அமீரக செய்திகள்

துபாயில் கோடை வெயில் சுட்டெரிக்குதா.? இரவு நேரத்தில் குதூகலிக்க 24 மணி நேரமும் திறந்திருக்கும் கடற்கரைகள், ஜாகிங் டிராக், போர்டுவாக்.. அனைத்து தகவல்களும் இங்கே..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க நினைத்தாலோ அல்லது பகலில் கடற்கரைக்குச் செல்ல நேரம் கிடைக்காவிட்டாலோ நீங்கள் இரவில் துபாயின் கடற்கரைகளுக்கு சென்று ரசிக்கலாம். மேலும், கடலில் குளிக்க விரும்பினாலும் அல்லது உலா செல்ல விரும்பினாலும் துபாய் முனிசிபாலிட்டியின் கட்டுப்பாட்டில் உள்ள பொது கடற்கரைகளை 24 மணி நேரமும் அணுகலாம்.

கடந்த மே அன்று, துபாயில் உள்ள மூன்று கடற்கரைகளில் இரவு நீச்சல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பொது கடற்கரைகள் ஒவ்வொன்றிலும் 800 மீட்டர் உயர கலங்கரை விளக்கம் உள்ளது. இது குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை 24 மணி நேரமும் கடற்கரையில் நீந்தி மகிழ்வதற்கு உதவுகிறது. மேலும், கடற்கரைக்கு செல்பவர்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்துடன் எச்சரிக்கை உள்ளடக்கத்தை காண்பிக்கும் எலெக்ட்ரானிக் திரைகளும் கடற்கரையில் நிறுவப்பட்டுள்ளன.

இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில், கடற்கரைக்கு செல்பவர்கள் நியமிக்கப்பட்ட மண்டலங்களில் மட்டுமே இரவு நீச்சலில் ஈடுபட வேண்டும் என்றும் மற்ற பகுதிகளில் இருந்து கடலுக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் துபாய் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது. மேலும், கடற்கரைக்கு செல்லும் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக அதிநவீன மீட்பு மற்றும் அவசரகால கருவிகளுடன் கூடிய தகுதிவாய்ந்த உயிர்காப்பாளர்கள் கடற்கரைகளில் உள்ளனர் என்று நகராட்சி தெரிவித்துள்ளது.

1. ஜுமேரா 2 பீச்:

இந்த கடற்கரையில் ஒரு திறந்த உடற்பயிற்சி மையம், ஜாகிங் டிராக் மற்றும் போர்டுவாக் ஆகியவை உள்ளன. கடற்கரை ஓய்வறைகள், விளையாட்டு மைதானம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு கடற்கரை அணுகல் நடைபாதை போன்ற பிற வசதிகளும் உள்ளன. இவற்றுடன் எல்லா வயதினருக்கும் ஏற்ற புத்தகங்களைக் கொண்ட பீச் லைப்ரரியும் உள்ளது.

இடம்: இது ஜுமேரா ஓபன் பீச் (Jumeirah Open Beach) என்றும் அழைக்கப்படுகிறது, மெர்காடோ மாலுக்குப் பிறகு ஜுமேரா கடற்கரை சாலையில் (டி94) செல்லும்போது இந்த கடற்கரைப் பகுதியைக் காணலாம்.

2. ஜுமேரா 3 பீச்:

சுமார் 1,980 மீட்டர்கள் வரை நீண்டுள்ள இந்த கடற்கரை காத்தாடி விடும் பகுதி (kite surfing area), ஜாகிங் டிராக், போர்டுவாக் மற்றும் உடற்பயிற்சி பகுதிகள் போன்ற விளையாட்டு வசதிகளை ஜிம் உபகரணங்களுடன் வழங்கும். மேலும் இங்கு 125 மீட்டர் நீளமுள்ள ஹேப்பினஸ் தளமும் (happiness platform) உள்ளது, இது பார்வையாளர்கள் துபாயின் புகழ்பெற்ற சூரிய அஸ்தமனம் அல்லது பொழுதுபோக்கு மீன்பிடியை அனுபவிக்கவும் அனுமதிக்கிறது.

இடம்: ஜுமேரா கடற்கரை சாலையில் (D94) செல்லும்போது, நீங்கள் காணும் மூன்றாவது கடற்கரைப் பகுதி இதுவாகும். ஷேக் சயீத் சாலையில் (E11) உம் அல் ஷீஃப் சாலை வழியாக நீங்கள் இந்த கடற்கரையை அடையலாம்.

3. உம் சுகீம் 1 கடற்கரை:

‘கைட் பீச்’ என்று அழைக்கப்படும் இந்த கடற்கரை 2.4 கிமீ நீளத்திற்கு நீண்டுள்ளது. அத்துடன்  ஜுமேரா பகுதியில் அமைந்துள்ள பெரும்பாலான கடற்கரைகளைப் போலவே, இந்த கடற்கரையும் காத்தாடி விடும் பகுதி, ஜாகிங் டிராக் மற்றும் போர்டுவாக் போன்ற பல்வேறு விளையாட்டு வசதிகளை வழங்குகிறது.

கூடுதலாக, குழந்தைகள் விளையாட்டு மைதானம் மற்றும் மாற்றுத்திறனாளி மற்றும் வயதானவர்கள் அணுகக்கூடிய கடற்கரை காரிடார் இங்கு உள்ளன. நீச்சல் பகுதிகளில் இருந்து பாதுகாப்பாக பிரிக்கப்பட்ட பகுதிகளில் ஜெட் ஸ்கிஸ் மற்றும் பனானா படகுகள் ( jet skis and banana boats) போன்ற மோட்டார் பொருத்தப்பட்ட நீர் விளையாட்டுகளும் இங்கு உள்ளன.

இடம்: இந்த கடற்கரை ஜுமைரா கடற்கரைக்கு (D94) அருகில் உள்ளது. இந்த கடற்கரைக்குச் செல்ல 11A தெருவில் வலதுபுறம் செல்லவும்.

துபாயில் 24 மணிநேரமும் திறந்திருக்கும் மற்ற கடற்கரைகள்:

மேற்கூறிய கடற்கரைகள் மட்டுமின்றி, இரவில் பார்வையிடக் கூடிய மற்ற கடற்கரைகளும் துபாயில் உள்ளன. ஆனால், இவை இரவு நீச்சலை அனுமதிப்பதில்லை. இருப்பினும், இந்த கடற்கரைகளில் அமைந்துள்ள போர்டுவாக்குகள், ஜாகிங் டிராக்குகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் திறந்த உடற்பயிற்சி கூடங்களை எந்த நேரத்திலும் நீங்கள் அணுகலாம். சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை மீட்புப் பாதுகாவலர்கள் இருக்கும் போது மட்டுமே இங்கு நீச்சலுக்கு அனுமதிக்கப்படுகிறது.

1. ஜுமேரா 1 கடற்கரை:

முற்றிலும் நீச்சலுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கடற்கரையில் சுமார் 1,350 மீட்டர் நீளமுள்ள ஜாகிங் டிராக் உள்ளது. பெரும்பாலும் ஜுமேரா பகுதி குடியிருப்பாளர்கள் அடிக்கடி வந்து செல்லும் இந்த பொது கடற்கரை மிகவும் அமைதியானது என்று துபாய் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.

2. உம் சுகீம் 2 கடற்கரை:

இந்த கடற்கரை 615 மீட்டர் நீளம் கொண்டது, இங்கு நீச்சல் மற்றும் சர்ஃபிங்கிற்கு தனித்தனி பகுதிகள் உள்ளன. மேலும், ஒரு பிரத்யேக பாதையில் ஜாகிங் செய்யலாம் மற்றும் இதற்கு அருகில் உம் சுகீம் பூங்காவும் உள்ளது.

இடம்: புர்ஜ் அல் அரபுக்கு ஒரு கிலோமீட்டர் முன்பு, 41A தெருவில் வலதுபுறம் சென்று, உள் சமூக சாலைகள் வழியாகச் சென்றால் கடற்கரையை அடையலாம்.

3. அல் மம்சார் கார்னிச் கடற்கரை:

சர்பிங் போன்ற நீர் விளையாட்டுகளில் இருந்து விலகி அமைதியான நேரத்தைக் கழிக்க விரும்பும் நீச்சல் வீரர்களுக்கு இந்த கடற்கரை பொருத்தமானது. 760 மீட்டர் நீளத்திற்கு நீண்டுள்ள இந்த கடற்கரையில் அனைத்து வயதினரும் பயன்படுத்தும் வகையிலான நூலகம், குழந்தைகள் விளையாட்டு மைதானம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு கடற்கரை அணுகல் காரிடார் போன்ற வசதிகள் உள்ளன.

இடம்: அல் கலீஜ் ஸ்ட்ரீட்டில் (D92) வாகனம் ஓட்டும்போது கடற்கரைப் பகுதியை அணுகலாம். இந்த பாதையில் அல் மம்சார் கடற்கரை பூங்காவிற்கு முன்பாக இந்த கடற்கரை பகுதி உள்ளது.

4. அல் மம்சார் லகூன் கடற்கரை:

3.5 கிலோமீட்டர்கள் நீளமுள்ள இந்த கடற்கரையில் உடற்பயிற்சி சாதனங்கள், நடைபயிற்சி மற்றும் ஜாகிங் டிராக் மற்றும் சைக்கிள் டிராக் ஆகியவற்றுடன் உடற்பயிற்சி பகுதிகளையும் அனுபவிக்கலாம்.

இடம்: அல் கலீஜ் ஸ்ட்ரீட்டில் (டி92) செல்லும் போது, ​​அல் மம்சார் கார்னிச் கடற்கரையையும், அல் மம்சார் பூங்காவையும் கடந்து செல்ல வேண்டும். லகூன் கடற்கரை உங்கள் இடதுபுறத்தில் இருக்கும்.

மெட்ரோ மற்றும் பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்து வசதிகளில் கடற்கரைகளுக்கு எவ்வாறு செல்லலாம்?

1. ஜுமேரா 1 மற்றும் 2 கடற்கரை:

துபாய் மெட்ரோ ரெட் லைனில் சென்று ஜாஃபாலியாவில் அமைந்துள்ள மேக்ஸ் மெட்ரோ நிலையத்தில் இறங்கி, அடுத்து Max Metro Bus Stop Seaside exitக்குச் சென்று, X28 பேருந்துப் பாதையில், செஞ்சுரி பிளாசா பேருந்து நிறுத்தத்திற்குச் சென்று, ‘Jumeirah Open Beach’ ஐ அடைய சுமார் எட்டு நிமிடங்கள் நடந்து செல்ல வேண்டும். பேருந்து பயணத்திற்கு சுமார் 3 திர்ஹம் செலவாகும்.

2. ஜுமேரா 3 கடற்கரைக்கு பேருந்து:

பர் துபாயில் உள்ள அல் குபைபா பேருந்து நிலையத்திலிருந்து, ஜுமைரா 3, மஸ்ஜித் 1 பேருந்து நிறுத்தத்திற்கு F8 பேருந்தில் செல்லவும். பின்னர் ஏழு நிமிடங்கள் நடந்து சென்றால் கடற்கரையை அடையலாம். பேருந்து பயணத்திற்கு சுமார் 3 திர்ஹம் செலவாகும்.

3. பேருந்தில் உம் சுகீம் 1 கடற்கரைக்குப் பயணித்தல்:

துபாய் மால் மெயின் என்ட்ரன்ஸ் பஸ் ஸ்டேஷனில் (Dubai Mall Main Entrance Bus Station) இருந்து, Umm Suqeim 1 -1 பேருந்து நிறுத்தத்திற்கு F81 வழியைப் பயன்படுத்தவும். பின்னர், பேருந்து நிறுத்தத்தில் இருந்து எட்டு நிமிடம் நடந்து சென்றால், கடற்கரையை அடையலாம். இதற்கு 4 திர்ஹம் செலவாகும்.

உம் சுகேம் 1 கடற்கரைக்கு (கைட் பீச்) மிக அருகில் உள்ள மெட்ரோ நிலையம், ஆன் பாஸிவ் மெட்ரோ ரயில் நிலையத்தில் (On Passive Metro Station) உள்ளது. ஆன் பாஸிவ் மெட்ரோ ஸ்டேஷன் கடற்கரையிலிருந்து வெளியேறி, டாக்ஸியில் செல்லவும். டாக்ஸி பயணத்திற்கு சுமார் 13 முதல் 15 திர்ஹம் வரை செலவாகும்.

4. உம் சுகீம் 2 கடற்கரைக்கு பேருந்தில் பயணித்தல்:

துபாய் மால் மெயின் என்ட்ரான்ஸ் பேருந்து நிலையத்திலிருந்து உம் சுகீம் பார்க் பேருந்து நிறுத்தத்திற்கு F81 வழியைப் பயன்படுத்தி பயணிக்கலாம்.

5. அல் மம்சார் கடற்கரைக்கு மெட்ரோ மற்றும் டாக்ஸியில் பயணம்:

அல் மம்ஸார் பூங்காவிற்கு அருகில் நடந்து செல்லும் தூரத்தில் துபாய் மெட்ரோ நிலையம் இல்லை என்றாலும், பசுமை வழித்தடத்தில் உள்ள அல் கியாதா மெட்ரோ நிலையம் மற்றும் அபு ஹைல் மெட்ரோ நிலையம் ஆகியவை மிக அருகில் உள்ளன.

மெட்ரோ நிலையத்திலிருந்து RTA டாக்ஸியில் செல்லலாம், இதன் விலை சுமார் 13 முதல் 15 திர்ஹம் வரை இருக்கும். மேலும், அபு ஹைல் மெட்ரோ நிலையத்திலிருந்து பேருந்தில் செல்ல விரும்பினால், C10 மற்றும் C28  ஆகிய இரண்டு பேருந்து வழித்தடங்களில் செல்லலாம். இவை இரண்டும் அல் மம்சார் கடற்கரை பேருந்து நிறுத்தத்தைக் கடந்து செல்கின்றன. பயணத்திற்கு 3 Dh செலவாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!