அமீரக செய்திகள்

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்துகளை பகிர்ந்த அமீரக தலைவர்கள்..!!

உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை இன்று (ஆகஸ்ட் 15) கொண்டாடி வரும் நிலையில், அமீரக ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு சுதந்திர தின வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.

இதேபோல, அமீரகத்தின் துணைப் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், இந்தியாவிற்கும் அதன் மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

மாண்புமிகு ஷேக் முஹம்மது சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில் “இந்தியா தனது 77 வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, தலைமைக்கும் இந்த தேசத்தின் மக்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில், பகிரப்பட்ட செழிப்பு மற்றும் வளர்ச்சியின் எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், எங்கள் கூட்டாட்சியை புதிய உயரங்களுக்கு உயர்த்துவதற்கும், அரசியல், பொருளாதார, புதிய எல்லைகளை ஆராய்வதற்கும் அமீரக தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், துணைத் தலைவர் ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான் அவர்களும், துணைப் பிரதமரும் ஜனாதிபதி நீதிமன்றத்தின் அமைச்சரும் இதேபோன்ற வாழ்த்துச் செய்திகளை இந்திய ஜனாதிபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அனுப்பியுள்ளார்.

துபாயில், காலை 6.30 மணிக்கு இந்திய தூதரக அலுவலகத்திற்கு வெளியே வரிசையாக நிற்கும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு வண்ணமயமான கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அத்துடன் துபாய் காவல்துறையினர் மற்றும் இந்திய கம்யூனிட்டி தலைவர்களுடன் துபாய் மற்றும் வடக்கு எமிரேட்டுக்கு இந்தியாவின் செயல் துணைத் தூதரான ராம்குமர் தங்கராஜ் அவர்கள் கொடியேற்றம் செய்து வைத்தார்.

அதேவேளை, அமீரகத்தின் பல்வேறு இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளன. அது மட்டுமல்லாமல் அமீரகம் முழுவதும் இந்திய குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!