அமீரக செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து அதிகளவு துபாய்க்கு பயணித்தவர்களில் இந்தியர்கள் முதலிடம்..!! எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா..??

கடந்த 2022 ஆம் ஆண்டில் துபாய் சர்வதேச (DXB) விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகளின் போக்குவரத்தைப் பொறுத்த வரை இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, யுனைடெட் கிங்டம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இது தொடர்பாக துபாய் ஏர்போர்ட்ஸ் வெளியிட்ட வருடாந்திர புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் இருந்து 9.8 மில்லியன் பயணிகள் கடந்த ஆண்டு துபாய்க்கு பயணம் செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இது வேறு எந்த நாடுகளிலிருந்தும் இல்லாத அளவிற்கு அதிகபட்ச எண்ணிக்கை ஆகும்.

மேலும் சவூதி அரேபியாவிலிருந்து 4.9 மில்லியன் பயணிகளும், இங்கிலாந்தில் இருந்து 4.6 மில்லியன் பயணிகளும், பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து முறையே 3.7 மில்லியன், 3 மில்லியன், 1.9 மில்லியன் மற்றும் 1.6 மில்லியன் பயணிகளும் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சென்றுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

அதுபோலவே, இந்தியா உட்பட சவூதி அரேபியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் துபாய் சுற்றுலாவின் மூல சந்தைகளாக இருந்துள்ள நிலையில், கடந்த ஆண்டு இந்தியா, சவூதி அரேபியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து துபாய்க்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே 1.84 மில்லியன், 1.21 மில்லியன், 1.04 மில்லியன் மற்றும் 356,000 என்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நகரங்களைப் பொறுத்தவரை, 2022 ஆம் ஆண்டில் துபாய் விமான நிலையத்திற்கு மூன்று மில்லியன் பயணிகளுடன் முதலிடத்தில் லண்டனும், அதனைத் தொடர்ந்து ரியாத் 2 மில்லியன் பயணிகளையும், மும்பை 1.9 மில்லியன் பயணிகளையும், ஜித்தா மற்றும் புது டெல்லி ஆகிய இரண்டு நகரங்களும் 1.7 மில்லியன் பயணிகளையும் கொண்டு அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன என கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், இந்திய விமான நிலையத்தின் மாதாந்திர தரவுகளின்படி,  ஜனவரி 2023 இல் மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கான சிறந்த இடமாக துபாய் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் உலகின் மிகவும் பரபரப்பான துபாய் சர்வதேச விமான நிலையமானது தற்போது 99 நாடுகளில் உள்ள 229 இடங்களுக்கு 88 க்கும் மேற்பட்ட சர்வதேச கேரியர்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துபாயின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை (Department of Economy and Tourism) சமீபத்தில் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கையை துபாய் எமிரேட் இரட்டிப்பாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி துபாய் சர்வதேச விமான நிலையம் சுமார் 14.36 மில்லியன் பயணிகளைப் பதிவு செய்து ஆண்டுக்கு 97 சதவீத அதிகரிப்பை காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கிடையில், துபாய் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்க வலுவான ஒழுங்குமுறை முயற்சிகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. அவற்றின் ஒரு பகுதியாக, செப்டம்பர் 2022 முதல் சிக்கல் இல்லாத நுழைவு (Hassle free entry) நடைமுறைகளில் கிடைக்கக்கூடிய வணிகம் மற்றும் ஓய்வுநேரப் பயணிகளுக்கான (leisure travellers) 60 நாள் சுற்றுலா விசா மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் ஊழியர்களுக்கான ஐந்தாண்டு மல்டிபிள் என்ட்ரி விசா ஆகியவை அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!