அமீரக செய்திகள்

ஷார்ஜாவில் புதிய சிட்டி செக்-இன் சேவை அறிமுகம்..!! பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்த ஏர் அரேபியா மேற்கொண்ட நடவடிக்கை…

ஷார்ஜாவை மையமாக கொண்டு இயங்கும் பட்ஜெட் விமான நிறுவனமான (low-cost carrier – LCC) ஏர் அரேபியா, ஷார்ஜாவில் பயணிகளுக்காக புதிய சிட்டி செக்-இன் சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சேவையானது, பயணிகளுக்கு மேம்பட்ட வசதி மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு துவங்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சேவையின் மூலம் ஷார்ஜாவில் இருக்கக்கூடிய பயணிகள் ஷார்ஜாவின் முவைலா பகுதியில் இருக்கும் மதீனா ஷாப்பிங் சென்டர் எதிரில் உள்ள புதிய சிட்டி செக்-இன் சேவையை பயன்படுத்தி பயணத்திற்கு முன்னதாகவே தங்களுடைய லக்கேஜ்களை கொடுத்து விட்டு போர்டிங் பாஸைப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த சேவையின் மூலம் விமானப் பயணத்திற்கு முந்தைய செயல்முறைகளை எளிதாக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் மற்றும் விமான நிலையத்தில் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்கவும் முடியும் என்று கூறப்படுகிறது. ஆகையால், பயணிகள் விமான நிலையத்திற்கு வந்தவுடன் நேரடியாக தங்கள் விமானத்திற்கு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர் அரேபியா முவைலாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த செக்-இன் வசதி தினசரி காலை பத்து மணி முதல் இரவு பத்து மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயணிகள் தங்களின் விமானம் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன் தொடங்கி பயணத்திற்கு முந்தைய 8 மணி நேரத்திற்குள் லக்கேஜ்களை சரிபார்த்து போர்டிங் செய்வதற்கான வசதி உள்ளது என கூறப்பட்டுள்ளது.

அத்துடன், விமான நிலையங்களில் இருப்பது போலவே, கூடுதல் லக்கேஜ்களுக்கான கட்டணம் செலுத்துதல், விருப்பமான இருக்கைகளைத் தேர்ந்தெடுத்தல் அல்லது விமான ஏற்பாடுகளில் மாற்றங்களைச் செய்தல் போன்ற சேவைகளையும் பயணிகள் இங்கு அணுகலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போல், ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் அரேபியா விமானத்தில் புறப்படும் பயணிகள் ஷார்ஜா, ராஸ் அல் கைமா, அஜ்மான் மற்றும் அபுதாபியில் அமைந்துள்ள பல்வேறு சிட்டி செக்-இன் வசதிகளில் ஏதேனும் ஒன்றை அணுகி சேவையை பெற்றுக்கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!