அமீரக செய்திகள்

UAE: சாலையில் திடீரென நிறுத்தப்பட்ட பிக்-அப் டிரக்.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்.. அதிர்ச்சியூட்டும் வீடியோவை பகிர்ந்த அபுதாபி காவல்துறை..!!

அபுதாபி காவல்துறை நேற்று வெள்ளிக்கிழமை வாகன ஓட்டிகளுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதுபற்றி காவல்துறை ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவின் படி, எக்காரணம் கொண்டும் சாலையின் நடுவில் காரை நிறுத்தக்கூடாது, இது பிற சாலைப் பயனர்களின் உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் கடுமையான போக்குவரத்து விதிமீறல் என கூறப்பட்டுள்ளது.

அபுதாபி காவல்துறையினர் பகிர்ந்துள்ள 33-வினாடி வீடியோ கிளிப்பில், ஒரு வெள்ளை நிற பிக்-அப் டிரக் சாலையின் நடுவில் திடீரென நிறுத்தப்பட்டதால், பின்னால் வந்த இரண்டு செடான் கார்கள் சுதாரித்துக் கொண்டு பிக்-அப் டிரக் மீது மோதாமல் சரியான நேரத்தில் பிரேக்கை பிடித்துள்ளனர்.

இருப்பினும், அடுத்த வினாடியே இவ்விரு கார்களுக்குப் பின்னால் வந்த வாகனம் மூன்றாவது காரின் மீது மோதுகிறது, அது வலதுபுற பாதையில் சென்றதால், அது மற்றொரு SUV கார் மீது மோதி விபத்தை ஏற்படுகிறது. மேலும், மற்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் இடதுபுற பாதையில் மற்றொரு விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வாகனம் சாலையின் நடுவே திடீரென நிறுத்தப்பட்டதால் அடுத்தடுத்து மூன்று கார்கள் விபத்துக்குள்ளானது. ஆகவே, அவசரகால வழக்குகள் அல்லது பிரச்சனைகளின் போது கூட, ஒரு ஓட்டுநர் ஒருபோதும் காரை நடுரோட்டில் நிறுத்தக்கூடாது என்று அபுதாபி காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

அதற்குப் பதிலாக, அவசர நிலைகளின் போது சாலையில் உள்ள எக்ஸிட் பகுதிக்குச் செல்லவேண்டும் அல்லது அவர்களால் வாகனத்தை நகர்த்த முடியவில்லை என்றால், உடனடியாக 999 கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு உதவிக்கு அழைக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தினால் அபுதாபியின் போக்குவரத்து சட்டத்தின் படி வாகன ஓட்டிகளுக்கு 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் ஆறு பிளாக் பாயிண்டுகள் விதிக்கப்படும் என்றும் காவல்துறை நினைவூட்டியுள்ளது.

இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க, வாகன ஓட்டிகள் மற்ற வாகனங்களிலிருந்து பாதுகாப்பான தூரத்தை கடைபிடிக்கவும், வாகனம் ஓட்டும்போது மொபைல் போன்களை பயன்படுத்துதல் போன்ற அலட்சியமான நடத்தைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அபுதாபி எமிரேட்டில், வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான இடைவெளியைக் கடைபிடிக்கத் தவறினால் அல்லது டெயில் கேட்டிங் செய்தால், வாகன ஓட்டிகளுக்கு 400 திர்ஹம் அபராதமும் 4 பிளாக் பாயிண்ட்களும் விதிக்கப்படும்.

அதேபோன்று, வாகனம் ஓட்டும்போது மொபைல் போன்களைப் பயன்படுத்துதல் போன்ற அலட்சியமான நடத்தைகளுக்கு 800 திர்ஹம் அபராதம் மற்றும் 4 பிளாக் பாயிண்ட்களும் விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!