அமீரக செய்திகள்

முதல் முறையாக அமீரகத்திற்கு வேலைக்கு வந்துள்ளீர்களா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள்..!!

வெளிநாடுகளுக்கு வேலை தேடி வரும் ஒவ்வொருவரும் முதல்முறையாக வேலைக்குச் சென்று அதில் கிடைத்த ஊதியத்தை பெறும்போது நிச்சயமாக இனம்புரியாத சந்தோஷத்தை அடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நமக்கு அறிமுகமில்லாத நாடு, பிரதேசம், சட்ட திட்டங்கள் மற்றும் புதிய பணிச்சூழலுக்கு செல்வது சில சமயங்களில் மன அழுத்தத்தையும் உண்டாக்கக்கூடும்.

எனவே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலை தேடி வந்து முதல்முறையாக வேலைக்குச் செல்லும் நபர்களுக்கு உதவும் வகையில், அமீரகத்தின் சில முக்கிய வேலைவாய்ப்பு நடைமுறைகள் மற்றும் சட்டங்கள் பற்றிய விரிவான தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக பின்வருமாறு பார்க்கலாம்.

1. பல்கலைக்கழக பட்டத்தை சான்றளித்தல்:

தொடக்கத்தில் ஒரு நிறுவனத்தில் அளிக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்பை பெற்றுக்கொண்டவுடன், அலுவலகத்தில் உள்ள மனிதவளத் துறையானது (HR), பணி அனுமதிக்கு (work permit) விண்ணப்பிக்க சில அத்தியாவசிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கும்படி கேட்கும் நிலையில், டிகிரி அல்லது டிப்ளோமா படித்த சான்றிதழ்கள் சான்றளிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.

அதேவேளை, அமீரகத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவராக இருந்தால், அவர் படித்த கல்லூரியில் உள்ள பதிவாளர் அல்லது நிர்வாக அலுவலகம் ஏற்கனவே சான்றளித்திருக்க வாய்ப்புள்ளது. மேலும், UAE கல்வி அமைச்சகத்தினால் (Ministry of Education – MOE) வழங்கப்பட்ட சான்று என்பதை உறுதி செய்ய, பட்டப்படிப்பின் பின்புறத்தில் உள்ள ஹாலோகிராபிக் ஸ்டிக்கர் சோதனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அவ்வாறு இல்லையெனில், MOE இணையதளம் மூலம் ஒருவர் பெற்ற பட்டத்திற்கு சான்றளிக்க முடியும். எனினும், இந்த இணையதளம் கல்வி அமைச்சகத்தால் உரிமம் வழங்கப்பட்டுள்ள நாட்டிற்குள் உள்ள கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் ஆவணங்கள் மற்றும் கல்வித் தகுதிகளை மட்டுமே சான்றளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் சான்றளிக்கப்பட்ட ஆவணத்தைப் பெற பின்வரும் இரண்டு முறைகள் உள்ளன.

  • பட்டம் பெற்ற நாட்டில் உள்ள UAE தூதரக அலுவலகம் அல்லது வெளியுறவு அலுவலகத்தால் சான்றளிக்கப்பட்ட ஆவணத்தைப் பெற வேண்டும்.
  • UAE இல் உள்ள வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகத்தால் (MOFAIC) சான்றளிக்கப்பட்ட ஆவணத்தைப் பெற வேண்டும். இந்த இரண்டு படிகளையும் MOFAIC அல்லது சான்றளிப்பு சேவை வழங்குநர் மூலம் முடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

2. ஊழியரின்ஆட்சேர்ப்புச் செலவை நிறுவனத்தின் முதலாளி செலுத்துதல்:

அமீரகத்தில் ரெசிடென்சி விசா மற்றும் ஒர்க் பெர்மிட் போன்றவற்றை விண்ணப்பிப்பதற்கான செலவு உட்பட ஆட்சேர்ப்புச் செலவுக்கு பணம் செலுத்துவது முதலாளியின் பொறுப்பாகும். மேலும், UAE-யில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான மிக முக்கியமான உரிமைகளில் ஒன்று பாஸ்போர்ட்டை வைத்திருப்பதற்கான உரிமையாகும். அதன்படி, ஊழியரின் பாஸ்போர்ட்டை தன்னிடம் வைத்துக்கொள்ள ஒரு முதலாளிக்கு சட்டப்பூர்வமாக அனுமதி இல்லை என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

3. வேலை வாய்ப்பு மற்றும் அதற்கான ஒப்பந்தத்தை கவனமாக படித்தல்:

வேலைக்கு எடுக்கும் நிறுவனத்தில் இருந்து கொடுக்கப்படும் ஒப்பந்த பத்திரத்தில் உள்ள நன்மைகள் மற்றும் உரிமைகள் பற்றிய தெளிவான விவரங்களை மிகவும் கவனமாக மதிப்பாய்வு செய்வது அவசியமாகும். அத்துடன் ஒப்பந்தத்தைப் படிக்கும் போது, ​​வேலை விவரம், சம்பளப் பிரிப்பு, விடுமுறை நாட்கள் மற்றும் வேலை நேரம் போன்ற முக்கியமான தகவல்களை அதில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேலும், வேலை ஒப்பந்தம் (work contract) ஆரம்ப வேலை வாய்ப்பு கடிதத்துடன் (offer letter) பொருந்தவில்லை என்றால் UAE இன் தொழிலாளர் சட்டத்தின்படி, மனிதவளத் துறை அல்லது மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்திடம் (MOHRE) அவர்களின் ஹெல்ப்லைன் – 600590000 மூலம் புகார் தெரிவிக்கலாம்.

வேலை ஒப்பந்தத்தில் இருக்க வேண்டிய முக்கியமான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  1. முதலாளியின் பெயர் மற்றும் முகவரி.
  2. தொழிலாளியின் பெயர், நேஷனாலிட்டி, மற்றும் பிறந்த தேதி
  3. தொழிலாளியின் அடையாளம், தகுதி, வேலை அல்லது தொழில் ஆகியவற்றின் சான்று
  4. பணி தொடங்கும் தேதி மற்றும் பணியிடத்தின் பெயர்
  5. பணி நேரம்
  6. விடுமுறை நாட்கள்
  7. தகுதிகாண் காலம் (Probation period)
  8. ஒப்பந்தத்தின் காலம்
  9. நன்மைகள் மற்றும் கொடுப்பனவுகள் (Benefits and allowance) உட்பட ஒப்புக் கொள்ளப்பட்ட ஊதியம்.
  10. வருடாந்திர விடுப்பு உரிமைகள் (Annual leave)
  11. அறிவிப்பு காலம் (notice period).
  12. வேலை ஒப்பந்தத்தை நிறுத்துவதற்கான நடைமுறைகள் மற்றும் இரு தரப்பினருக்கும் இடையிலான உறவை ஒழுங்குபடுத்துவதற்கு அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்ட மற்ற தரவுகள்.

4. ஒப்பந்த நகலை எப்போதும் வைத்திருங்கள்:

UAE தொழிலாளர் சட்டத்தின்படி, ஒரு ஊழியர் அவர் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தின் நகலை வைத்திருக்க உரிமை உண்டு. ஆனால், கையொப்பமிட்ட பிறகு உங்கள் ஒப்பந்தத்தின் நகலை மனிதவளத் துறையிலிருந்து பெறவில்லை என்றால், MOHRE இணையதளம் – mohre.gov.ae மூலம் ஆன்லைனில் சரிபார்க்கும் வசதியும் உள்ளது. அத்துடன் முதலாளியுடன் ஏதேனும் நிச்சயமற்ற தன்மை அல்லது தவறான புரிதல் இருந்தால், உங்கள் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யவும் இது அனுமதிக்கும். அதுமட்டுமில்லாமல், முதலாளியுடனான எந்தவொரு சட்டப்பூர்வ தகராறையும் தடுக்கவும் மற்றும் சட்டச் சிக்கல்கள் ஏதுமின்றி வேலையை விட்டு வெளியேறவும் இது உதவும்.

5. புரோபேசன் காலம் (Probation period) எப்போது முடிவடையும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்:

பொதுவாக நிறுவன முதலாளி, பணியிடத்தில் அமர்த்தப்படும் ஊழியரின் செயல்திறனை மதிப்பிட்டு பின்னர் வெற்றிகரமாகச் சென்றால், அவரை முழுநேர அடிப்படையில் பணியமர்த்துவார். அதுபோல, UAE தொழிலாளர் சட்டத்தின்படி, புரோபேசன் காலம் ஆறு மாதங்களுக்கு மேல் இருக்கக்கூடாது, மேலும் இதனை நீட்டிக்கவும் முடியாது.

மேலும், முழுநேர ஊழியர்களுடன் ஒப்பிடும்போது புரோபேசன் ஊழியர்களுக்கு அதே உரிமைகள் மற்றும் சலுகைகள் இல்லை. எடுத்துக்காட்டாக, புரோபேசன் நிலையில் உள்ள பணியாளர்கள் வேலையை விட்டு வெளியேறினால், சேவையின் இறுதிப் பலன்களைப் பெறுவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை. அதேசமயம், புரோபேசன் நிலையில் உள்ள ஒரு ஊழியர் ராஜினாமா செய்தால், சில சூழ்நிலைகளில் ஆட்சேர்ப்புச் செலவை (visa cost) அவர்கள் செலுத்த வேண்டியிருக்கும்.

6. சம்பளப் பிரிவைப் புரிந்து கொள்ளுங்கள்:

ஊழியர் பெறக்கூடிய அடிப்படை சம்பளத்திற்கும் மொத்த சம்பளத்திற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது சிறந்தது. அதாவது மொத்தச் சம்பளம் என்பது, ஊழியரின் அடிப்படை சம்பளம் மற்றும் வீடு, காப்பீடு மற்றும் போக்குவரத்து போன்ற பிற கொடுப்பனவுகள் (allowance) அடங்கியது. ஆனால், அடிப்படைச் சம்பளமானது, இறுதிச் சேவைப் பலன்கள், வருடாந்திர விடுப்பு ஊதியம் மற்றும் ஓவர்டைம் வேலைக்கான ஊதியம் போன்றவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றது. இவை மொத்தச் சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்படாது.

7. புரோபேசன் நிலையில் உள்ள பணியாளர்களுக்கான விடுமுறை:

புரோபேசன் நிலையில் உள்ள ஊழியர்கள், எதிர்பாராதவிதமாகவோ அல்லது அவசரநிலையிலோ வேலையிலிருந்து சில நாட்கள் விடுமுறை எடுக்க வேண்டியிருந்தால், ஊதியம் இல்லாத விடுப்புக்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், தொழிலாளர் சட்டத்தின் பிரிவு 29 இன் படி, விடுப்புக்கான கோரிக்கை அவர்களது முதலாளியால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!