அமீரக செய்திகள்

UAE: மரணத்திற்கு வழிவகுக்கும் CO எனும் நச்சுவாயு..!! வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஒர்க்‌ஷாப்பை நடத்திய காவல்துறை..!!

பொதுவாக வாகனங்களுக்குள் கார்பன் மோனாக்ஸைடு என்ற நச்சு வாயு கலப்பதற்கான காரணங்களையும் அதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு பதிவு ஒன்றை துபாய் காவல்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தி ஒன்றில் வாகனங்களில் இருந்து அதிகப்படியாக வெளியேற்றப்படும் CO வாயு ஒரு ‘silent killer’ என்று உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் அதற்கு வாசனையோ நிறமோ இல்லை என்றும் மேலும் மூடப்பட்ட பகுதிகளில் அதன் செறிவைக் கண்டறிந்து தீர்மானிப்பது கடினம் என்றும் கூறியுள்ளார்.

துபாயில் விஷவியல் நிபுணரும், சிறப்பு தடயவியல் சான்றுகள் துறையின் இயக்குநருமான இப்திசம் அப்துல் ரஹ்மான் அல் அப்துலி என்பவர், இது குறித்து விளக்கமளிக்கையில், இந்த கார்பன் மோனாக்ஸைடு என்ற நச்சு வாயு தற்செயலாக உள்ளிழுக்கப்படலாம் மற்றும் இதன் விளைவாக சிலர் தலைவலி, பலவீனம், தலைச்சுற்றல், குமட்டல் அல்லது வாந்தி போன்ற சிறிய உடல் பாதிப்புகளை அனுபவிக்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த நச்சு வாயு உடலில் அதிகமாக இருந்தால், அது சுயநினைவை இழந்து இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். துபாய் காவல்துறையின் படி, வாகனங்களில் CO விஷம் ஏற்படுவதற்கான மூன்று முக்கிய காரணங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன. அவை:

  1. பழைய வாகனங்களுக்கு போதிய பராமரிப்பின்மை.
  2. மூடிய இடங்களில் நீண்ட நேரம் வாகனங்களை இயக்குதல்: உதாரணமாக, சிலர் பார்க்கிங் பகுதிகளில் வாகனத்தை நிறுத்தி விட்டு எஞ்சின் மற்றும் ஏசியை இயக்குகின்றனர். அப்போது, ​​வாகனம் CO கலந்த காற்றை ஏசி வென்ட்கள் மூலம் இழுக்கிறது.
  3. பவர் பூஸ்டர்களை நிறுவுதல் உட்பட எஞ்சின் மாற்றம்:  அதுபோல, வாகனங்களில் வேகத்தை அதிகரிக்க சட்டவிரோதமாக பின்புறத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்தால் அதிகப்படியான CO வெளியேற்றப்படும்.

இந்நிலையில், துபாய் காவல்துறை வாகனங்களில் CO குறித்த விழிப்புணர்வு ஒர்க் ஷாப்பை சமீபத்தில் நடத்தியுள்ளது. அப்போது, பின்வரும் நான்கு முக்கிய தலைப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.

  • பழைய வாகனங்களை ஆய்வு செய்வதற்கும் புதுப்பிப்பதற்கும் நடவடிக்கைகளை எடுத்தல்
  • சமூக ஊடக சேனல்கள் மூலம் அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
  • அசம்பாவிதங்கள் ஏற்படுவதை குறைப்பதற்கான வழிகள்
  • உள்ளூர் மற்றும் கூட்டாட்சி சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள்.

இதற்கிடையில், தொழில்துறை மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைச்சகத்தின் விவரக்குறிப்புகள் துறையின் செயல் இயக்குனர் யூசுப் அல் மர்சூகி என்பவர், வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சு வாயுவின் தரத்தை மதிப்பிடுவதற்கான தரநிலைகள் மற்றும் நடவடிக்கைகளை நிறுவ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

CO வாயு எவ்வாறு மரணத்தை ஏற்படுத்தும்?

CO என்பது பெட்ரோல், இயற்கை எரிவாயு, எண்ணெய், நிலக்கரி மற்றும் மரம் போன்ற கார்பன் கொண்ட எரிபொருளின் முழுமையடையாத எரிப்பு மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு நச்சு வாயு என்று விஷவியல் நிபுணர் அல் அப்தூலி தெரிவித்துள்ளார்.

பொதுவாக, மூடிய பகுதிகளில் நெருப்பு எரியும் போது, ஆக்ஸிஜன் படிப்படியாக குறைந்து கார்பன் மோனாக்ஸைடு வாயு அதிகரிக்கிறது. இது தீவிர திசு மற்றும் செல் சேதம் மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கிறது. மேலும், CO குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லாமை மற்றும் தவறான நடைமுறைகளால் உலகளவில் பல இறப்புகளுக்கு காரணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, நாட்டில் CO நச்சுத்தன்மையால் குடியிருப்பாளர்கள் உயிரிழந்த பல சம்பவங்கள் உள்ளன. இந்தாண்டின் தொடக்கத்தில் கூட, இரண்டு வீட்டுப் பணியாளர்கள் தங்கள் அறையை சூடாக்குவதற்காக ஒரே இரவில் கரியை எரித்ததால் விஷ வாயுவை சுவாசித்து இறந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் 2020 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் பதிவாகியுள்ளன. குறிப்பாக, ஒருவருக்கு CO விஷம் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால், முதலில் செய்ய வேண்டியது, அவர்களை உடனடியாக காற்றுடன் கூடிய திறந்தவெளிக்கு அழைத்துச் சென்று அவசர மருத்துவ உதவிக்கு அழைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!