அமீரக செய்திகள்

அமீரகத்தில் நீங்கள் சமூக ஊடகங்களில் செய்யும் 5 பொதுவான தவறுகளுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்..!! கவனம் தேவை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் சைபர் கிரைம் சட்டத்தின் படி, சமூக ஊடகங்களில் நீங்கள் செய்யும் 5 பொதுவான தவறுகளுக்கு சிறை அல்லது அபராதம் விதிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதுபோன்ற சட்டரீதியான விளைவுகளைத் தவிர்க்க, சமூக ஊடக பயனர்கள், தனிநபர்கள் மற்றும் வணிகங்கள்,அவர்களின் ஆன்லைன் செயல்பாடுகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஆகவே, நாட்டில் ஒவ்வொரு ஆன்லைன் பயனரும் சமூக ஊடக விதிகளைப் பின்பற்றுவது அவர்களின் பொறுப்பாகும். அத்தகைய சமூக ஊடக விதிகள் என்றால் என்ன? அமீரகத்தின் சைபர் கிரைம் சட்டங்கள் கூறும் விதிகள் என்ன? என்பதை இங்கு பார்க்கலாம்.

சமூக ஊடக விதிகள் என்றால் என்ன?

வதந்திகள் மற்றும் சைபர் கிரைம்களை எதிர்த்துப் போராடுவதற்கான 2021 இன் ஃபெடரல் ஆணை எண். 34இல் கூறப்படும் சமூக ஊடக விதிகள், பாதுகாப்பான, மரியாதைக்குரிய மற்றும் பொறுப்பான ஆன்லைன் சமூகத்தை உருவாக்குவதில் அமீரகத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன. ஆகவே, சமூக ஊடகப் பயனர்கள் அமீரக சட்டத்திற்கு உட்பட்டு அவற்றைப் பின்பற்றுவது கட்டாயமாகும்.

5 பொதுவான சமூக ஊடக விதி மீறல்கள்:

UAE சைபர் கிரைம் சட்டம் கடுமையான குற்றங்கள் முதல் மக்களை அவமதிப்பது போன்ற சிறிய குற்றங்கள் வரை பரந்த அளவிலான குற்றங்களை உள்ளடக்கியது. இந்த சட்டத்தில் ஹேக்கிங் போன்ற ஆன்லைனில் செய்யப்படும் குற்றங்களும், ஆஃப்லைன் வழியாக மோசடி அல்லது அவதூறு செய்வது போன்ற குற்றங்களும் அடங்கும்.

பொதுவாக சமூக ஊடகம் மக்களுக்குப் பரந்தளவிலான இடத்தைக் கொடுக்கிறது, ஆனால், பயனர்கள் துரதிர்ஷ்டவசமாக, ஆன்லைனில் இனவெறி, கெட்ட வார்த்தைகள், அவமதித்தல், வதந்திகளை பரப்புதல் என துஷ்பிரயோகம் செய்கின்றனர். ஆகவே, இது போன்ற துஷ்பிரயோக நடத்தைகளை ஆன்லைனில் மேற்கொள்பவர்களுக்கு கடும் அபராதங்கள் விதிக்கப்படும்.

1. வெறுப்பு பேச்சு, அவமதிப்பு அல்லது அவதூறு:

தனிநபர் ஒருவர் சமூக ஊடகங்களில் இனம், மதம், பாலினம், தேசியம் அல்லது பிற இனம், மதம், பாலினம் அல்லது வேறு எந்தப் பண்புகளின் அடிப்படையிலும் வெறுப்பை ஊக்குவிக்கும் அல்லது வன்முறையைத் தூண்டும் வகையிலான வீடியோ, புகைப்படம் அல்லது உள்ளடக்கத்தை வெளியிடுவது அல்லது பகிர்வது அமீரகத்தில் கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதில் வெளிப்படையான அச்சுறுத்தல்கள், இழிவான அவதூறுகள் அல்லது எரிச்சலூட்டும் கருத்துக்களும் அடங்கும்.

மேலும், சைபர் கிரைம் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள மற்றொரு குற்றம் பிறரை புண்படுத்தும் வகையில் திட்டுவது. ஆம், நீங்கள் மற்றொரு நபரின் மதத்தை அவமதிக்கும் வகையில் எதையும் கூறக்கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் சுப்ரீம் கோர்ட் இந்த குற்றங்களைச் செய்ததற்காக தண்டித்த முந்தைய நிகழ்வுகள் உள்ளன.

அதுபோல, வெளி நாடுகளுக்கு எதிராக தரக்குறைவான கருத்துக்களை வெளியிடுதல், உலகில் உள்ள எந்த நாட்டையும் புண்படுத்தும் அல்லது அவமதிக்கும் வகையில் எந்தவொரு தகவலையும் ஆன்லைனில் பகிர்தல் போன்ற குற்றங்களுக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை மற்றும் 100,000 முதல் 500,000 திர்ஹம் வரை அல்லது இந்த இரண்டு அபராதங்களில் ஒன்றை அனுபவிக்க நேரிடும்.

2. தனியுரிமையை மீறுதல் – அனுமதியின்றி ஒருவரின் படத்தை எடுத்தல்:

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் செய்யும் பொதுவான தவறு, பொது இடத்தில் இருக்கும்போது மற்றவர்களின் அனுமதியின்றி வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பது. இது அவர்களின் தனியுரிமைக்கான உரிமையை ஆக்கிரமிப்பதாகக் கருதப்படுகிறது.

உதாரணமாக, சிலர் உணவகம் அல்லது மாலில் இருந்தால், யாருடைய வீடியோவையும் எடுக்கலாம் என்று சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். மற்றவர்களின் தனியுரிமையை மீறுதல் என்பது அபராதம் மற்றும் சிறைத்தண்டனைக்குரிய குற்றம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

3. வதந்திகளைப் பரப்புதல்:

பலரும் அறிந்திராத மற்றொரு மீறல், ஒரு தகவல் உண்மையானதா அல்லது பொய்யானதா என்பதை முழுமையாக ஆராயாமல் அவற்றை ஆன்லைனில் பகிர்வது. அதாவது, ஒரு பொய்யான தகவலைப் பெற்று அதை இரண்டு குழுக்களுக்கு அனுப்பினால், அது நூறு பேரை சென்றடையும், எனவே இந்த செய்தியைப் பகிர்வதன் மூலம் நீங்கள் குற்றவாளியாகக் கருதப்படுவீர்கள்.

ஒரு சில வதந்திகள் அவற்றின் பின்னால் தீங்கிழைக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், மற்ற வதந்திகள் வெறுப்பையும் வன்முறையையும் தூண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

4. பணித் தொடர்பான முக்கிய தகவலை வெளியிடுதல்:

நீங்கள் வங்கி அல்லது காப்பீட்டு நிறுவனம் போன்ற தனிப்பட்ட தகவல்களை அணுகக்கூடிய ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தால், அத்தகைய ரகசியத் தகவலைப் பகிரங்கப்படுத்தினால், அது குற்றமாக கருதப்படும். எடுத்துக்காட்டாக, ரகசியத் தகவலைக் கொண்ட ஆவணம் மற்றும் அதன் புகைப்படத்தை ஆன்லைன் தளத்தில் பகிர்ந்தால் சட்ட விரோதமாகும்.

5. மருத்துவப் பொருட்களை விளம்பரம் செய்தல்:

ஐக்கிய அரபு அமீரகத்தின் சைபர் கிரைம் சட்டத்தின் பிரிவு 49இன் படி, நீங்கள் எந்த அனுமதியும் இல்லாமல் மருந்துகள் அல்லது கிரீம்களை விளம்பரப்படுத்த முடியாது. சமூக ஊடகங்களில் சில சமயங்களில் ‘மிகவும் நன்றாக இருக்கிறது, முயற்சி செய்து பாருங்கள்’ என்று மெடிக்கல் க்ரீமை விளம்பரப்படுத்தும் பதிவுகளைப் பார்த்திருப்பீர்கள். இதுவும் ஒரு கிரிமினல் குற்றமாகும், இது மிகவும் பொதுவான தவறுகளில் ஒன்றாகும். இதற்கு சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

Related Articles

Back to top button
error: Content is protected !!