அமீரக செய்திகள்

UAE: கொளுத்தும் வெயிலில் இருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்க மதிய நேர வேலைகளுக்குத் தடை!! – விதியை மீறினால் 50,000 திர்ஹம் வரை அபராதம்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டதால் வரும் ஜூன் 15 ம் தேதி முதல் செப்டம்பர் 15 ம் தேதி வரை தினமும் மதியம் 12.30 மணி முதல் 3 மணி வரை, திறந்தவெளியில் மற்றும் சூரிய ஒளியில் நேரடியாக வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் மே மாதத்தின் பிற்பகுதியில் இருந்தே நாடு முழுவதும் மதிய நேரங்களில் சூரிய வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

அதிலும் குறிப்பாக நண்பகல் நேரங்களில் சூரிய வெப்பத்தின் தாக்கம் மிகவும் உச்சத்தில் இருக்கும் என்பதால், அதிலிருந்து தொழிலாளர்களை பாதுகாக்க அமீரகத்தில் ஒவ்வொரு வருடமும் ‘Midday Work break’ எனப்படும் மதிய நேர வேலை இடைவேளையை அமீரக அரசு அமல்படுத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான மதிய நேர வேலைக்கான தடை ஜூன் 15 முதல் தொடங்க இருப்பதாக MoHRE அறிவித்துள்ளது.

இது குறித்து மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MoHRE) வெளியிட்டுள்ள அறிவிப்பில், திறந்தவெளியில் மற்றும் நேரடி சூரிய ஒளியில் மதிய நேரம் வேலை செய்ய மூன்று மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாதங்களில் தொழிலாளர்களின் தினசரி வேலை நேரம் எட்டு மணி நேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஒரு நாளைக்கு எட்டு மணிநேரத்திற்கு மேல் ஒரு ஊழியர் பணிபுரிந்தால், கூடுதல் கால அவகாசம் கூடுதல் நேரமாகக் கருதப்பட்டு, அதன்படி அந்த ஊழியருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், மதிய நேர இடைவேளையின் போது தொழிலாளர்கள் ஓய்வெடுக்கும் வகையில் நிழலான இடத்தை முதலாளிகள் வழங்க வேண்டும் என்றும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அபராதம்:

தொழிலாளர்களின் நலனுக்காக அமைச்சகம் விதித்துள்ள தடைகளை மீறும் நிறுவனங்கள் மற்றும் முதலாளிகளுக்கு, ஒவ்வொரு தொழிலாளி வீதம் 5,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல, தடை செய்யப்பட்ட காலத்தில் விதியை மீறி பல தொழிலாளர்கள் வேலை செய்ய வைத்தால் அதற்கான அதிகபட்ச அபராதத் தொகை 50,000 திர்ஹம் ஆகும். எனவே, இதுபோன்ற விதிமீறல்களை சமூக உறுப்பினர்கள் எங்கேனும் பார்த்தால் 600590000 அல்லது MoHRE இன் செயலியில் புகாரளிக்குமாறு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

தடையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள பணிகள்:

நாடு முழுவதும் மதிய நேர இடைவேளை அமல்படுத்தப்பட்டாலும் சில வேலைகள் இடையூறு இல்லாமல் இருப்பது அவசியம், எனவே பின்வரும் பணிகளுக்கு மதிய வேலை தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

— பொதுவாக, சாலைகளில் தார் (asphalt) போடுவது அல்லது கான்கிரீட் ஊற்றுவது போன்ற பணிகளை இடைவேளை நேரத்தில் ஒத்திவைப்பது சாத்தியமற்றது என்பதால், இந்த பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

— போக்குவரத்து மற்றும் பயணிகள் சேவையை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரியிடமிருந்து அனுமதி தேவைப்படும் பணிகள் செயல்படுத்தப்பட வேண்டும். எனவே இந்தப் பணிகளில் முக்கிய போக்குவரத்து வழிகள், மின் இணைப்புகள் மற்றும் தகவல் தொடர்பு சார்ந்த பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

— அதுபோல, வாட்டர் சப்ளை அல்லது மின்சாரம் தடைபடுதல், போக்குவரத்தை துண்டித்தல், மற்றும் பிற முக்கிய பிரச்சனைகள் போன்ற சமூகத்தை பாதிக்கும் அபாயங்கள் அல்லது பழுதுபார்க்கும் சேதங்களை சரிசெய்யும் பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

— இது போன்ற விலக்கு அளிக்கப்பட்ட பணிகளில் தொழிலாளர்களுக்கு போதுமான குளிர்ந்த குடிநீரை முதலாளி வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் இத்தகைய தொழிலாளர்களுக்கு உள்ளூர் அதிகாரிகளால் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட உப்புகள் மற்றும்/அல்லது பிற உணவுப் பொருட்கள் போன்ற நீரேற்ற உணவை தொழிலாளர்களுக்கு வழங்குவதன் மூலம் பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தேவைகள் பராமரிக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் வேலை செய்யும் இடத்தில் முதலுதவி, போதுமான குளிர்ச்சி, நேரடி சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும் குடைகள் மற்றும் தொழிலாளர்கள் வேலையில்லா நேரத்தில் ஓய்வெடுக்க நிழல் தரும் பகுதிகள் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றும் MoHRE அறிவுறுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!