அமீரக செய்திகள்

UAE: விதிகளை மீறி அதிவேகமாக வாகனம் ஓட்டினால் 3,000 திர்ஹம் வரை அபராதம்..!! 23 ப்ளாக் பாய்ண்ட்ஸ்..!! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அபுதாபி காவல்துறை….!!

அபுதாபியில் சாலைகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வேக வரம்புகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு 300 முதல் 3,000 திர்ஹம்கள் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன் 23 பிளாக் பாயிண்ட்கள் சேர்க்கப்படும் என்று அபுதாபி காவல்துறை எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், சாலைகளில் உள்ள பலகைகள் காண்பிக்கும் ஓட்டுநர் விதிகள் மற்றும் வேக வரம்புகளை கடைபிடிக்குமாறும் வாகன ஓட்டிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, வாகன ஓட்டிகள் வேக வரம்பை மணிக்கு 20 கிமீ வரை மீறினால் 300 திர்ஹமும், 30 கிமீ / மணி வரை வேக வரம்பை மீறினால் 600 திர்ஹமும், 40 கிமீ / மணி வரை வேக வரம்பை மீறினால் 700 திர்ஹமும் மற்றும் 50 கிமீ / மணி வரை வேக வரம்பை மீறுவதற்கு 1,000 திர்ஹமும் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

அதுபோல, வேக வரம்பை மணிக்கு 60 கிமீ வரை மீறினால் 1,500 திர்ஹம் மற்றும் 6 பிளாக் பாயின்ட்கள், 70 கிமீ / மணி வரை வேக வரம்பை மீறினால் 12 பிளாக் பாயிண்ட்கள் மற்றும் 3,000 திர்ஹம்கள் மற்றும் மணிக்கு 80 கிமீ வேகத்தில் சென்றால் 23 பிளாக் பாயிண்ட்கள் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

அதேசமயம், சாலைக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச வேகத்தை விட குறைவான வேகத்தில் வாகனத்தை ஓட்டினாலும் 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு பெரும் பொறுப்பு உள்ளது என்பதை அவர்கள் நினைவூட்டியுள்ளனர்.

அபுதாபியானது அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் டெயில்கேட்டிங் விதிமீறல்கள் உட்பட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிவதற்கு ஸ்மார்ட் சிஸ்டம் மற்றும் நவீன ரேடார்களைப் பயன்படுத்தப்படுகிறது.

கடைசியாக மே 1 அன்று, எச்சரிக்கைக் காலம் முடிவடைந்ததை அடுத்து, ஷேக் முகமது பின் ரஷீத் சாலையின் இரு திசைகளிலும் உள்ள எக்ஸ்பிரஸ் பாதைகளில் குறைந்தபட்ச வேகத்தை கடைபிடிக்காமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் அபராதம் விதிக்க அபுதாபி காவல்துறை தொடங்கி விட்டது.

இதனால், இடதுபுறத்தில் இருந்து முதல் மற்றும் இரண்டாவது பாதைகளில் அதிகபட்ச வேகம் மணிக்கு 140 கிமீ ஆகவும், குறைந்தபட்ச வேகம் மணிக்கு 120 கிமீ ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. எனவே, மணிக்கு 120 கிமீக்கும் குறைவான வேகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் சாலையைப் பயன்படுத்துபவர்களுக்கு 400 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

Related Articles

Back to top button
error: Content is protected !!