அமீரக செய்திகள்

UAE: 4,172 வாகனங்களை பறிமுதல் செய்த துபாய் போலீஸ்..!! போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்…

இந்தாண்டின் முதல் பாதியில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக சுமார் 4,172 வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை துபாய் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. வாகனங்களில் என்ஜின் வேகத்தை அதிகரிக்க பவர் பூஸ்டர்கள் கொண்டு கார்களை பெரிதும் மாற்றியமைப்பது மற்றும் தொழில்நுட்ப தேவைகளுக்கு இணங்காமல் இ-ஸ்கூட்டர்கள் மற்றும் சைக்கிள்களை ஓட்டுவது ஆகியவை பறிமுதல் செய்த வாகனங்களின் பொதுவான போக்குவரத்து மீறல்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் துபாயில் சைக்கிள்களைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்தும் 2022 ஆம் ஆண்டின் நிர்வாக கவுன்சில் தீர்மானம் எண் (13) இன் படி, மீறல்களில் ஈடுபட்ட 8,786 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் சைக்கிள்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

துபாய் காவல்துறையின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல்லா கலீஃபா அல் மர்ரி அவர்களின் தலைமையில் நடைபெற்ற பொது போக்குவரத்துத் துறைக்கான செயல்திறன் ஆய்வுக் கூட்டத்தின் போது இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

ஆய்வுக் கூட்டத்தில் லெப்டினன்ட் ஜெனரல் அல் மரி பேசிய போது, 100,000 மக்கள்தொகைக்கு போக்குவரத்து இறப்பு விகிதத்தை குறைக்கும் இலக்குகளுக்கு ஏற்ப, சாலைகளில் பொது பாதுகாப்பை மேம்படுத்துவதில் போக்குவரத்து பொதுத் துறையின் முக்கிய பங்கை வலியுறுத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் காவல் நிலையங்கள் மற்றும் பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் மூலோபாய பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றுவது மற்றும் குடியிருப்பாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்றவற்றில் போக்குவரத்து பொதுத் துறையின் கூட்டு முயற்சிகளையும் அவர் எடுத்துரைத்த்துள்ளார்.

அதேவேளை, எமிரேட்டில் ஏற்படும் கடுமையான மற்றும் ஆபத்தான போக்குவரத்து விபத்துக்கள், விபத்துகளின் வகைகள் மற்றும் அவற்றின் காரணங்கள் மற்றும் மிகவும் பொதுவாக செய்யப்படும் மீறல்கள் உள்ளிட்ட துறையின் செயல்திறன் முடிவுகளை அவர் மதிப்பாய்வு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், செயல்பாட்டு விவகாரங்களுக்கான உதவித் தளபதி மேஜர் ஜெனரல் அப்துல்லா அலி அல் கைதி, பிரிகேடியர் ஜுமா பின் சுவைதான், பிரிகேடியர் டாக்டர் சலே அல் ஹம்ரானி மற்றும் பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!