அமீரக செய்திகள்

அமீரகத்தில் இன்று வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழையுடன் கூடிய கனமழை.!! மழை பெய்யும் வீடியோக்களைப் பகிர்ந்த NCM….

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (வியாழன்) பிற்பகல் சில பகுதிகளில் கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ததால், வானிலை அதிகாரிகள் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகளை அறிவித்துள்ளனர்.

குறிப்பாக, ஷார்ஜாவில் அல் மடம் நோக்கிச் செல்லும் ஷேக் கலீஃபா பின் சையத் சாலையில் மாலை 4.30 மணியளவில் ஆலங்கட்டி மழை வெளுத்து வாங்கியுள்ளது. மேலும், அமீரகத்தின் அல் ருவைதா, அல் ஃபயா மற்றும் அல் பஹாய்ஸ் பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலங்கட்டிகள் சரமாரியாக சாலைகள் மற்றும் அல் மடத்தில் உள்ள பாலைவனப் பகுதிகளில் சிதறும் வீடியோ கிளிப் ஒன்றினை ஸ்டார்ம் சென்டர் Xஇல் (முந்தைய Twitter) பகிர்ந்துள்ளது. அதுபோல NCM, அதே பகுதியில் பெய்த மழையில் வாகனங்கள் செல்லும் வீடியோ கிளிப்களைப் பகிர்ந்துள்ளது. அத்துடன் அபாயகரமான வானிலை நிகழ்வுகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளது.

இந்நிலையில், துபாயை ஒட்டியுள்ள ஷார்ஜாவின் சில பகுதிகளுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இன்று பிற்பகல் 3.15 முதல் இரவு 8 மணி வரை வெளியே செல்லும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு குடியிருப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அதேசமயம், மாலை 5 மணியளவில் அல் அய்னின் ஒரு பகுதியிலும் மிதமான மழை பெய்ததாக வானிலைத் துறை தெரிவித்துள்ளது. அல் அய்னின் வடக்கே அல் ஷுவைப்பில் மழையின் போது எடுக்கப்பட்ட வீடியோவையும் ஸ்டார்ம் சென்டர் Xஇல் பகிர்ந்துள்ளது.

ஆகவே, அமீரகத்தில் ஆங்காங்கே பரவலான மழைப் பதிவாகி வருவதால், சாலைகளில் கூடுதல் கவனமாக இருக்குமாறு வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி, மோசமான வானிலையால் சாலைகளில் தெரிவுநிலை குறைவாக இருக்கும் என்பதால், வாகனங்களின் ஹெட்லைட்கள் இயக்கப்பட வேண்டும் என்றும், அதிகாரிகளின் சமீபத்திய அறிவிப்புகள் மற்றும் ஆலோசனைகளுடன் வாகன ஓட்டிகள் அப்டேட்டாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், போலியான ஆதாரங்களில் இருந்து பரப்பப்படும் வதந்திகளை புறக்கணித்து, உத்தியோகபூர்வ தகவல் ஆதாரங்களை மட்டுமே பின்தொடருமாரும் அனைவருக்கும் NCM அழைப்பு விடுத்துள்ளது.

கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் கீழே வரைபடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது:

Related Articles

Back to top button
error: Content is protected !!