அமீரக செய்திகள்

UAE: 1 மில்லியன் திர்ஹம்ஸிற்கு மேல் ஏலம் போன அரியவகை ஃபால்கன் பறவை.. அபுதாபியில் மீண்டும் களைகட்டவுள்ள சர்வதேச ADIHEX கண்காட்சி!

அபுதாபியில் நடைபெறும் ADIHEX எனப்படும் சர்வதேச கண்காட்சி மிகவும் புகழ் பெற்றதாகும். இந்த ஏலத்தில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற விலங்குகள் மற்றும் பறவைகள் ஆகியவை காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும். அதில் ஆர்வமுள்ள மக்கள், குறிப்பிட்ட விலங்குகள் மற்றும் பறவைகளை ஏலத்திற்கு எடுக்கலாம்.

கடந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சி மகத்தான வெற்றி பெற்ற நிலையில், இந்த ஆண்டு அபுதாபியில் நடக்கவிருக்கும் கண்காட்சியில் அமீரகத்தின் தேசிய பறவையான ஃபால்கன் வாங்குவதற்கான ஏலம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் ஒரு அரிய வகையான ப்யூர் கைர் அல்ட்ரா-ஒயிட் ரக அமெரிக்க ஃபால்கன் 1 மில்லியன் திர்ஹம்ஸிற்கும் மேல் ஏலம் எடுக்கப்பட்டது. அபுதாபி ADIHEX கண்காட்சி வரலாற்றில் இதுவரை அதிகமாக ஏலத்திற்கு எடுக்கப்பட்ட ஃபால்கன் இதுவேயாகும். இந்நிகழ்வானது இந்த ஆண்டு கண்காட்சி மக்களிடையே உற்சாகத்தையும் ஃபால்கன் பறவைக்கான ஏலம் குறித்த பரபரப்பையும் கண்காட்சியாளர்களிடையே உருவாக்கியுள்ளது.

அபுதாபி நேஷனல் எக்சிபிஷன் சென்டரில் (ADNEC) நடைபெறவிருக்கும் ஏழு நாள் கண்காட்சி செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்கவிருக்கும் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் தற்பொழுது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

வரவிருக்கும் ஏலத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்ட ப்யூர் கிர், ப்யூர் கிர் ஆண் மற்றும் ப்யூர் சேகர் ஆகிய மூன்று சிறைப்பிடிக்கப்பட்ட ஃபால்கன்களுக்கு தனியாக ஆறு பிரிவுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அரிய வகை பருந்துகள் மற்றும் ஃபால்கன்களை ஏலத்தில் எடுக்க பருந்து ஆர்வலர்கள் ஆவலாக உள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வளைகுடா நாடுகளை சேர்ந்தவர்கள் இதற்கு முன்னர் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள தனியார் பண்ணைகளில் இருந்து ஃபால்கன் பறவைகளை வாங்க வெளிநாடு சென்றனர். ஆனால் அபுதாபியில் நடைபெறும் இந்த கண்காட்சியானது உலகின் சிறந்த பருந்து வளர்ப்பு பண்ணைகளில் இருந்து சிறந்த ஃபால்கன்களை வாங்கவும், விற்கவும் சிறந்த சர்வதேச தளத்தை வழங்குகிறது.

இந்த ஏலமானது, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பருந்து வளர்ப்பு பண்ணைகளின் உரிமையாளர்கள், வர்த்தகர்கள், ஃபால்கனர்கள், பால்கன்ரி துறையில் ஆர்வமுள்ள வணிகர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஆகியோரை திருப்திபடுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!