ADVERTISEMENT

நாடு, மதம் பேதமின்றி புற்றுநோயாளிகளுக்கு பிரத்யேக டிஸ்கவுன்ட் கார்டை அறிமுகம் செய்த அமீரகம்.. மருத்துவச் செலவு, நிதிச்சுமைகளை சமாளிக்க புதிய முயற்சி..!!

Published: 29 Jun 2023, 11:31 AM |
Updated: 29 Jun 2023, 11:39 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் புற்றுநோயாளிகளுக்கென புதிய டிஸ்கவுன்ட் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Fazaa எனும் இந்தத் தள்ளுபடி கார்டு மூலம், அவர்களின் நிதிச் சுமைகள், மருந்து மற்றும் மருத்துவ சிகிச்சை செலவுகள், உணவு, பானம், உடைகள் மற்றும் அன்றாட தேவைகளை கூட சமாளிக்கலாம் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

குறிப்பாக, உள்ளூர் சந்தையில் இருந்து வாங்கும் பெரும்பாலான பொருட்களை நியாயமான விலையில் பெறுவதற்கும், தள்ளுபடிகளைப் பெறுவதற்கும் இது உதவும் என்று கூறப்படுகிறது. எனவே, புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் நோயாளி யாவரும், இன்று அமீரகத்தில் உள்ள நவீன மருத்துவ முறைகள் மூலம் உகந்த சிகிச்சையைப் பெற முடியும். மேலும் அதனை தோற்கடிக்கக்கூடிய நோய்களில் ஒன்றாகவும் மாற்றிவிடலாம்.

புற்றுநோயாளிகளுக்கென பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த Fazaa கார்டை வழங்குவதற்காக, புற்றுநோய் நோயாளிகள் பராமரிப்பு சங்கத்தின் (Rahma) இயக்குநர்கள் குழுவின் தலைவரான டாக்டர் ஜமால் சனத் அல் சுவைதியின் வழிகாட்டுதலின் கீழ், உள்துறை அமைச்சகத்தில் சமூக ஒற்றுமை நிதியத்துடன் (Social Solidarity Fund) புற்றுநோய் சங்கம் ஒரு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளது.

ADVERTISEMENT

அதுமட்டுமின்றி, இந்த டிஸ்கவுன்ட் கார்டு ஒரு குறிப்பிட்ட தேசத்திற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவிற்கோ ஒதுக்கப்படாது, மாறாக எந்த வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவராயினும், அவர் எந்த நாட்டைச் சேரந்தவராக இருந்தாலும் அல்லது எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அமீரகத்தில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் இது வழங்கப்படும் என்று புற்றுநோய் சங்கத்தின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விண்ணப்பிக்கும் முறை:

Rahma இணையதளத்தின் மூலம் ஒவ்வொரு புற்றுநோயாளியும் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு அவர்களுக்கு புற்றுநோய் உள்ளது என்பதற்கான மருத்துவ அறிக்கை அல்லது ஏதேனும் ஒரு மருத்துவமனையிலிருந்து அதிகாரப்பூர்வ கடிதத்தை வழங்க வேண்டும். அதனையடுத்து எந்த கட்டணமும் இல்லாமல் இந்த கார்டை பெற்றுக்கொள்ளலாம்.

ADVERTISEMENT

அதேசமயம், நாட்டில் உள்ள அனைத்து புற்றுநோயாளிகள், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள், 80090 என்ற எண்ணில் ரஹ்மா அசோசியேஷன் அல்லது pr@rahma.org.ae மூலம் தொடர்பு கொண்டு Fazaa கார்டைப் பெறலாம் என்றும் Rahma ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.