அமீரக செய்திகள்

அபுதாபி நெடுஞ்சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள புதிய வகை ‘சேஃப்டி அலர்ட் ரேடார் சிஸ்டம்’.. இது என்னனு முதல்ல தெரிஞ்சுக்கோங்க…!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் புதிய சாலை எச்சரிக்கை அமைப்பை அபுதாபி காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் அல்லது வானிலை நிலவரங்கள் குறித்து வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள ரேடார் சாதனங்கள் மூலம் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, போக்குவரத்து சம்பவங்கள் அல்லது வானிலை குறித்து வாகன ஓட்டிகளை எச்சரிக்க அமைப்பில் வெவ்வேறு வண்ணங்கள் ஒளிரும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பகல் மற்றும் இரவு நேரங்களில் 200 மீட்டர் தூரம் வரை தெரியும் இந்த விளக்குகள் சூரிய ஆற்றல் மற்றும் பேட்டரிகளால் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் ஒளிரும் வண்ணங்கள் என்னென்ன நிகழ்வுகளை எச்சரிக்கின்றன என்பதைப் பின்வருமாறு பார்க்கலாம்:

  • சாலையில் நடைபெறும் வாகன விபத்து குறித்து எச்சரிக்கை விடுக்க சிவப்பு மற்றும் நீல வண்ணம் ஒளிரும்.
  • திடீர் வானிலை மாற்றம் காரணமாக உருவாகும் தூசி, மூடுபனி மற்றும் மழை போன்றவை குறித்து எச்சரிக்க மஞ்சள் நிறம் ஒளிரும்.

இதற்கிடையில், குடியிருப்பாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த முன்னெச்சரிக்கை சிஸ்டம் சாலையில் ஒளிர்வதைக் கண்டதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், காவல்துறையின் இந்த புதிய முயற்சியை நல்ல யோசனை என்று பாராட்டியுள்ளனர்.

சாலை பாதுகாப்பு தொடர்பாக அபுதாபி மேற்கொண்டுள்ள பல்வேறு முயற்சிகள்:

>> சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தொடர்ந்து புது முயற்சிகளை மேற்கொண்டு வரும் அபுதாபி காவல்துறையின் சமீபத்திய நடவடிக்கைகளில் ஸ்மார்ட் அலர்ட் சிஸ்டம் ஒன்றாகும். இதற்கு முன்னதாக, வேகமாக செல்வதற்கு நியமிக்கப்பட்ட பாதைகளில் மெதுவாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு 400 திர்ஹம் அபராதத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

>> அதாவது, ஷேக் முகமது பின் ரஷீத் சாலையில் அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 140 கிமீ என்ற நிலையில், வாகன ஓட்டிகள் இரண்டு இடதுபுறம் உள்ள பாதைகளில் மணிக்கு 120 கிமீ வேகத்தில் ஓட்ட வேண்டும். அதேசமயம், குறைந்தபட்ச வேகம் குறிப்பிடப்படாத மூன்றாவது பாதையில் மெதுவாக செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

>> ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரில் வானிலை ஒரு ஸ்மார்ட் சிஸ்டம் மூலம் கண்காணிக்கப்படுவதால், இது மோசமான வானிலை அல்லது மூடுபனி நிறைந்த சூழலில் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வேகவரம்பை தானாகவே குறைக்கும் திறன் கொண்டது. உதாரணமாக, தூசி மற்றும் மூடுபனி காரணமாக சாலைகளில் தெரிவுநிலை குறைவாக இருக்கும் போது, வேக வரம்பு மணிக்கு 80 கிமீ ஆக குறைக்கப்படும். கூடவே, மாற்றியமைக்கப்பட்ட வேக வரம்புகள் எலெக்ட்ரானிக் போர்டுகளில் காட்டப்படும்.

>> இதுபோலவே, இந்தாண்டு தொடக்கத்தில் ஓட்டுநர்களிடையே சீட் பெல்ட் அணியாமல் இருத்தல் மற்றும் மொபைல் ஃபோன் பயன்படுத்துதல் போன்ற விதிமீறல்களைக் கண்டறிய ஒரு புதிய தானியங்கி அமைப்பை அபுதாபி காவல்துறை அறிமுகம் செய்துள்ளது. Vehicular Attention and Safety Tracker (VAST) என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு, AI மூலம் இயங்கும் கேமராக்கள் மூலம் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களைப் பிடிக்க ரேடார்களின் வலையமைப்பைப் பயன்படுத்துகிறது. ஆகவே, வாகன ஓட்டிகளுக்கு விதிமீறல் குறித்த குறுஞ்செய்தி வாகன ஓட்டிகளுக்கு உடனடியாக அனுப்பப்படும்.

>> மேலும், அபுதாபியில் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் புதிய ஓட்டுநர்களை சோதிக்க அபுதாபி காவல்துறை ஸ்மார்ட் வாகனங்களைப் பயன்படுத்துகிறது. AI மற்றும் நவீன தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட் வாகனங்கள் சோதனையின் போது ஓட்டுநரின் செயல்திறனைக் கண்காணித்து தானியங்கு அறிக்கையை உருவாக்குவதுடன் விண்ணப்பதாரரின் கோப்பில் நேரடியாக பதிவு செய்யும்.

>> அதுமட்டுமல்லாமல் அபுதாபி தவிர அமீரகத்தின் மற்ற அனைத்து எமிரேட்களிலும், 20 கிமீ வேகத்தில் ‘ஸ்பீடு பஃபர்’ பொருந்தும். சாலைகளில் ரேடார்கள் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை விட 20 கிமீ வேகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அபுதாபி 2018 இல் இந்த அமைப்பை நீக்கியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சாலையில் குறிப்பிடப்பட்டுள்ள வேக வரம்பிற்குள் மட்டுமே வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்ட வேண்டும். மீறினால் வேக வரம்பு மீறலுக்கான அபராதம் விதிக்கப்படும். ஆனால் மற்ற எமிரேட்டுகளில் சாலைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வேக வரம்பை விட கூடுதலாக 20 கிமீ அதிக வேகத்துடன் வாகனத்தை ஓட்டலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!