அமீரக செய்திகள்

UAE: பாதசாரியை விபத்துக்குள்ளாக்கி விட்டு தப்பிச்சென்ற ஆசிய ஓட்டுநர்..!! மூன்று மணிநேரத்திற்குள் மடக்கி பிடித்த துபாய் போலீஸ்…!!

துபாயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, சாலையில் சென்று கொண்டிருந்த பாதசாரியை விபத்துக்குள்ளாக்கி விட்டு, சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற 24 வயது ஆசிய ஓட்டுநரை, துபாய் காவல் துறையினர் மூன்று மணி நேரத்திற்குள் மடக்கிப் பிடித்துள்ளனர். இது அவர்களின் அபாரமான செயல்திறனை பிரதிபலிக்கிறது.

இச்சம்பவத்தின் போது சாலையில் சென்று கொண்டிருந்த 27 வயது ஆசிய இளைஞருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், காயமடைந்த இளைஞர் உடனடியாக ரஷித் மருத்துவமனைக்கு அவசர மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியில் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியிருக்கிறார். இது குறித்து பர் துபாய் காவல் நிலையத்தின் செயல் இயக்குநர் கர்னல் அப்தெல் மொனிம் அப்தெல் ரஹ்மான் முஹம்மது அவர்கள் கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10:00 மணியளவில் சம்பவம் குறித்து கமாண்ட் மற்றும் கன்ட்ரோல் அறைக்கு தகவல் கிடைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அல் கூஸ் தொழில்துறை பகுதியில், ஒரு இளைஞருக்கு கடுமையான காயங்கள் ஏற்படும் அளவு விபத்தை ஏற்படுத்தி விட்டு, வாகன ஓட்டி  தப்பிச்சென்று விட்டதாக தகவல் கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நிலைமையை மதிப்பிட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், ஆசிய இளைஞர் ஒரு பக்கத் தெருவைக் கடக்கும்போது, ​​வாகனம் மோதியதில், பலத்த காயங்களுக்கு ஆளானதும், டிரைவர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியதும் தெரிய வந்துள்ளது.

அதன்பிறகு, ஒரு மணி நேரத்திற்குள் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை டிரைவர் கைவிட்டுச் சென்றிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து தீவிரமாக தேடியதில், டிரைவர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற போது 3 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதசாரிகள் கடப்பதற்கென நியமிக்கப்பட்ட பகுதிகளில், அவர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் பொறுப்பற்ற முறையில் கடப்பது, பாதசாரிகளுக்கு விபத்துக்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று என்று அவர் கூறியுள்ளார்.

அமீரக போக்குவரத்துச் சட்டத்தின் படி, பாதசாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கத் தவறுதல் மற்றும் விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பிச் செல்லுதல் இரண்டும் கிரிமினல் குற்றங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!