அமீரக செய்திகள்

UAE: இரவில் தனியாக நடக்கும்போது பாதுகாப்பாக உணர்வதாகத் தெரிவித்த குடியிருப்பாளர்கள்..!! அபுதாபியில் மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த தகவல்….!!

உலகளவில் மக்களுக்கு பாதுகாப்பு தரும் நாடுகளில் முதல் வரிசையில் இருப்பது ஐக்கிய அரபு அமீரகம். குடியிருப்பாளர்கள் பகல், இரவு என எப்போது வேண்டுமானாலும் எங்கும் எவ்வித சிரமமோ பயமோ இல்லாமல் சென்று வரக்கூடிய இடமாக அமீரகம் திகழ்கிறது. ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆய்வுகளில் பெண்கள் எவ்வித பயமுமின்றி தனியாக செல்லக்கூடிய நாடுகளில் அமீரகம் எப்போதுமே முன்னணியிலேயே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அபுதாபியில் சமூக மேம்பாட்டுத் துறை (Department of Community Development DCD) மூலம் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், அபுதாபியில் 93 சதவீதத்திற்கும் அதிகமான குடியிருப்பாளர்கள், இரவில் தனியாக நடக்கும்போது பாதுகாப்பாக உணர்வதாகத் தெரிவித்துள்ளனர்.

அதுபோல, குவாலிட்டிஸ் ஆப் லைப் சர்வேயின் (Quality of Life Survey – QOLS) மூன்றாவது சுற்றுகளில் 82,761 சமூக உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதில் முந்தைய இரண்டு சுற்றுகளின் முடிவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பல முக்கிய தலைப்புகள் இந்த சுற்றில் இடம்பெற்றுள்ளன. அவை வீட்டுவசதி, வேலை வாய்ப்புகள், வருவாய், வேலை-வாழ்க்கை சமநிலை, சுகாதாரம், கல்வி மற்றும் திறன்கள், பாதுகாப்பு , சமூக உறவுகள், குடிமக்கள் பங்கேற்பு மற்றும் நிர்வாகம், சுற்றுச்சூழல் தரம், சமூக மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்பு, டிஜிட்டல் வாழ்க்கைத் தரம், மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வு போன்றவை ஆகும்.

மேலும், அபுதாபியில் உள்ள சமூக உறுப்பினர்களின் தேவைகளைக் கண்டறிய, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு (Organisation for Economic Cooperation and Development – OECD) நடத்திய கணக்கெடுப்பில் கூடுதல் தலைப்புகள் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆய்வின் முடிவுகள்:

அபுதாபியில் வசிப்பவர்களில் 93.5 சதவீதம் பேர் இரவில் தனியாக நடக்கும்போது பாதுகாப்பாக உணர்வதாகத் தெரிவித்துள்ளனர். இது கடந்த 2020 இல் பதிவுசெய்யப்பட்ட 93 சதவீதத்தை விட சற்று அதிகமாகும். அதுமட்டுமல்லாமல் இது அனைத்து OECD நாடுகளையும் விட அதிகம் ஆகும். அதுபோல, அபுதாபி மக்களில் 70 சதவீதம் பேர் தங்கள் வாழ்க்கைத் தரத்தில் திருப்தி அடைந்துள்ளனர், இதுவும் OECD சராசரியான 67 சதவீதத்தை விட அதிகமாகும்.

மேலும், மகிழ்ச்சியாக இருப்பதில் 7.63 மதிப்பெண்களும் (10 மதிப்பெண்களுக்கு), சமூக உறவுகளில் திருப்தி அடைவதாக ஒப்புக்கொண்டவர்களின் சதவீதம் 74 சதவீதமாகவும் அதேசமயம், குடும்ப வாழ்க்கையில் திருப்தியின் சதவீதம் 73 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, சுமார் 88.6 சதவீதம் மக்கள், அபுதாபியில் மத சுதந்திரத்தை உணர்வதாகத் தெரிவித்துள்ளனர். டிஜிட்டல் வாழ்க்கைத் தரம் எனும் போது, 88.7 சதவீத குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் இணைய சேவைகளை அனுபவிப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இது 2020 இல் பதிவு செய்யப்பட்ட 85.2 சதவீதத்தை விட அதிகமாகும்.

இதற்கிடையில், உடல்நலன் மற்றும் நல்வாழ்வுக்கான ஆய்வில், 51.2 சதவீத முதியவர்கள் தாங்கள் நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாக பதிலளித்துள்ளனர். அத்துடன், நிதிச் சுமைகள், பணிச்சுமைகள், குடும்ப உறவுகள், வேலை பாதுகாப்பு மற்றும் பணியிட உறவுகள் ஆகியவற்றின் காரணமாக பலர் மனஅழுத்தத்தை அனுபவித்ததாகத் தெரிவித்துள்ளனர். விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி குறிகாட்டியைப் பொறுத்தவரை, 60 சதவீத பங்கேற்பாளர்கள் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதற்கு நேரமின்மை ஒரு முக்கிய காரணம் என்று கூறியுள்ளனர்.

இந்த கணக்கெடுப்பானது அரபு, ஆங்கிலம், பெங்காலி, ஹிந்தி, டகாலாக் மற்றும் தெலுங்கு ஆகிய ஆறு மொழிகளில் இந்த சர்வே தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2020-2022 க்கு இடைப்பட்ட சுற்றுகளுக்கான கணக்கெடுப்பில், கிட்டத்தட்ட 200,000 சமூக உறுப்பினர்கள் – குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கலந்துகொண்டு தங்கள் எண்ணங்கள் மற்றும் பரிந்துரைகளைப் பகிர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!