அமீரக செய்திகள்

DXB-யில் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை..!! பயணிகளைக் கையாள மெகா விரிவாக்கத் திட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்..!!

உலகின் மிகவும் பிஸியான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) அடுத்த 10 ஆண்டுகளில் அதிகபட்ச பயணிகளைக் கையாளும் நோக்கில், சுமார் 6 பில்லியன் முதல் 10 பில்லியன் திர்ஹம் வரையிலான செலவில் மெகா விரிவாக்கத்தைத் திட்டமிட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

சமீப காலமாக துபாய் விமான நிலையத்தில் தொடர்ந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது. அதேபோல் துபாயின் சர்வதேச விமான மையம் இந்த ஆண்டுக்கான பயணிகளின் எண்ணிக்கையை 83.6 மில்லியனாக கணித்திருந்த நிலையில் பயணிகளின் எண்ணிகை அதிகரித்து வருவதன் காரணமாக தற்பொழுது அதனை 85 மில்லியனாக அதிகரித்துள்ளது.

அதாவது 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுமார் 41.6 மில்லியன் பயணிகள் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் (DXB) வழியாகப் பயணம் செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 49 சதவிகிதம் அதிகமாக இருப்பதாகவும் 2019 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பதிவான எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து துபாய் ஏர்போர்ட்ஸ் CEO பால் கிரிஃபித்ஸ் (Paul Griffiths) அவர்களின் கூற்றுப்படி, இந்த விரிவாக்கத் திட்டத்தில் ஓய்வறைகளைச் (lounge) சேர்ப்பது, அதிக சுழற்சி பகுதிகளை (circulation space) உருவாக்குதல், ரிமோட் கேட் செயல்பாடுகளை மறுசீரமைத்தல் மற்றும் புதிய தொழில்நுட்பத்தில் முதலீடு செய்தல் ஆகியவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, விமான நிலையம் ஒரு புதிய ஸ்கேனிங் இயந்திரத்தையும் பரிசோதித்து வருவதாகவும், இந்த இயந்திரம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கள் பைகளில் இருந்து திரவங்கள் அல்லது மடிக்கணினிகளை அகற்ற வேண்டியதில்லை என்றும் கிரிஃபித்ஸ் கூறியுள்ளார்.

மேலும் அவர் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் செயல்பாட்டை விரிவுபடுத்துவதில் கணிசமான அளவு முதலீடு செய்வதே குறுகிய கால இலக்கு என்று தெரிவித்த கிரிஃபித்ஸ் “அதே நேரம் DXB-யின் பயணிகளை கையாளும் திறனானது அதிகரித்து அனைத்து திறன்களையும் பயன்படுத்திய காலகட்டம் வரும். மேலும் DWC எனும் துபாயின் இரண்டாவது விமான நிலையமான அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் ஆண்டுதோறும் 32 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்ட சூழ்நிலை வரும். அந்த கட்டத்திற்கு அப்பால், 2030 களின் நடுப்பகுதியில் புதிய விமான நிலையத்திற்கான நீண்ட கால விரிவாக்கத்திற்கான செயல்பாடுகளை நாங்கள் பார்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

DXBயில் தற்பொழுது 118-120 மில்லியன் பயணிகளை கையாள முடியும் என்றாலும், தற்பொழுது 26.5 மில்லியன் கையாளும் திறன் கொண்ட DWCஇல் 2 ஆம் கட்ட விரிவாக்கத்தை முடித்த பிறகு 240 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக உயரும் என்று கூறப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!