அமீரக செய்திகள்

துபாய் போலீஸின் நெகிழ்ச்சியான செயல்.. மகனை நினைத்து சிறையில் ஏங்கிய கைதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அதிகாரிகள்..!!

துபாயின் சிறைச்சாலையில் தனது மகனை நினைத்து ஏங்கிய சிறைக்கைதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, அவரின் மகனை அழைத்து வந்து தந்தை மகன் இருவரையும் நேரில் சந்திக்க உதவிபுரிந்துள்ளனர் துபாய் காவல்துறையினர். துபாய் காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு சிறைக்கைதி மகிழ்ச்சி பொங்க நன்றி தெரிவித்துள்ளார்.

சிறையில் ஆய்வு நடவடிக்கைகளின் போது, அந்த கைதி எப்போதும் தனது மகனின் படங்களை வரைவதைக் கவனித்த தண்டனை மற்றும் சீர்திருத்த நிறுவனங்களின் (Punitive and Correctional Institutions) பொதுத்துறை அதிகாரிகள் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிகழ்வு நடந்த நாள் அன்று கைதிக்கு திடீரென ஒரு பார்வையாளர் வந்திருப்பதாக காவலர் தெரிவித்துள்ளார். அவரைப் பார்க்க பொதுவாக யாரும் இல்லாததால், காவலர் கூறியதைக் கேட்டு அவர் ஒரு கணம் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதனையடுத்து, அவரைப் பார்ப்பதற்காக வந்திருந்த மகனைப் பார்த்ததும் திகைத்துப் போன கைதியின் கண்களில் நிற்காமல் கண்ணீர் வந்ததாக கூறப்படுகின்றது. பின் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டு தங்களின் பாசத்தையும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த தருணத்தை நேரில் பார்த்த தண்டனை மற்றும் சீர்திருத்த நிறுவனங்களின் பொதுத் துறையின் இயக்குனர் பிரிகேடியர் மர்வான் ஜல்பர் அவர்கள், “இருவரின் சந்திப்பு நம்ப முடியாத மற்றும் இதயத்திற்கு இதமான தருணம்” என்று கூறியுள்ளார்.

மேலும், இத்துறையின் கல்வி மற்றும் தொழிற்கல்வி திட்டங்களின் ஒரு பகுதியாக எப்படி வரைய வேண்டும் என்பதை கைதி சிறையிலேயே கற்றுக் கொண்டதாகவும், தன் மகனுக்கான ஏக்கத்தை அவர் அடிக்கடி ஓவியம் மூலம் வெளிப்படுத்தியதாகவும் பிரிகேடியர் ஜல்ஃபர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், தந்தை-மகன் இருவரும் இதற்கு முன்பு ஆன்லைன் மூலம் சந்தித்ததாகவும், நேரில் சந்திப்பது இதுவே முதல் தடவை எனவும் கூறியுள்ளனர். துபாயில் சிறைக்கைதிகள் தங்கள் தண்டனையை அனுபவிக்கும் போது, அவர்களின் அனுபவங்களை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட மனிதாபிமான உதவியான ‘Inmate Happiness’ என்ற முன்முயற்சியின் மூலம், இவர்களின் சந்திப்பு சாத்தியமானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!