அமீரக செய்திகள்

அபுதாபியில் திறக்கப்பட்ட முதல் ‘FacePay ஸ்டோர்’..!! – இனி பணம் செலுத்த முகத்தை ஸ்கேன் செய்தாலே போதும்..!!

வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் விதமாக, FacePay மூலம் முகத்தை ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் புதித தொழில்நுட்ப வசதியைக் கொண்ட முதல் B ஸ்டோரை, அஸ்ட்ரா டெக் நிறுவனம் அபுதாபியின் ரீம் ஐலேண்டில் உள்ள ஸ்கை டவரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அமீரக தலைநகரின் சில்லறை வர்த்தகத்தில் ஒரு வரலாற்று மாற்றத்தை உருவாக்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த புதிய மற்றும் வசதியான ஸ்டோர், வாடிக்கையாளர்களுக்கு தானாகவே ஷாப்பிங் செய்யும் அனுபவத்தை வழங்குவதற்காக, மேம்பட்ட AI தொழில்நுட்பம் மற்றும் கிளவுட் (cloud) அமைப்புகளை ஒருங்கிணைப்பதன் மூலம் FacePay ஐப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. எனவே, வாடிக்கையாளர்கள் ஜூஸ், காபி, ரொட்டி மற்றும் சிற்றுண்டிகள் போன்ற உணவுப் பொருட்களை வாங்கியதற்கு பணம் செலுத்த அவர்களின் முகத்தை ஸ்கேன் செய்தால் மட்டுமே போதும்.

இந்த புதிய நடவடிக்கை சில்லறை விற்பனை எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை வாடிக்கையாளர்களுக்கு உணர்த்தும் என்று அஸ்ட்ரா டெக்கின் இ-காமர்ஸ் இயக்குனர் வலேரியா தோர்ஸ் என்பவர் கூறியுள்ளார். அத்துடன் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் இந்த புதுமையான முயற்சியானது, வாடிக்கையாளர்களுக்கு வசதியையும் பாதுகாப்பையும் வழங்குவதுடன் பாரம்பரிய ஷாப்பிங் முறைகளை முற்றிலும் மாற்றியமைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்திய செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் வழங்கப்படும் ஷாப்பிங் அனுபவங்களில் இந்த ஸ்டோரும் ஒன்றாகும். ஏற்கனவே, துபாயில் இதே தொழில்நுட்பத்தில் இயங்கும் Carrefour City+ கன்வீனியன்ஸ் ஸ்டோரை செயற்கை நுண்ணறிவுக்கான மாநில அமைச்சர் ஒமர் பின் சுல்தான் அல் ஓலாமா அவர்கள் திறந்து வைத்துள்ளார்.

எப்படி செயல்படுகிறது?

அஸ்ட்ரா டெக் செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, நுழைவு வாயிலில் ‘Tap or Scan to Enter’ என்ற செய்தியைக் காட்டும் திரையுடன் வாடிக்கையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள், பின்னர், பேங்க் கார்டு அல்லது FacePay போன்ற பணம் செலுத்துவதற்கான விருப்பம் வழங்கப்படும். FacePay ஐப் பயன்படுத்த விரும்பினால், வாடிக்கையாளர்கள் FacePay ஆப்-ஐ டவுன்லோட் செய்து பதிவு செய்ய வேண்டும்.

அதைத் தவிர கார்டு பேமெண்ட் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள், தங்கள் கார்டுகளை மெஷினில் தட்ட வேண்டும். அதுபோல, FacePay ஐப் பயன்படுத்த ஃபேஸ்பே இயந்திரத்திற்குச் சென்று முகத்தைக் காட்ட வேண்டும். எனவே, வாடிக்கையாளர்கள் கட்டண முறையைத் தீர்மானித்தவுடன், கதவுகள் திறக்கப்பட்டு, அவர்களுக்கு கடைக்கு அணுகல் வழங்கப்படுகிறது.

பின்னர் கடையின் உள்ளே சென்றதும், வாடிக்கையாளர்கள் எந்தெந்த பொருட்களை எடுக்கிறார்கள் என்பதை ஸ்டோரில் நிறுவப்பட்டுள்ள சென்சார்கள் மூலம் கண்டறிந்து, இறுதியாக அவர்கள் வெளியேறும் போது அந்தந்த பொருட்களுக்கான கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!