அமீரக செய்திகள்

உணவுப் பாதுகாப்பு விதிகளுக்கு இணங்காத 10,987 உணவு நிறுவனங்களை எச்சரித்த அபுதாபி!! – முதல் காலாண்டில் மட்டும் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வுகளை நடத்திய ஆணையம் …

அபுதாபியில் இந்தாண்டின் முதல் காலாண்டில் உணவு பாதுகாப்பு விதிகளை மீறிய 10,987 உணவு நிறுவனங்களுக்கு அதிகாரிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தகவல் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது அபுதாபி வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆணையத்தால் (ADAFSA) வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதிகாரத்தால் பகிரப்பட்ட புள்ளிவிவரங்களின் படி, இந்தாண்டின் முதல் காலாண்டில் மட்டும் அபுதாபியில் உள்ள உணவு நிறுவனங்களில் சுமார் 33,643 கள ஆய்வுகள் நடத்தப்பட்டன என்றும் இவற்றில் அபுதாபியில் 20,001 சோதனைகளும், அல் அய்னில் 9,378 கள ஆய்வுகளும் மற்றும் அல் தஃப்ரா பகுதியில் 4,269 ஆய்வுகளும் நடத்தப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக இதுபோன்ற கள ஆய்வுகள், உணவு நிறுவனங்களில் ஏதேனும் முறைகேடுகள் மற்றும் விதிமீறல்களைக் கண்காணித்து அவற்றை சரி செய்வதற்காக நடத்தப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அபுதாபியில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் 46 சதவீத நிறுவனங்கள் அனைத்து உணவுப் பாதுகாப்புத் தேவைகளுக்கும் முழு இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளன என கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், 33 சதவீதத்தை உள்ளடக்கிய 10,987 நிறுவனங்களுக்கு சிறிய விதிமீறல்களைச் செய்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுபோல, இரண்டு சதவீதம் அதாவது 703 நிறுவனங்கள் குறைந்தபட்ச விகிதத்தில் விதிமீறல்களைச் செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து விதிமீறல்களைச் செய்த நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதே காலகட்டத்தில், அபுதாபி துறைமுகங்களில் சுமார் 23,866 உணவு ஏற்றுமதிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த ஆய்வில் ஆறு நிராகரிப்புகள் மட்டுமே பதிவான நிலையில், 23,860 உணவு ஏற்றுமதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆணையம் இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம், பாதுகாப்பான உணவுக்கான அணுகலை வழங்குவதுடன் சமூக நலன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதை உறுதி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உணவுப் பாதுகாப்பு முறையை மேம்படுத்துவதில் தீவிரமாகப் பங்களிக்குமாறு ADAFSA அழைப்பு விடுத்துள்ளது. எனவே, உணவு நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்பு விதிமீறல் அல்லது உணவுச் சுகாதாரம் தொடர்பாக சந்தேகம் போன்ற ஏதேனும் மீறல்கள் கண்டறியப்பட்டால் அபுதாபி அரசாங்கத்திற்கான கட்டணமில்லா எண்ணான 800 555ஐ அழைப்பதன் மூலம் புகாரளிக்கவும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

மக்களிடமிருந்து வரும் புகார்களை ADAFSA இன் வாடிக்கையாளர் மகிழ்ச்சிக் குழு கையாளும் என்றும் அபுதாபியில் உள்ள சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பான உணவை வழங்குவதை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்பதையும் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!