அமீரக செய்திகள்

அபுதாபியில் சுகாதார விதிமுறைகளை மீறிய மற்றொரு உணவகம்..!! – உணவகத்தை நிரந்தரமாக மூடிய அதிகாரிகள்..!!

அபுதாபியில் உள்ள உணவகம் ஒன்று உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக, உணவு பாதுகாப்பு துறையினரால் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. அபுதாபியில் செயல்பட்டு வந்த நேபாளி ஹிமாலயன் என்னும் உணவகத்தினை அதிகாரிகள் சோதனையிட்டபோது, உணவு பாதுகாப்பு விதிகள் சரியாக பின்பற்றாதது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அபுதாபியின் வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையம் (ADAFSA) அந்த உணவகத்தை மூடியுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வர்த்தக உரிம எண் CN-3025629 ஐ வைத்திருக்கும் உணவகம், அபுதாபி எமிரேட்டில் உணவு மற்றும் அதனுடன் இணைந்த சட்டங்கள் தொடர்பான 2008 ஆம் ஆண்டின் சட்ட எண் (2) ஐ மீறியது கண்டறியப்பட்டதாக ADAFSA தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

அபுதாபியில் ஜனவரி 2008 ஆம் ஆண்டு முதன்முதலாக வெளியிடப்பட்ட இந்த உணவு பாதுகாப்பு சட்டமானது, எமிரேட்டில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவினை வழங்குவதை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட சட்டமாகும். மேலும் இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சம் நுகர்வோரின் பாதுகாப்பை வலியுறுத்துவதாகும்.

எனவே, உணவகத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் எந்த வகையில் இறக்குமதி செய்யப்பட்டாலும் அதன் பாதுகாப்பானது உறுதி செய்யப்பட வேண்டும் மற்றும் உணவு பொருளின் தரத்தை சம்பந்தப்பட்ட நிறுவனமானது சோதிக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல், உணவு ஆய்வாளர்கள் பொருட்களின் தரத்தினை அடிக்கடி சோதனை செய்ய வேண்டும் என்று சட்டம் கூறுகின்றது.

அதிகாரிகளுக்கு வந்த தகவலின் படி, நேபாளி ஹிமாலயன் உணவகத்தின் நடைமுறைகள் “பொது சுகாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை” ஏற்படுத்துவதாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதனை ஒட்டி, அதிகாரிகள் நடத்திய ஆய்வில் உணவு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விதி மீறல்கள் கண்டறியப்பட்டு அதிகாரிகள் உணவகத்தை மூடியுள்ளனர்.

இதற்கு முன்னதாக சுகாதார விதிகளை முறையாகப் பின்பற்றாத வேறு ஒரு உணவகத்தை அபுதாபி முனிசிபாலிட்டி அதிகாரிகள் இதே மாதத்தில் சில நாட்களுக்கு முன்பு இழுத்து மூடினர். மேலும் இதே போன்று, உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட விதிமீறல்களை பொதுமக்கள் கண்டால் 800555 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் விதிமீறல்கள் குறித்து தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!