அமீரக செய்திகள்

துபாய்: மாற்றுத்திறனாளிகளும் இரவு நேர பீச்சில் குளிக்க முனிசிபாலிட்டி ஏற்பாடு..!! பொதுமக்கள் வரவேற்பு…!!

துபாய் முனிசிபாலிட்டியானது கடந்த மே மாதம் இரவு நேரத்தில் பொதுமக்கள் குளிப்பதற்காக 24 மணி நேரமும் அணுகக் கூடிய வகையில் மூன்று கடற்கரைகளைத் திறந்துள்ளது. துபாயில் ஜுமைரா 2, ஜுமைரா 3 மற்றும் உம் சுகீம் 1 ஆகிய மூன்று இடங்களில் 800 மீட்டர் நீளத்தில் உள்ள இந்த கடற்கரைகளை பொதுமக்கள் அணுகலாம். இந்த கடற்கரைகளை தற்பொழுது மாற்றுத்திறனாளிகளும் அணுகும் வகையில் முனிசிபாலிட்டி முன்னேற்பாடு செய்துள்ளது.

இந்த கடற்கரைகளில் ஆங்காங்கே புதிய பலகைகள், சிறப்புச் சரிவுகள் பொருத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, அவர்களுக்கும் பாதுகாப்பான நீச்சல் அனுபவத்தை வழங்க, ‘பீச் ஃப்ளோட்டிங் சக்கர நாற்காலி’ ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மிதக்கும் நாற்காலியானது, அவர்களை கடற்கரையை எளிதாக அணுக உதவுவதுடன் மகிழ்ச்சியான நீச்சல் அனுபவத்தை உறுதி செய்கிறது.

அதிகாரிகளின் இம்முயற்சியைப் பாராட்டிய துபாயின் இரண்டாவது துணை ஆட்சியாளரும், துபாய் மீடியா கவுன்சிலின் தலைவருமான ஷேக் அகமது பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் மக்களுக்கு இந்த அனுபவத்தை வழங்கிய முனிசிபாலிட்டி குழுக்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரது ட்விட்டர் பதிவில், இது உலகில் வாழ சிறந்த நகரமாக துபாய் தனது நிலையை தரமான முறையில் நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளை பிரதிபலிக்கும் ஒரு புதிய படி என்று குறிப்பிட்டுள்ளார்.

எப்போது வேண்டுமானாலும் கடற்கரையை அணுகலாம்..??

சூரிய மறைவிற்குப் பிறகும், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள்  வசதியான நீச்சல் அனுபவத்தைப் பெறுவதற்கு கடற்கரைகளில் லைட்டிங் சிஸ்டம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்கும் செய்திகளை காண்பிக்கும் எலக்ட்ரானிக் இன்ஃபர்மேஷன் பேனல்களை துபாய் முனிசிபாலிட்டி நிறுவியுள்ளது.

மேலும், அனைவரின்  பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிநவீன மீட்பு மற்றும் அவசரகால கருவிகளைப் பயன்படுத்தும் தகுதிவாய்ந்த உயிர்காப்பாளர்களும் கடற்கரைகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், கடற்கரைக்கு செல்பவர்கள் இரவில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே நீந்த வேண்டும் என்றும், மற்ற பகுதிகளில் இருந்து கடலுக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் கடற்கரை விதிமுறைகளுக்கு இணங்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் முனிசிபாலிட்டி வலியுறுத்தியுள்ளது. அதன்படி, குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளை எப்போதும் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளின் இந்த முயற்சியானது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

 

Related Articles

Back to top button
error: Content is protected !!