அமீரக செய்திகள்

UAE: ஏராளமான பொழுதுபோக்கு நிகழ்வுகளுடன் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் ஷேக் சையத் ஃபெஸ்டிவல்.. இந்த வருட சீசன் தொடங்கப்படும் தேதியை வெளியிட்ட நிர்வாக குழு..!!

அபுதாபியில் ஆண்டுதோறும் நடைபெறும் மிகவும் பிரபலமான ஷேக் சையது ஃபெஸ்டிவலானது எண்ணற்ற பொழுது போக்கு நிகழ்வுகளுடன் அனைத்து வயதினரையும் கவரும் வண்ணம் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஃபெஸ்டிவலின் நடந்து முடிந்த சீசனானது கடந்த மார்ச் மாதத்தில் நிறைவு பெற்றது. இந்நிலையில் ஷேக் சையத் ஹெரிடேஜ் ஃபெஸ்டிவலின் நிர்வாகக் குழுவானது வரவிருக்கும் அடுத்த சீசன் தொடங்கப்படுவதற்கான தேதியை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்தாண்டிற்கான சீசன் வரும் நவம்பர் 17, 2023 முதல் மார்ச் 9, 2024 வரை அபுதாபியின் அல் வத்பா பகுதியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விழாவானது அமீரகத்தின் ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முஹம்மது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் ஆதரவிலும், ஜனாதிபதி நீதிமன்றத்தின் துணைத் தலைவர், துணைப் பிரதமர் மற்றும் அமைச்சர் மாண்புமிகு ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் வழிகாட்டுதலிலும் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தாண்டிற்கான ஃபெஸ்டிவல் சீசனில் முக்கிய கலாச்சார நிகழ்வுகள், பல்வேறு பொழுதுபோக்கு நடவடிக்கைகள், சமூக மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் போன்று எப்போதும் போல சிறப்புடன் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, எமிரேட்ஸ் ஃபவுண்டைன், திகைப்பூட்டும் லேசர் ஷோக்கள், வாராந்திர வாணவேடிக்கைகள், சர்வதேச அரங்குகளில் செயல்பாடுகள், கலாச்சார நடனங்கள் மற்றும் அனைத்து வயதினருக்கும் உணவளிக்கும் நிகழ்ச்சிகள் என பார்வையாளர்களை உற்சாகமூட்டும் ஏரளாமான நிகழ்வுகளும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய வருடாந்திர ஃபெஸ்டிவல், எமிராட்டி நாகரிகத்தினை தெரியப்படுத்துதல் மற்றும் அவற்றை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு சேர்த்தல் போன்றவற்றை ஊக்குவிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். இது அபுதாபியின் நிலையை உலகம் முழுவதிலும் ஒரு முன்னணி சுற்றுலா மற்றும் கலாச்சார தலமாக மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் மறைந்த அமீரகத்தை நிறுவிய தந்தை மாண்புமிகு ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களின் பங்கை வலியுறுத்தும் வகையில், அவரது பெயரில் இந்த விழா நடத்தப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, பிரம்மிப்பூட்டும் மிகப்பெரிய வானவேடிக்கை காட்சி மற்றும் ட்ரோன் ஷோ மூலம் உலக சாதனைகளை முறியடித்து வருகின்ற இந்த ஃபெஸ்டிவல், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை எமிராட்டி கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் கொண்டாட்டங்களுக்கு சாட்சியாக கவர்ந்து வருகிறது.

இதற்கிடையில், அமீரக அடையாளத்தை பிரதிபலிக்கும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக இந்த ஃபெஸ்டிவலை மேம்படுத்தும் புது முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!