அமீரக செய்திகள்

அபுதாபி பிக் டிக்கெட்டில் 15 மில்லியன் திர்ஹம்களை வென்ற இந்தியர்..!! இரண்டு மாத தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி எனவும் தகவல்..!!

ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 30 ரேஃபிள் டிக்கெட்டுகளை வாங்கிய உம் அல் குவைன் மற்றும் துபாயைச் சேர்ந்த 20 பேர் கொண்ட நண்பர்கள் குழு, அபுதாபியில் நடைபெற்ற பிக் டிக்கெட்டின் ரேஃபிள் டிரா தொடர் 253 இல் 15 மில்லியன் திர்ஹம் கிராண்ட் பரிசை வென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

உம் அல் குவைனில் பணிபுரியும் நிஹால் பரம்பத் என்பவர், 061908 என்ற டிக்கெட்டை முகமது அலி மொய்தீன் என்ற தனது 56 வயது மாமனாரின் பெயரில் வாங்கியுள்ளார். சுமார் முப்பது வருடங்களுக்கும் மேலாக உம் அல் குவைனில் வசித்து வரும் மொய்தீன், குறுகிய விடுமுறையில் கேரளாவுக்கு செல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அபுதாபி பிக் டிக்கெட்டில் இருந்து அழைப்பு வரலாம் என்ற நம்பிக்கையில் தனது போனை நிஹாலிடம் கொடுத்து விட்டுச் சென்றுள்ளார். அவரின் அந்த எதிர்பார்ப்பு தற்போது உண்மையாகவே நடந்து விட்டதை எண்ணி அவர் பூரிப்படைதுள்ளார்.

இது குறித்து பரம்பத் கூறுகையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு டிக்கெட்டுகளை வாங்கவும் பணம் திரட்டவும் நண்பர்கள் குழு ஒன்றில் சேர்ந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானோர் சேல்ஸ், PRO மற்றும் மேனேஜர் போன்ற வேலைகளில் பணிபுரிவதாகவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிதிச் சிக்கல்கள் இருப்பதால், அனைவரும் பணத்தைப் பகிர்ந்து டிக்கெட் வாங்குவதால் அனைவருக்கும் அவர்களின் நிதி சிக்கல்களை கையாள எளிமையாக இருப்பதுடன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம் என்றும் அவர்கள் திட்டமிட்டதாக கூறியுள்ளார்.

எனவே, வெல்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க, குழுவில் உள்ள அனைவரும் கடந்த இரண்டு மாதங்களில் வெவ்வேறு டிராக்களுக்கு சராசரியாக 25 முதல் 30 டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். இறுதியாக கடந்த மாதம் வாங்கிய பிக் டிக்கெட்டின் மூலம் அவர்கள் அனைவரின் கனவும் தற்போது நிஜமாவிட்டது.

இந்த வெற்றியை அறிவிக்க நேரலை நிகழ்ச்சியில் இருந்து தொகுப்பாளர்கள் நிஹாலை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். ஆனால், அவர் நண்பர்கள் யாரோ லைவ் டிராவில் கலந்து கொண்டு கேலி செய்கிறார்கள் என்று அழைப்பை துண்டித்துள்ளார்.

இறுதியாக, ரேஃபிள் டிராவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் சமூக ஊடக தளங்களைச் சரிபார்த்த பின்னரே நிஹால் பரம்பத், அவரது வெற்றியை நம்பத் தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஈத் அல் அதாவைக் கொண்டாட தனது குடும்பம் அமீரகத்தில் ஒன்றாக இருப்பதாகவும், கேரளா சென்றுள்ள அவரது மாமனார் அவர்களின் 15 மில்லியன் திர்ஹம்களுக்கான காசோலையைப் பெற்றுக்கொள்ள ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெறும் டிராவில் கலந்து கொள்ள வருவார் என்றும் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!