அமீரக செய்திகள்

UAE: நோயாளியின் வீட்டிற்கே சென்று மருந்துகளை டெலிவரி செய்த ட்ரோன்!! – சாதனை நிகழ்த்திய துபாய் மருத்துவமனை…

துபாயில் உள்ள ஒரு மருத்துவமனை, நோயாளியின் வீட்டிற்கு மருந்துகளை ட்ரோனில் டெலிவரி செய்து வாரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வை உருவாக்கியுள்ளது, இதன் மூலம் எதிர்காலத்தில் ட்ரோனை பயன்படுத்தி நாடு முழுவதும் உள்ள இடங்களுக்கு மருந்துகளை டெலிவரி செய்ய முடியும் என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளது.

துபாயின் ஃபக்கேஹ் யுனிவர்சிட்டி மருத்துவமனையால் (Fakheeh University Hospital) மேற்கொள்ளப்பட்ட இந்த அற்புதமான முயற்சியானது, துபாய் சிலிக்கான் ஒயாசிஸில் (Dubai Silicon Oasis -DSO) உள்ள Cedre Villas இல் வசித்து வரும் ஒரு நோயாளியின் வீட்டிற்கு, ஹெல்த்கேர் சென்டரில் இருந்து 10கிமீ சுற்றளவில் ஆளில்லா ட்ரோன் விமானத்தை இயக்கி டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த சாதனையானது துபாய் சிலிக்கான் ஒயாசிஸில் ஒரு வருடமாக நடத்தப்பட்ட தொடர்ச்சியான சோதனைகளுக்குப் பிறகே தற்போது வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. மேலும் இவை துபாய் ஃபியூச்சர் பவுண்டேஷன் (DFF) மற்றும் துபாய் சிவில் ஏவியேஷன் அத்தாரிட்டி (DCAA) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

எப்படி ட்ரோன் டெலிவரி செய்யப்பட்டது?

இந்நிகழ்வு குறித்துப் பேசிய FUH-இன் தலைமை நிர்வாக அதிகாரி மருத்துவர் பதிஹ் மெஹ்மூத் குல் என்பவர், மத்திய கிழக்கில் ட்ரோன்கள் மூலம் மருந்து விநியோகத்தை அறிமுகப்படுத்தியதில் தாங்கள் பெரும் பெருமை கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவமனையில் இருந்து புதுமையான சேவைகளை வழங்குவதற்கு தொழில்நுட்ப முன்னேற்றங்களை தொடர்ந்து ஏற்றுக் கொள்வதாகக் கூறிய அவர், சுகாதார அணுகலை மேம்படுத்துவதிலும், முழுமையான டிஜிட்டல் மயமாக்கலை அடைவதிலும் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை இந்த நடவடிக்கைக் குறிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, இத்தகைய ட்ரோன் டெலிவரி மூலம், சுகாதார அணுகல் மற்றும் செயல்திறனில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புதுமுயற்சியின் முக்கிய நன்மைகளில் விரைவான பதில், நம்பகத்தன்மை போன்றவையும் அடங்கும் எனவும் நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

இப்போது, ட்ரோன்கள் மூலம் நோயாளிகளுக்கு மருந்துகளை உடனடியாக வழங்க முடியும் என்பதால், முக்கியமான சூழ்நிலைகளில் உயிர்களைக் காப்பாற்றலாம். மேலும் ட்ரோன்களைப் பயன்படுத்துவதால், புவியியல் தடைகள் எதுவுமின்றி, நோயாளிகள் விரைவாகவும் எளிதாகவும் மருந்துகளைப் பெறலாம். குறிப்பாக, இதர போக்குவரத்து வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் உமிழ்வையும் ட்ரோன் டெலிவரி கணிசமாக குறைக்கும்.

அரசு அதிகாரிகளின் ஆதரவு:

துபாய் சிலிக்கான் ஒயாசிஸை புதுமையான மற்றும் ஸ்மார்ட் டெக்னாலஜி தீர்வுகளைச் சோதிப்பதற்கான சிறந்த சூழலாக அமைப்பதற்கு துபாய் ஒருங்கிணைந்த பொருளாதார மண்டலங்கள் ஆணையம் தங்களின் ஆதரவு வழங்கியுள்ளது. மேலும், இந்த சாதகமான சுற்றுச்சூழல் அமைப்பைக் கட்டியெழுப்ப, ஃபகீஹ் பல்கலைக்கழக மருத்துவமனை நோயாளிகளின் பராமரிப்பை மேம்படுத்துவதற்கான அதிநவீன தொழில்நுட்பங்களைத் தழுவுவதற்கான அதன் உறுதிப்பாட்டில் ஒரு முன்னோடி நடவடிக்கையையும் எடுத்துள்ளது.

இது குறித்து துபாய் சிலிக்கான் ஒயாசிஸின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஜுமா அல் மத்ரூஷி அவர்கள் கூறுகையில், நிறுவனங்கள் தங்கள் சோதனைகளை நடத்துவதற்கும், சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வதற்கும், அவர்களின் சலுகைகளை நிறைவு செய்வதற்கும் சாதகமான சூழலையும், தேவையான ஆதரவையும் வழங்குவதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், ட்ரோனை வெற்றிகரமாக இயக்கிய பைலட்டிற்கு தனது வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!