வந்தாச்சு ‘துபாய் சம்மர் சர்ப்ரைஸ் – 2023’..!! மெகா விற்பனை சலுகைகளுடன் இம்மாத இறுதியில் தொடங்கும் என DFRE அறிவிப்பு..!!

ஒவ்வொரு வருடமும் கோடை காலங்களில் துபாய் குடியிருப்பாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘துபாய் சம்மர் சர்ப்ரைஸ் (Dubai Summer Surprise – DSS)’ இந்தாண்டு அதன் 26வது பதிப்பில் அதிரடி விற்பனை மற்றும் மெகா பொழுதுபோக்கு சலுகைகளுடன் அடியெடுத்து வைக்க உள்ளது. சுமார் 67 நாட்கள் கண்கவர் வானவேடிக்கை மற்றும் அதிரடி தள்ளுபடிகளுடன் களைகட்டும் DSSஐ துபாய் பெஸ்டிவல்ஸ் மற்றும் ரீடெயில் எஸ்டாப்ளிஷ்மென்ட் (DFRE) நிறுவனம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து வருகிறது.
அதன்படி, இந்தாண்டிற்கான அதன் 26வது பதிப்பு எதிர்வரும் ஜூன் 29 அன்று, வண்ணமயமான அலங்காரங்களுடன் தொடங்கி செப்டம்பர் 3 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தாண்டு, குடியிருப்பாளர்களையும் பார்வையாளர்களையும் பிரமிக்க வைக்கும் உற்சாகமான ஷாப்பிங் பெஸ்டிவல், மெகா விற்பனை சலுகை, பொழுதுபோக்கு மற்றும் உணவுப் பிரியர்களைக் கவர்ந்திழுக்கும் பல்வகை உணவுகள் போன்ற அளவில்லா கொண்டாட்டத்திற்கு DSS உறுதியளிக்கும் என்றும் கூறப்படுகிறது.
அத்துடன், இந்த ஆண்டின் DSS நிகழ்வுகளின் முழுமையான காலண்டர் வரும் ஜூன் 20 ம் தேதி அன்று வெளியிடப்படும் என்றும், இது கோடைக்காலத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்பது குறித்த விரிவான வழிகாட்டியைக் கொண்டிருக்கும் என்றும் இதனை ஆண்டுதோரும் நடத்திவரும் DFRE தெரிவித்துள்ளது.
மேலும், நீண்ட விடுமுறை நாட்களுடன் வரவிருக்கும் தியாகத் திருநாளான ஈத் அல் அதாவின் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களுடன் இணைந்து DSS கொண்டாட்டமும் வருவதால், அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் இசைக் கச்சேரிகள், வானவேடிக்கை நிகழ்வுகள் மற்றும் பல அற்புதமான அனுபவங்களை இந்த ஆண்டு கண்டு மகிழலாம் எனவும் DFRE கூறியுள்ளது.
ரேஃபிள் டிரா மற்றும் சலுகைகள்:
DSS ஆனது, இதில் கலந்து கொள்ளும் பார்வையாளர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் ரேஃபிள் டிராக்கள், நம்ப முடியாத ரீடெய்ல் ப்ரோமோஷன்கள், பலவிதமான கேஸ்ட்ரோனமி விருப்பங்கள் மற்றும் பல்வேறு ஹோட்டல்களில் Kids Go Free சலுகைகள் போன்றவற்றை வழங்கும். கூடுதலாக, நகரம் முழுவதும் மிகவும் பிரபலமான மால்கள் மற்றும் விரும்பப்படும் இடங்கள் ஆகியவற்றில் குடும்பத்திற்கு ஏற்ற பல அனுபவங்கள் நடைபெறும் இந்த சீசன் முழுவதும் நடைபெறும்.
கச்சேரி நிகழ்வுகள்:
இந்தாண்டு DSS பதிப்பு ஈத் அல் அதா கொண்டாட்டத்துடன் வருவதால், பண்டிகையைக் கொண்டாடும் விதமாக, ஜூலை 1 ஆம் தேதி கோகோ கோலா அரங்கில் இசை ஜாம்பவானான ஹுசைன் அல் ஜாஸ்மி மற்றும் காடிம் அல் சாஹிர் ஆகியோரின் கச்சேரி நடக்கவுள்ளது. இதனையடுத்து ஜூலை 2 ஆம் தேதி அதே அரங்கில், சவுதி அரேபிய ஜாம்பவான் முகமது அப்டோவின் கலைநிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.