அமீரக செய்திகள்

கன மழை, கடும் புயல், சாலைகளில் விழுந்த மரங்கள், வாகனம் மீது விழுந்த சைன்போர்டு.. அமீரகத்தில் நிலவும் மோசமான வானிலை..!!

அமீரகத்தில் ஓரிரு இடங்களில் கடந்த சில மாதங்களாகவே வெயில் கொளுத்திய நிலையில் தற்பொழுது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அமீரகத்தில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தபோதும், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மூன்றாவது நாளாக நாட்டின் சில பகுதிகளில் பலத்தமழை மற்றும் ஆலங்கட்டி மழை பதிவாகியுள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்களில், ராஸ் அல் கைமா, அல் அய்ன் மற்றும் மிலிஹா ஆகிய இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், அதிவேகத்தில் வீசும் காற்றால் மரங்கள் அபாயகரமான முறையில் அசைவதையும் அந்த வீடியோவில் காணலாம்.

சில காட்சிகளில் கார்கள் மீது சைன்போஸ்ட்கள் மற்றும் கிளைகள் விழுந்திருப்பதையும் காணலாம். அதில் அபுதாபியின் அல் ஹயாரில் பெய்த கனமழையால் சாலையில் நின்று கொண்டிருந்த கார் மீது வேகத்தை காட்டும் சைன்போர்டு விழுந்த சம்பவம் புகைப்படங்களில் வெளியாகியுள்ளது.


இந்நிலையில், துபாயில் வானிலை மாற்றத்தால் சனிக்கிழமையன்று பெய்த கனமழையில்  ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தது உட்பட 100 க்கும் மேற்பட்ட அவசர அறிக்கைகளை துபாய் முனிசிபாலிட்டி பெற்றுள்ளது. அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை, புழுதிப் புயல் மற்றும் ஆலங்கட்டி மழை என நிலையற்ற வானிலை நிலவியதால், இதுபோன்ற சேதங்கள் ஏற்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் முனிசிபாலிட்டி வானிலை முன்னறிவிப்பைத் தொடர்ந்து, விரைவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மீட்பு குழுக்களை தயார் நிலையில் துபாய் வைத்திருந்தது. இதனால் மழை நின்றதும், துபாய் முழுவதும் அவசர அழைப்புகளுக்கு குழுவினர் விரைந்து செயலாற்ற தொடங்கினர்.

 

துபாய் முனிசிபாலிட்டி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, துபாயின் சுற்றுப்புறங்களில் மற்றும் உள் சாலைகளில் 69 மரங்கள் விழுந்ததாகவும், துபாய் பிரதான சாலைகளில் 16 மரங்கள் விழுந்ததாகவும் புகாரளிக்கப்பட்டுள்ளன. அதேசமயம், மழைநீர் குளத்தை தூர்வாரக் கோரி 18 புகார்கள் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வானிலை தொடர்பான சேதங்கள் மற்றும் அவசரநிலைகள் இருந்தால், முதன்மை அவசர எண்ணான 800900 ஐ அழைக்குமாறு துபாய் முனிசிபாலிட்டி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், மோசமான வானிலை இந்த வாரம் முழுவதும் குறிப்பாக ஆகஸ்ட் 8, செவ்வாய் கிழமை வரை தொடரக்கூடும் என்பதால், அமீரக குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வாகன ஓட்டிகள் வாடிகளை விட்டு விலகி இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!