அமீரக செய்திகள்

துபாய்-ஷார்ஜா இடையேயான முக்கிய நெடுஞ்சாலையில் மேம்பாட்டுப் பணி நிறைவு!! – வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..

ஷார்ஜாவில் உள்ள அல் இத்திஹாத் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வந்த போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டத்தை நிறைவு செய்துள்ளதாக ஷார்ஜாவின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (SRTA) அறிவித்துள்ளது. இதன் மூலம் துபாய் முதல் ஷார்ஜா வரை பயணிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் திறனை இது அதிகரிக்கும் என்றும், தமனி சாலையில் (arterial road) போக்குவரத்தை எளிதாக்கும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த இந்த பணிகள் மே மாதம் இறுதியில் நிறைவடைந்ததை தொடர்ந்து வாகன ஓட்டுநர்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த சாலை பணிகள் குறித்து SRTA வெளியிட்டுள்ள வீடியோவின் படி, அல் இத்திஹாத் சாலையிலிருந்து அல் கான் நோக்கி வெளியேற கூடுதல் பாதை சேர்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஷார்ஜாவில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், சஃபீர் மால் அருகே மேற்கொள்ளப்பட்ட சாலை விரிவாக்கம் அல் மஜாஸ், கார்னிச் மற்றும் ரோலா பகுதிகளை நோக்கி செல்லும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது இத்திஹாத் சாலையைப் பயன்படுத்தி கிங் பைசல் சாலை மற்றும் அஜ்மான் நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் நிவாரணம் அளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அவரை தொடர்ந்து, தினசரி அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குச் செல்வதற்கு துபாய்-ஷார்ஜா வழியைப் பயன்படுத்தும் மற்றொரு நபர் பேசுகையில், கூடுதலாக ஒரு பாதை சேர்க்கப்பட்டிருப்பது நிம்மதியாக இருப்பதாகவும், இதனால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் விரைவாக பயணிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சர்வீஸ் சாலை மற்றும் நடைபாதைகளில் மாற்றங்களைச் செயல்படுத்தி, பார்க்கிங் இடங்களை உள்ளடக்கியதாக SRTA தெரிவித்துள்ளது. மேலும், இந்த மேம்பாட்டு நடவடிக்கைகள் சாலை பயனர்களின் உள்கட்டமைப்பு தேவைகளை நிவர்த்தி செய்ய மேற்கொள்ளப்பட்டதாகவும் SRTA தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளது.

ஷார்ஜாவையும் துபாயையும் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையான அல் இத்திஹாத் சாலை, பீக் ஹவர்ஸ் எனப்படும் ஒரே நேரத்தில் அதிகம் பேர் சாலையை பயண்படுத்தும் முக்கியமான நேரங்களின் போது, கடும் போக்குவரத்து நெரிசலைச் சந்திக்கிறது. இதன் காரணமாக கடந்த 2019 இல், UAE இன் உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சகம் இந்த சாலையில் போக்குவரத்து ஓட்டத்தை அதிகரிக்க 230 மில்லியன் திர்ஹம் மதிப்பிலான திட்டத்தை அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, அல் நஹ்தா மற்றும் குலாஃபா அல் ரஷிதீன் சந்திப்புகளை மேம்படுத்துவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு திசையிலும் ஒரு மணி நேரத்திற்கு 3,000 வாகனங்கள் செல்லும் அளவிற்கு சாலையின் திறன் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!