அமீரக செய்திகள்

சைக்கிள், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், பைக்குகளின் கூடாரமாக மாறும் அபுதாபி.. புதிய விதிகளை தெளிவுபடுத்திய ITC! – மீறினால் 500 திர்ஹம் வரை அபராதம்…

அபுதாபி சிட்டியின் முக்கிய சாலைகளில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு சைக்கிள், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், பைக் ஆகியவற்றை பயண்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. மேலும் ஓட்டுநர் உரிமம் இல்லாமலேயே இந்த வாகனங்களை அனைவரும் ஓட்ட முடியும் என்பதால் அபுதாபி இது போன்ற வாகனங்களுக்கு கூடாரமாக மாறி வருகிறது.

இந்நிலையில் இந்த வாகனங்களை ஓட்டுபவர்கள் சாலைகளில் பின்பற்ற வேண்டிய விதிகளை அபுதாபியின் ஒருங்கினைந்த போக்குவரத்து கழகம் (ITC) தெளிவுபடுத்தியுள்ளது. பொதுவாக இலகுரக வாகனங்களை சாலையில் ஓட்ட டிரைவிங் லைசன்ஸ் அவசியம். அதற்கு பதிலாக, சைக்கிள்கள், இருக்கைகள் இல்லாத ஸ்கூட்டர்கள் மற்றும் குறைந்த ஆற்றல் கொண்ட மின்சார பைக்குகள் போன்ற வாகனங்களை உள் சாலைகளிலும், பொருத்தமான தனிப்பட்ட பாதுகாப்பு கியர் அணியும் போதும் பயன்படுத்தலாம்.

அனுமதிக்கப்படும் வாகனங்கள்:

அபுதாபி சாலைகளில் சட்டப்பூர்வமாகப் பயன்படுத்த அனுமதிக்கப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளுக்கான பின்வரும் தேவைகளையும் ITC குறிப்பிட்டுள்ளது:

  • ஸ்கூட்டரின் உயரம் 165 சென்டிமீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • அகலம் 70 சென்டிமீட்டர் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
  • குறிப்பாக, வாகனத்தின் எடை 35 கிலோகிராம் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

சாலையில் பின்பற்ற வேண்டிய விதிகள்:

  1. போக்குவரத்து ஓட்டத்தின் திசைக்கு எதிராக சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை ஓட்ட கூடாது.
  2. அதிகபட்ச வேக வரம்புகள் மணிக்கு 60 கிலோமீட்டருக்கு மேல் இருக்கும் சாலையில் சைக்கிள் அல்லது ஸ்கூட்டர் ஓட்டுவதைத் தவிர்க்கவும்.
  3. நடைபயிற்சி மற்றும் ஓடுவதற்கு நியமிக்கப்பட்ட பகுதிகளில் சைக்கிள் அல்லது ஸ்கூட்டரை ஓட்ட வேண்டாம்.
  4. சைக்கிள் அல்லது ஸ்கூட்டரில் செல்லும் போது, ​​மற்றொரு நகரும் வாகனத்தைப் பிடித்துக் கொள்ளாதீர்கள்.
  5. ஒருவர் மட்டுமே ஸ்கூட்டரில் பயணிக்கவும்.
  6. எல்லா நேரங்களிலும் பாதுகாப்பு ஹெல்மெட் அணியவும், இருண்ட பகுதிகளில் ஓட்டும் போது பிரதிபலிப்பு ஆடைகளை அணியவும்.

விதி மீறலுக்கான தண்டனைகள்:

ITCயின் படி, இந்த வாகனப் பயன்பாட்டு விதிமுறைகளை மீறினால், ரைடருக்கு 200 திர்ஹம் முதல் 500 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!