அமீரக செய்திகள்

உலகின் மிக விலையுயர்ந்த நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள துபாய், அபுதாபி..!!

உலகின் விலையுயர்ந்த நகரங்களின் பட்டியலில் துபாய், அபுதாபி ஆகிய நகரங்கள் முதல் வரிசையில் இடம்பிடித்துள்ளன. Covid-19 தொற்றுக்குப் பிறகு, பிராந்திய பொருளாதாரங்களின் வலுவான வளர்ச்சி காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

அவ்வாறு இருக்கையில், உலகின் விலையுயர்ந்த நகரங்களின் பட்டியலில் துபாய் மற்றும் அபுதாபி ஆகியவை முறையே 18 மற்றும் 43 இடங்களில் இருந்து முன்னேறி, 13வது மற்றும் 18வது இடத்தைப் பிடித்துள்ளதாக Mercer’s Cost of Living 2023 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய், அபுதாபி போன்ற நகரங்கள் தரவரிசைப் பட்டியலில் முன்னேறினாலும், பணவீக்கம், வீட்டு செலவுகள் போன்ற காரணிகளால் அமீரகத்தின் வாழ்க்கைச் செலவு முக்கிய உலகளாவிய நகரங்களுடன் ஒப்பிடும் போது போட்டித்தன்மையுடன் உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த சிக்கல்களை நிர்வகிப்பதில் அமீரகம் முனைப்புடன் உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுபோல, டெல் அவிவ் நகரமானது மத்திய கிழக்கில் மிகவும் விலையுயர்ந்த நகரமாகத் திகழ்வதுடன் உலகளாவிய தரவரிசையில் 8 வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், துபாயில் வெண்ணெய், சமையல் எண்ணெய், சர்க்கரை மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் முறையே 23.5 சதவீதம், 6.9 சதவீதம், 3.8 சதவீதம் மற்றும் 15.4 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஆண்டு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆய்வானது ஐந்து கண்டங்களில் உள்ள 227 நகரங்களை வரிசைப்படுத்தியுள்ளது, ஒவ்வொரு நகரத்திலும் வீடுகள், போக்குவரத்து, உணவு, உடைகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு போன்ற 200 க்கும் மேற்பட்ட பொருட்களின் ஒப்பீட்டு விலையை அளவிட்டு தரநிலையானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

துபாய் மற்றும் அபுதாபி மட்டுமின்றி, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அனைத்து நகரங்களின் தரவரிசையும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, பட்டியலில் பதினெட்டு இடங்கள் முன்னேறி, ரியாத் 85வது இடத்திலும், ஜித்தா 101வது இடத்திலும், தோஹா 126வது இடத்திலும் மற்றும் மஸ்கட்  11 இடங்கள் சரிந்து 130வது இடத்திலும் உள்ளன.

Mercer Middle Eastஇன் நிதிச் சேவைகள் மற்றும் தொழில்நுட்பத் தொழில்கள் தலைவரான விளாடிமிர் வர்ஜோவ்ஸ்கி என்பவர் இது குறித்துப் பேசுகையில், பல நிறுவனங்கள் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்குப் பதிலாக, போனஸ்களை அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

விலையுயர்ந்த நகரங்களின் பட்டியலில் ஹாங்காங் மீண்டும் முதலிடத்தை பிடித்ததைத் தொடர்ந்து சிங்கப்பூர், சூரிச், ஜெனீவா, பேசல், நியூயார்க் நகரம், பெர்ன், டெல் அவிவ், கோபன்ஹேகன் மற்றும் நாசாவ் (பஹாமாஸ்) ஆகியவை முதல் 10 இடங்களுக்குள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

அதுபோல, இஸ்லாமாபாத், கராச்சி, ஹவானா, பிஷ்கெக், துஷான்பே, வின்ட்ஹோக் (நமீபியா), அங்காரா, டர்பன், துனிஸ் மற்றும் தாஷ்கண்ட் ஆகியவை குறைந்த விலையுள்ள நகரங்களாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!