அமீரக செய்திகள்

அமீரகம் முழுவதும் வேக வரம்புகள் மாற்றப்பட்டுள்ள 7 முக்கிய சாலைகள்.!! – மீறினால் 3000 திர்ஹம் வரை அபராதம்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள், சாலைகளில் உள்ள வேக வரம்பு சைன்போர்டுகளை கவனித்து வாகனம் ஓட்டுவது நல்லது, ஏனெனில் அபுதாபி, துபாய் உட்பட அமீரகத்தின் பெரும்பாலான சாலைகளின் வேகவரம்புகளில் சமீபத்தில் பல மாற்றங்கள் அந்தந்த எமிரேட்களின் காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவ்வப்போது, நிலைமைகளுக்கு ஏற்றவாறு சாலைகளில் வேகவரம்புகளை சரிசெய்வது சாலைகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த வழி என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சாலைகளில் கவனமாக வாகனம் ஓட்டவும், கடுமையான விபத்துகளை குறைக்கவும் வேக வரம்பு மாற்றங்களை அமீரக காவல்துறையினரும்  நடைமுறைப்படுத்துகின்றனர்.

அபுதாபி, துபாய், ஷார்ஜா மற்றும் அஜ்மான் ஆகிய எமிரேட்களில் கடந்த சில மாதங்களில் மட்டும் ஏழு முக்கிய சாலைகளின் வேக வரம்புகளில் பெரிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டும் ஓட்டுனருக்கு வேகத்தைப் பொருத்து 300 முதல் 3000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கவும் இது வழிவகுக்கும். அதேசமயம், குறைந்தபட்ச வேகம் நிர்ணயிக்கப்பட்டுள்ள சாலையில் மெதுவாக வாகனம் ஓட்டினாலும் அபராதம் விதிக்கப்படும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

சமீபத்தில் வேக வரம்புகள் மாற்றப்பட்ட சாலைகளின் பட்டியல்:

1. அல் ரீம் ஐலேண்ட் முதல் ஷேக் சையத் சாலை வரை

அல் ரீம் ஐலேண்டில் இருந்து ஷேக் சையத் சாலை வரை செல்லும் உம் யாஃபினா ஸ்ட்ரீட்டில் அபுதாபி காவல் துறை புதிய வேக வரம்பை அறிவித்துள்ளது. இந்த வேகவரம்பு ஜூன் 7, 2023 முதல் நடைமுறைக்கு வரும். மேலும், சமீபத்திய வேக வரம்பைக் குறிக்கும் புதிய சைன்போர்டுகள் சாலையின் இரு திசைகளிலும் நிறுவப்பட்டுள்ளதாக அபுதாபி காவல்துறை அறிவித்துள்ளது.

2. ஸ்வைஹான் சாலை, அபுதாபி:

அல் ஃபலாஹ் பிரிட்ஜில் இருந்து அபுதாபி சர்வதேச விமான நிலையத்தை நோக்கி செல்லும் இந்த சாலையில் வேக வரம்பு மணிக்கு 120 கிமீ ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது ஜூன் 4 முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இந்த சாலையில் மணிக்கு 140 கிமீ என்ற வரம்பில் வேக வரம்பு அமைக்கப்பட்டிருந்தது.

3. ஷேக் முகமது பின் ரஷித் சாலை, அபுதாபி:

அபுதாபியின் இந்த முக்கிய நெடுஞ்சாலையில் கடந்த ஏப்ரல் முதல் குறைந்தபட்ச வேக வரம்பாக மணிக்கு 120 கிமீ வேகத்தை செயலப்டுத்தியுள்ளனர். அதன்படி மே 1 முதல், இதனை மீறுபவர்களுக்கு 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதேசாலையில், அதிகபட்ச வேகம் மணிக்கு 140 கிமீ் ஆகும். ஆனால் அவர்கள் இடதுபுறத்தில் இருந்து முதல் மற்றும் இரண்டாவது பாதையில் இருந்தால், புதிய அபராதத்தைத் தவிர்க்க 120 கிமீ வேகத்திற்கு குறையாமல் வாகனத்தை ஓட்ட வேண்டும். குறைந்த வேகம் குறிப்பிடப்படாத மூன்றாவது மற்றும் நான்காவது பாதையில் மெதுவாக செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

4. துபாய்-ஹத்தா சாலை:

இந்தாண்டு ஜனவரி மாதத்தில் இருந்து துபாய்-ஹத்தா சாலையில் வேக வரம்பை மணிக்கு 100 கிமீ வேகம் என்பதிலிருந்து 80 கிமீ வேகமாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) குறைத்துள்ளது. இந்த வேக வரம்பு துபாய், அஜ்மான் மற்றும் அல் ஹொஸ்ன் ரவுண்டானாவில் 6 கிமீ நீளத்திற்கு பொருந்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

5. மஸ்ஃபவுத் மற்றும் முசைரா பகுதிகள், அஜ்மான்:

அஜ்மான் காவல்துறை, எமிரேட்டின் மஸ்ஃபவுத் மற்றும் முசைரா பகுதிகளில் அமைந்துள்ள ஹத்தா ஸ்ட்ரீட்டில் மணிக்கு 100 கிமீ வேகத்தில் இருந்த வரம்பு 80 கிமீ ஆக மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வரம்புகளைக் கொண்டுள்ள எச்சரிக்கை பலகைகளும் இந்த சாலையில் நிறுவப்பட்டுள்ளது.

6. அபுதாபியில் இருந்து அல் அய்ன் சாலை வரை:

அபுதாபி காவல்துறை இந்த நெடுஞ்சாலையின் வேக வரம்பை மணிக்கு 160 கிமீ வேகத்தில் இருந்து 140 கிமீ ஆக மாற்றியுள்ளது. மேலும், இது அபுதாபியில் இருந்து அல் அய்ன் நோக்கி செல்லும் சாலையில், அல் சாத் பிரிட்ஜ் முதல் அல் அமேரா பிரிட்ஜ் வரை மட்டுமே பொருந்தும். குறிப்பாக, அபுதாபியில் சைன்போர்டில் காட்டப்படும் வேகமே அதிகபட்ச வேகமாகும். மற்ற எமிரேட்களை போன்று 20km/h கூடுதலாக வாகனத்தை இயக்க முடியாது.

7. வாடி மதிக் – கல்பா சாலை:

ஷார்ஜாவில் உள்ள இந்த அகலமான சாலையை சுற்றி எந்தவொரு பள்ளிக் கூடங்களோ, குடியிருப்புகளோ அல்லது நகர்ப்புற மையங்களோ இல்லாததால், இதன் வேக வரம்பை மணிக்கு 80 கிமீ முதல் 100 கிமீ வரை அதிகரிக்க போக்குவரத்து அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். E102 என்றும் அழைக்கப்படும் இந்த சாலை, ஃபுஜைரா எல்லையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாடி மாதிக் மற்றும் கல்பா சாலையை இணைக்கும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!