அமீரக செய்திகள்

அபுதாபியில் இலவசமாக போக்குவரத்து அபராதத்தின் தவணைகளை செலுத்த ஸ்மார்ட் சர்வீஸ் அறிமுகம்….தேவையான ஆவணங்கள் போன்ற முழுவிபரங்களும் இங்கே!

அபுதாபியில் டிரைவிங் லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் போக்குவரத்து விதிமீறல் அபராதங்களைச் செலுத்த பல்வேறு வசதியான முறைகளைப் பயன்படுத்தலாம் என்பதை வாகன ஓட்டிகளுக்கு அபுதாபி காவல்துறை நினைவூட்டியுள்ளது.

அதாவது, போக்குவரத்து அபராதங்களை வட்டியில்லா தவணைகளில் செலுத்த வாகன ஓட்டிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், வாகன ஓட்டிகள் விதிமீறல் செய்த இரண்டு மாதங்களுக்குள் அபராதத்தைச் செலுத்தினால், 35 சதவீத தள்ளுபடியும், அமீரகத்தில் உள்ள ஐந்து வங்கிகள் மூலம் ஒரு வருடத்தில் செலுத்தினால், 25 சதவீத தள்ளுபடியும் பெறலாம்.

ஐந்து வங்கிகள்:

  1. அபுதாபி கமெர்ஷியல் பேங்க் (ADCB)
  2. அபுதாபி இஸ்லாமிக் பேங்க் (ADIB)
  3. ஃபர்ஸ்ட் அபுதாபி பேங்க் (FAB)
  4. மஷ்ரிக் அல் இஸ்லாமி (Mashreq)
  5. எமிரேட்ஸ் இஸ்லாமிக் பேங்க் (EIB)

அபுதாபி காவல்துறை அறிவித்துள்ள இந்த தள்ளுபடி மற்றும் தவணை வசதியை நீங்கள் பெற வேண்டுமெனில், மேற்கூறிய வங்கிகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் வழங்கப்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருக்க வேண்டும்.

மேலும், போக்குவரத்து அபராதத் தொகையை தவணைகளில் செலுத்தக் கோர, முன்பதிவு செய்த நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்கு மிகாமல் வங்கியை நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும்.

அபராதத் தொகையை செலுத்தும் வழிகள்:

  • அபுதாபி போலீஸ் ஸ்மார்ட் ஆப்
  • அபுதாபி அரசாங்க சேவைகள் – Tamm அப்ளிகேஷன்
  • அபுதாபி அரசு சேவைகள் – Tamm இணையதளம்
  • டிஜிட்டல் கியோஸ்க்குகள்
  • வாடிக்கையாளர் சேவை மையங்கள்

தேவையான ஆவணங்கள்:

  • எமிரேட்ஸ் ஐடி
  • வாகன பதிவு
  • சேவை மையத்தில் விண்ணப்பித்தால் உரிமையாளர் அல்லது அவரது சட்டப் பிரதிநிதியின் தனிப்பட்ட வருகை.

நிபந்தனைகள்:

ஒரு தனிநபர் இந்த சேவைகளைப் பெறுவதற்கான சில நிபந்தனைகளும் உள்ளன. உதாரணமாக, இந்த முறையில் அபராதம் செலுத்த டிராஃபிக் பாயிண்டுகள் அல்லது வாகனம் பறிமுதல் போன்ற போக்குவரத்து விதிமீறல்கள் எதுவும் இருக்கக்கூடாது.

ஏனெனில், டிராஃபிக் பாயிண்டுகள் உள்ள வாடிக்கையாளர் அதனை டிரைவிங் லைசன்சில் பதிவு செய்ய வேண்டும். அதேபோன்று வாகனம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தால் அதனை விடுவிக்க அபராத கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்த இரண்டையும் நீக்க வாடிக்கையாளர் நேரடியாக சென்று அபராதத்தை செலுத்த வேண்டும்.

கட்டணம்:

அபுதாபி காவல்துறை அறிவித்துள்ள இந்த சேவை முறைகளுக்கு தனிக்கட்டணம் ஏதும் இல்லை. இந்தச் சேவைகளை குடியிருப்பாளர்கள் இலவசமாகப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, இது எளிதான மற்றும் வசதியான விருப்பமாக இருப்பதால், தங்களின் போக்குவரத்து அபராதங்களை செலுத்த, பொதுமக்கள்  இந்த வழியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு காவல்துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!