பன்னாட்டு ஆய்வு மற்றும் கப்பல் வடிவமைப்பு ஆலோசனை நிறுவனமான ஏரீஸ் குழுமம், கடல் பொறியியல், எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்த பெருமைக்குரிய வரலாற்றைக் கொண்டுள்ளது. மேலும் உலகம் முழுவதும் பலதரப்பட்ட பணியாளர்களைப் பயன்படுத்துகிறது.

இதற்கிடையில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகை, இயற்கை சீற்றங்களால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களின் மறுவாழ்வு, பின்தங்கிய பகுதிகளில் பள்ளிகளை நடத்துதல் போன்ற பல CSR செயல்பாடுகளையும் நிறுவனம் மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது.

பெண் ஊழியர்களுக்கு ஆதரவு:

நிறுவனத்தின் முக்கிய பதவிகளில் பெண்கள் அதிகாரமளிப்பதற்கான பல்வேறு முயற்சிகளையும் குழு அறிமுகப்படுத்தியுள்ளது. அத்துடன் வெள்ளி விழா கொண்டாட்டத்தில் ‘Baby Care Leave’ என்ற நன்மையின் மூலம், பிரசவத்திற்கு பிந்தைய காலத்தில் பெண் ஊழியர்கள் ஒரு வருட விடுப்பு எடுக்கலாம் என்று அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுமுறையையும் அமல்படுத்தியுள்ளது.

மேலும், அலுவலகத்திற்கு அருகில் வசிக்கும் ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை கவனிப்பதற்காக வேலை நேரத்தில் நான்கு அரை மணி நேர இடைவெளிகளைப் பெறலாம்.  இவற்றுடன் வரதட்சணை எதிர்ப்புக் கொள்கை, வேலையில்லா மனைவிகளுக்கான சம்பளம், பெண்களுக்கான தொழில்முனைவுத் திட்டங்கள், பிரத்யேக மகளிர் அலுவலகம், வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதி, ஊழியர்களுக்கான மனநலத் திட்டங்கள், பாலினப் பாகுபாடு கொள்கை மற்றும் பாலின எதிர்ப்பு ஆகியவை பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் மற்ற முக்கிய முயற்சிகள் ஆகும்.

ஊழியர்களின் மகிழ்ச்சியும் பெருமிதமும்:

ஏரிஸ் குழுமம் வழங்கிய வெகுமதி மற்றும் நன்மையளிக்கும் கொள்கைகளின் தொகுப்புடன் நிகழ்வில் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது 16 ஆண்டுகளாக நிறுவனத்துடன் பணிபுரியும் முகமது பஷீர் என்பவர் நிகழ்வில் பங்கேற்று பேசுகையில், ஊழியர்கள் பெரும்பாலும் நிதிச் சலுகைகளைத் தவிர, குறிப்பாக நெருக்கடிகளின் போது வழங்கப்படும் தனிப்பட்ட கவனிப்பு மற்றும் மனநல ஆதரவை மதிப்பதாகக் குறிப்பிட்டார்.

அதற்குச் சான்றாக அவர் கூறியதாவது: “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு Covid-19 தொற்று பரவலின் போது எனது மனைவியை இழந்தபோதும், 2012 இல் எனது குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தபோதும் நான் அதை அனுபவித்தேன்” என்றார்.

துபாய் பயணத்திற்கான அனைத்து செலவுகளையும் செலுத்தி, பெற்றோர்களை வரவழைக்க தேர்வு செய்யப்பட்ட 25 ஊழியர்களில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றாலும், சிலர் பிற நாடுகளிலிருந்தும் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!